இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றநிலையில், மூன்றாவது போட்டி, பகலிரவு ஆட்டமாக இன்று (24.02.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களோடும், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களோடும் களமிறங்கியது. இங்கிலாந்து அணியோ, பிங்க் நிறப் பந்து, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமென கருதி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸோடு 4 வேகப்பந்து வீச்சாளர்களோடும், ஒரே ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளரோடும் களமிறங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
போட்டி தொடங்கியது முதலே, இங்கிலாந்து எதிர்பார்த்தது போல வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. மாறாக சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபட்டது. இந்திய வீரர்களின் சூழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 112 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 53 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்து அதிகபட்சமாக இங்கிலாந்து அணி கேப்டன் 17 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், தனது 100வது டெஸ்டில் ஆடும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.