இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் (04.03.2021) தொடங்கியது. உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி இந்தப் போட்டியை வெல்லவோ, ட்ரா செய்யவோ வேண்டும். இதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதற்குப் பிறகு, ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் ரோகித், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஆட்டத்தால் முன்னிலை பெற்றது. முதலில் பொறுமையாக ஆடி, பிறகு அதிரடி காட்டிய ரிஷப் பந்த் சதமடித்து (101 ரன்கள்) ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 60 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 294 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றிருந்தது.
இந்தநிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (06 மார்ச்) தொடங்கியது. வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஜோடி சிறப்பாக ஆடி 106 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அக்ஸர் படேல் 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த இஷாந்த் சர்மாவும், சிராஜூம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் இன்னிங்ஸ் 365 ரன்களோடு முடிவுக்கு வந்தது. இதனால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் அதனைத் தவறவிட்டார். 96 ரன்களில் அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது.