அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொருவரும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கேற்றார் போலவே அரசும், நீதிமன்றமும், சில நேரங்களில் சராசரி மக்களே அதை கண்டுபிடித்துவிடுகின்றனர். அல்லது அந்த காலத்தில் அது பயன்பட்டு பின் காலப்போக்கில் அது அனைவருக்கும் பழகி பின் அதைவைத்து ஏமாற்றிவிடமுடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றனர். தற்போது அப்படியான ஒரு தீர்ப்பைதான் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஜாதவ் என்பவர் எஸ்.பி.ஐ. வங்கியில் கிரடிட் கார்டு பெற்றுள்ளார். அந்த கடன் தொகையை சரிவர செலுத்த தவறியுள்ளார். 2010ம் ஆண்டுவரையில் அவர் கிரடிட் கார்டு பாக்கித்தொகை 85,000 ரூபாயாக இருந்துள்ளது. ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து 2015ம் ஆண்டுவரையில் சுமார் ரூ.1.17 லட்சம் கடன்பாக்கி இருப்பதாக தெரிவித்த வங்கி இவர்மீது வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது வங்கி நிர்வாகம். மேலும் குறுஞ்செய்தி மற்றும் பி.டி.எஃப். வடிவில் வாட்ஸ் அப் செய்தியும் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கிலிருந்து தப்பிக்க நினைத்த ஜாதவ், தான் வீடு மாறிவிட்டதால் தனக்கு நோட்டீஸ் வரவில்லை என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், வங்கி நிர்வாகம் அவருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய செய்தியையும் அதற்கு அவர் அளித்த பதிலையும் ஆதாரமாகக்காட்டியது. இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நோட்டீசை படித்ததற்கான ஆதாரம் மின்னணு வடிவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இனி வாட்ஸ் ஆப் மூலம் செய்தி அனுப்பப்பட்டாலும் அது செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.