இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (28.03.2021) நடைபெற்றது. இறுதி ஓவர் வரை, பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்ற இந்தப் போட்டியை இந்தியா வென்றதோடு, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன், இறுதிவரை போராடி 95 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சாம் கரனின் அபார ஆட்டம் வெற்றிக்கு உதவவில்லையென்றாலும், அவரது ஆட்டத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர், சாம் கரனிடம் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாயல் இருப்பதாக புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இன்றைய ஆட்டம் குறித்து, சாம் கரன் தோனியிடம் பேச விரும்புவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோனி அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால் எப்படி இறுதிவரை ஆட்டத்தைக் கொண்டு சென்றிருப்பாரோ, அதேபோன்ற சாயல் சாம் கரனின் ஆட்டத்தில் இருந்தது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சாம் கரன் உரையாடுவதற்கு தோனி ஒரு சிறந்த மனிதராக இருப்பார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “தோனி எப்படிப்பட்ட அற்புதமான கிரிக்கெட்டர், ஃபினிஷர் என்பது நமக்குத் தெரியும். விளையாட்டில் தோனி போன்ற வீரருடன் ஓய்வறையைப் பகிர்ந்துகொள்வது எங்கள் வீரர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவம். அவர்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறியுள்ளார்.