Skip to main content

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எதற்காக? - பரபரப்பு பின்னணி!

Published on 08/03/2021 | Edited on 09/03/2021

 

 

what is the reason behind dmdk district secretary meeting

 

முக்கியத் தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தல் வழக்கத்தை விட அதிக பரபரப்பை கிளப்பியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடுகளை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. ஆனால், சில கட்சிகள் முரண்டுபிடிப்பது கூட்டணித் தலைமைகளுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. அந்த, வகையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளை ஒரு வழியாகச் சமாதனம் செய்து தொகுதிப் பங்கீடுகளை சுமுகமாக முடித்துள்ளது. மறுபுறம், அதிமுக, தனது கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான பாஜக, பாமகவிற்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தேமுதிக மட்டும் பிடிகொடுக்காமல் இருந்துவருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைமை, நாளை (09.03.2021) மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த பல நாட்களாக. 'இதோ', 'அதோ' என இழுத்துக் கொண்டே செல்கிறது 'அதிமுக- தேமுதிக' தொகுதிப் பங்கீடு. அதிமுக அமைச்சர்கள் விஜயகாந்தை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். தேமுதிகவின் முக்கியப் பொறுப்பாளர்கள் அதிமுகவுடன் தொடர்ந்து பேசிவருகின்றனர். ஆனால், 'அனுமன் வால் போன்று நீண்டுகொண்டே போகிறது' கூட்டணிப் பேச்சுவார்த்தை. இடையிடையே தேமுதிகவின் ராஜதந்திர பேச்சுகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. விஜய பிரபாகரன், 'அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நிற்போம்' எனத் தொண்டர்களை தட்டி எழுப்ப, சுதீஷோ, 'நமது சின்னம் முரசு; நமது முதல்வர் விஜயகாந்த்' என ஃபேஸ்புக்கில் தட்டிவிட்டார். அவ்வளவுதான், அரசியல் களமே அதிரிபுதிரி ஆனது. ஆனால், அதிமுக சைடில் எந்த ரியாக்ஷனும் இல்லை. இதனால், மேலும் அதிர்ச்சியான தேமுதிகவினர் திமுகவுடன் பேசியதாகவும் திமுக இதில் பெரிதாக ஆர்வம் காட்டாததால் பேச்சுவார்த்தை நீர்த்துப்போனதாகவும் தகவல் பரவியது.

 

ஆனால், சற்றும் மனம் தளராத தேமுதிகவினர் மீண்டும் அதிமுகவுடன் பேசிவருகின்றனர். பாமகவுக்கு நிகரான தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் கேட்டனர். அதற்கு அதிமுக தரப்பில் 'நோ' சொல்லப்பட்டது. பிறகு, தொகுதிகளைக் குறைத்துக் கொள்வதாகவும் ஆனால் கேட்ட தொகுதியை ஒதுக்கவேண்டும் எனவும் அன்பான நிபந்தனைகளை தேமுதிக தரப்பு விதித்தது. இதற்கிடையில், பாமக சார்பில வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக, அதிமுக கட்சியின் சின்னங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தேமுதிகவின் சின்னம் மட்டும் மிஸ் ஆனது. இதனால், தேமுதிக இன்னும் கூட்டணியில் உள்ளதா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது.

 

பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளிடையே நீண்ட காலமாகவே பனிப்போர் நடத்து வருகிறது. 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரே அணியில் இடம்பெற்றன. ஆனாலும், தேர்தலின்போது இரு கட்சிகளுக்கும் இடையே வாக்குப் பரிமாற்றம் சரியாக நடைபெறவில்லை எனும் குற்றச்சாட்டை இருகட்சிகளும் முன்வைத்தன. ஆனால், பாமகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாசலத்தில் விஜாயகாந்த் பெற்ற வெற்றிதான் இந்த மோதல்களுக்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டதாகவும் தேமுதிக வருகையால், பாமகவுக்கு வட மாநிலங்களில் இருந்த வாக்கு சதவீதம் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த ஈகோ யுத்தத்தால்தான், பாமகவுக்கு நிகரான மரியாதையை தேமுதிக எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் இறங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

what is the reason behind dmdk district secretary meeting

 

25  தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் கேட்டு வந்த தேமுதிக தற்போது தொகுதி எண்ணிக்கைகளை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறோம், ஆனால் நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில்தான் போட்டியிடுவோம். அதில், சமரசம் செய்ய முடியாது எனக் கூறியுள்ளது. இந்நிலையில்தான், ஒபிஎஸ், இபிஎஸ்ஸை நேரடியாக சந்தித்துப் பேசிய சுதீஷ், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருந்தாலும், தேமுதிக நிர்வாகிகள் சிலர் பாமகவுக்கு நிகரான தொகுதிகள் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றனராம்.

 

"இந்தமுறை தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கண்டிப்பாக சட்டமன்றத்தில் நுழைய வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நன்மதிப்பு உயரும். அதற்குத் தொண்டர்களாகிய நீங்கள்தான் கடுமையாக உழைக்க வேண்டும்" எனும் சமாதான அஸ்திரங்களைப் பிரயோகித்து நிர்வாகிகளைச் சாந்தப்படுத்தும் நிகழ்வும் நாளை நடக்க இருப்பதாகக் கூறுகின்றன தேமுதிக வட்டாரங்கள்.