தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் – காஞ்சிபுரம் அருகே 2,937 ஏக்கர் பரப்பளவில் இரு அலகுகள் செயல்பட்டு வருகிறது. பல்லாயிரக் கணக்கானோர் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்மா, குரும்பூர், வட ஆளப்பிறந்தான், தேத்துறை, இளநீர்குன்றம், அத்தி, காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வீரம்பாக்கம் உட்பட 11 கிராமங்கள். இங்கு சிப்காட் மூன்றாவது அலகை அமைப்பதற்காக அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், 2018 ஆம் ஆண்டு 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அரசாணை வெளியிடப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்ததும் தொழில்துறையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. செய்யார் சிப்காட் தொழிற்பூங்காவில் மேல்மா சிப்காட் விரிவாக்கப் பணிகள் 54 அலகுகளாகப் பிரித்து 20 அலகுகள் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்ட இடத்தினை கையகப்படுத்தி பணிகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டது. இதனை எதிர்த்து மேல்மா கிராமத்தை மையமாக வைத்து 13 கிராம மக்கள் அமைதிப் போராட்டம் நடத்தத் துவங்கினர். ஜூலை 2 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகேயும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம், அரசாணை பிறப்பித்த அதிமுகவும், நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது என முரணாகப் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி தங்களது நிலத்தைக் கையகப்படுத்தக்கூடாது, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையை, போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசாங்கத்தை கண்டித்து தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகாவிடம் ஒப்படைக்க, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முகப்பு வாயிலிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அனுமதியின்றி ஒன்றுகூடி ஊர்வலமாகச் செல்ல முயன்றதாக 96 பெண்கள் உள்பட 147 விவசாயிகளைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்த போலீஸார், செய்யாறு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் அன்றிரவு சொந்த ஜாமீனில் விடுவித்தும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா வந்து, அவர்களது கோரிக்கை மனுவினை வாங்கிக் கொண்டார்.
நவம்பர் 4 ஆம் தேதி விடியற்காலை போராட்டத்தில் முன்னின்ற 20 பேரைக் கைது செய்து ஒரே சிறையில் அடைக்காமல் வேலூர், கடலூர், புழல் எனப் பிரித்து சிறையில் அடைத்தனர். மேல்மா கூட்டுச் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான 500 அதிரடிப்படை போலீஸார் போராட்டப் பந்தலைப் பிரித்து அவர்களைப் பலவந்தமாகப் போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் எஸ்.பி. கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பா. முருகேஷ், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான அருள், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், எருமைவெட்டி தேவன், மணிப்புரம் சோழன், மேல்மா திருமால், நர்மாபள்ளம் மாசிலாமணி, குறும்பூர் பாக்யராஜ் ஆகியோருக்கு குண்டர் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
விவசாயிகள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்கள். அவர்களைக் குண்டர்கள்போல் கைது செய்வது எந்த விதத்திலும் சரியானதல்ல என எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி சீமான், அ.ம.மு.க. டிடிவி தினகரன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.வும் வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், திருமுருகன் காந்தி உட்பட அனைவரும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, “கிருஷ்ணகிரியில் இருந்து இங்கு போராட்டம் நடத்துகின்றனர்” என்று தெரிவித்திருந்தார். மேலும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார் தமிழ்நாடு அரசிடம், வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தவறை செய்யமாட்டோம் எனக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று (17ம் தேதி) மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.