Skip to main content

ரஜினியின் அரசியல்... யாருக்கு பாதிப்பு? - அரசியல் விமர்சகர்களின் அலசல்!                                                

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

rajini politics

 

"மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்; இப்போது இல்லைன்னா, எப்போது?" என சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் சொல்லி அரசியலுக்கு வருவதை உறுதிப் படுத்தியிருக்கும் ரஜினி, கட்சியின் பெயர், கட்சிக் கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை முடிவு செய்யும் ஆலோசனையில், கடந்த 2 நாட்களாகத் தீவிரமாக இருக்கிறார். பெயர், கொடி, சின்னம் ஆகியவைகளை  இறுதி செய்துவிட்டதாகவே ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்களில் பரவியிருக்கிறது. விரைவில் டெல்லி சென்று கட்சிப் பெயரை பதிவு செய்யவிருக்கிறார் ரஜினி.

 

அதேசமயம், மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி தலைமையில், கட்சிக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முக்கிய நிர்வாகிகளை டெல்லி அனுப்பி கட்சியைப் பதிவு செய்கிற ஒரு யோசனையும் ரஜினிக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

rajini politics

 

அதிமுக, திமுக உள்பட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள், அவர் வரமாட்டார்; வரக்கூடாது என எதிர்பார்த்திருந்த தருணத்தில், ரஜினியின் அரசியல் வருகை திமுக, அதிமுக தலைமைகளை அதிரவைக்கத்தான் செய்திருக்கிறது. யாருடைய வாக்குகளை ரஜினி பிரிப்பார் என அலசி ஆராய்கிறார்கள். அதேசமயம், மக்கள் மனதை, அறிந்துகொள்ளும் சர்வேக்களை எடுக்க திமுக-அதிமுகவின் அரசியல் ஆலோசகர்களும் கவனம் செலுத்திவருகின்றனர்.

 

இந்த நிலையில், ரஜினியின் வருகை யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? என தமிழக அரசியல் கள நிலவரங்களை உற்றுக் கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் பலரிடமும் நாம் பேசினோம்.

 

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, கட்சியின் தலைவர்களை முன்னிறுத்தி, 1977 மற்றும் 1989 சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு விழுந்துள்ள நேர்மறை வாக்குகளைப் போன்றே வருகிற தேர்தலும் உருவாகிறது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு நேர்மறை வாக்குகளாக 30.3 சதவீதமும், கலைஞருக்கு 24.8 சதவீத வாக்குகளும் அவர்களின் தலைமைக்குக் கிடைத்தது. மூப்பனார் தலைமைக்கு 17.5 சதவீதமும், பா.ரா.தலைமைக்கு 16.5 சதவீதமும் நேர்மறையாகக் கிடைத்தது. நான்கு முனைப் போட்டியால் எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றார்.

 

rajini politics

 

அதேபோல, 1989-ல் கலைஞர் தலைமைக்கு 34 சதவீதமும், ஜெயலலிதா தலைமைக்கு 21 சதவீதமும், மூப்பனார் தலைமைக்கு 20 சதவீதமும், ஜானகி தலைமைக்கு 10 சதவீத வாக்குகளும் நேர்மறையாகக் கிடைத்தன. இந்த நான்கு முனை தலைமைத்துவ போட்டியில் கலைஞருக்கு வெற்றி கிடைத்தது. ஆக, எதிர்ப்பு வாக்குகள் என்கிற பிரச்சனையே அந்தத் தேர்தல்களில் எதிரொலிக்கவில்லை. தலைமைக்கான ஆதரவு வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானித்தன. அதேபோன்ற ஒரு சூழலைத்தான் தற்போதைய 2021 தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.
 

cnc

 

அந்த வகையில், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், கமல்ஹாசன் ஆகியோர்தான் முதல்வர் வேட்பாளராகவும், கட்சித் தலைவர்களாகவும் தலைமைத் தாங்கி களத்தில் நிற்கிறார்கள். ரஜினி கட்சியில், அவர் முதல்வர் வேட்பாளரா? அல்லது வேறுநபரா? யார் தலைமையில் ரஜினியின் கட்சி, தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படும் பட்சத்தில் தான் ரஜினியின் அரசியல் வருகை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? யாருக்குப் பாதிப்பு? என்பதை தெளிவுப்படுத்த முடியும் என்கிறார் மிக அழுத்தமாக!

 

மேலும், சில அரசியல் விமர்சகர்களிடம் நாம் விவாதித்தபோது, வருகிற சட்டமன்றத் தேர்தல், தலைமைத்துவத்திற்கான தேர்தலாகத்தான் கவனிக்கப்படுகிறது. அதனை உள்வாங்கித்தான் வாக்காளர்கள் தங்களது ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பதே நிதர்சனம். அதேசமயம், ரஜினியின் வருகை தி.மு.க கூட்டணிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, கடைசியாக நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம்.

 

கலைஞர், ஜெயலலிதா இல்லாத சூழலில் நடந்த அந்தத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 52 சதவீத வாக்குகளுடன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் திமுக மட்டுமே 35 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறது. எடப்பாடி-பன்னீர் தலைமையிலான அதிமுக கூட்டணி 32 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. இதில் அதிமுகவுக்கு மட்டும் 18 சதவீதம். இதில் திமுகவையும் அதிமுகவையும் மட்டுமே எடுத்துக்கொண்டால் அதிமுகவை விட இரு மடங்கு வாக்குகளை அதிகமாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். இது, எப்படிச் சாத்தியம்?

 

ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகள், மதச் சிறுபான்மையினர் - மொழிச் சிறுபான்மையினர் - சாதிச் சிறுபான்மையினர் ஆகியோர்களின் வாக்குகள், தலித் சமூக வாக்குகள், நடுநிலையாளர்களின் வாக்குகள் ஆகிய இவைகள் அனைத்தும் திமுகவுக்கு விழுந்ததினால்தான் 52 சதவீதம் சாத்தியமானது. அதேபோல அதிமுகவுக்கு கிடைத்துள்ள 18 சதவீதமும் அக்கட்சியின் அடிப்படை வாக்குகளும் சாதிய வாக்குகளும்தான். அந்த வகையில், அதிமுகவின் அடிப்படை வாக்குகளில் சேதாரத்தை ரஜினியால் ஏற்படுத்திவிட முடியாது.

 

nkn

 

கட்சியின் அடிப்படை வாக்குகளை தவிர்த்து அதிகப்படியான வாக்குகள் எங்கு குவிந்து கிடைக்கிறதோ அதில்தான், சேதாரத்தை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் திமுகவிடம்தான் அதிக வாக்குகள் குவிந்துள்ளன. அதனால், திமுக கூட்டணியின் வாக்குகளைத்தான் ரஜினியின் வருகை பாதிப்பை ஏற்படுத்தும். ரஜினியின் கட்சி யாருடைய தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்து, பாதிப்பின்  அளவு மாறுபடும் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.