அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் அவருக்கு நேற்று மரியாதை செய்யப்பட்டது. தமிழகத்திலும் அவருக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் மரியாதை செய்தனர். சில இடங்களில் இந்து அமைப்பினருக்கும் சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்குவாதம் ஆன சம்பவங்களும் நடைபெற்றன.
குறிப்பாகத் தமிழகத்தில் இந்து அமைப்பினர் சிலர் அவரின் உருவப்படத்தை இந்து வழிபாடு முறையோடு தொடர்புபடுத்திக் காவி வண்ணத்தில் உடை, விபூதி உள்ளிட்டவற்றோடு அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த இள.புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் அவருக்குப் பொதுமக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். சில இடங்களில் அம்பேத்கர் புகைப்படத்திற்குக் காவி வண்ணம் பூசப்பட்டு, விபூதி உள்ளிட்ட இந்து மத அடையாளங்களோடு பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தியாவில் உள்ள அனைவரும் மதிக்க வேண்டிய ஒரு தலைவர் அண்ணல் அம்பேத்கர். இன்றைக்கு அவர் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தையே பயன்படுத்தி வருகிறோம். அந்த சட்டத்தின் படி பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மக்கள் என அனைவருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்துள்ளார். இன்றைக்கு அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகள் உருவாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் இந்நாட்டில் சரிசமமாக வாழ வழிவகை செய்தவர்.
அவரின் சிறு வயதிலேயே இந்த சாதி மத ஒழிப்புக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடியவர். மத பிரிவினைவாதிகளை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்தார். புத்தர் மீது கொண்ட நாட்டத்தின் காரணமாக இந்த சனாதன மதத்திலிருந்து விலக வேண்டும் என்று நினைத்து புத்த மதத்திற்கு மாறினார். இன்றைக்கு அவர் மீதே சனாதன சக்திகள் மதத் தாக்குதல்களைச் செய்து வருகிறார்கள். இதை யாராலும் ஏற்க முடியாது.
வாழ்நாள் எல்லாம் இந்த மத தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிய அவருக்கு இன்றைக்குக் காவி வண்ணம் பூசி விபூதி அடிக்கிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவர்களுக்கு எல்லாம் வெக்கமாகவே இல்லையா என்று தெரியவில்லை. அவரின் கொள்கை கோட்பாடு என்னவென்று அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும். இவர்கள் திடீரென்று அவருக்குக் காவி வண்ணம் பூசினால் அம்பேத்கர் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டவர் ஆகிவிடுவாரா? இவர்களுக்குச் சுத்தமாக அறிவில்லையா, இல்லை அறிவில்லாத மாதிரி நடிக்கிறார்களா என்று தெரியவில்லை.
அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் பெண்கள் படிக்கலாம், மறுமணம் செய்து கொள்ளலாம், அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கப்படும் என்று பேச்சு எழுந்த உடனே அதனைக் கண்டித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தில் அண்ணலின் உருவப் படத்தை எரித்தவர்கள் இன்றைக்கு அவருக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துகிறேன் என்கிறார்கள். ஒருபோதும் நாட்டு மக்களை இவர்கள் ஏமாற்ற முடியாது.