தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான ஃபாப் டூப்ளஸிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அவர், இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 40.02 சராசரியுடன் 4,163 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 10 சதங்களையும், 21 அரைசதங்களையும் விளாசியுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பையில் கவனம் செலுத்துவதற்காக, அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து ஃபாப் டூப்ளஸிஸ், "என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல இது சரியான நேரம். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் எனது நாட்டிற்காக விளையாடியது கௌரவமான ஒன்று. ஆனால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதற்கான நேரம் வந்துவிட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது என்னிடம், நான் தென்னாப்பிரிக்காவுக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன், அணியின் கேப்டனாக இருப்பேன் எனக் கூறியிருந்தால் நான் அவர்களை நம்பியிருக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குப் பிறகு ஃபாப் டூப்ளஸிஸ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் விடைபெறுவார் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.