கூட்டணியில் இருந்தாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அ.தி.மு.க.வை சீண்டுவதும் பிறகு அமைதியாவதும் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் வாடிக்கை.
தனியார் தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்த பிரேமலதா, சசிகலாவையும் அ.தி.மு.க.வையும் மையப்படுத்தி அவர் பேசும்போது, "இன்னைக்கு இருக்கும் அமைச்சர்கள் எல்லோருமே சசிகலாவால் பதவி பெற்றவர்கள்தான். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியைக் கொண்டு வந்ததும் அவர் தான். அதனால், சசிகலா விடுதலையாகி வெளியே வரும்போது அ.தி.மு.க.வில் பெரிய அதிர்வலைகள் உருவாகும்'' என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.
பிரேமலதாவின் இத்தகையப் பேச்சு அ.தி.மு.க. அமைச்சர்களையும் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலரும் இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடியிடம், அ.தி.மு.க.வின் உள்விவகாரங்களில் பிரேமலதா தலையிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். பிரேமலதாவின் பேச்சு குறித்து உளவுத்துறையும் எடப்பாடிக்கு நோட் போட்டுள்ளது.
இந்த நிலையில், பிரேமலதாவின் பேச்சு எடப்பாடியையும் கோபப்பட வைக்க, உடனே அமைச்சர் ஜெயக்குமாருக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். அதன்படி, பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார் பிரேமலதா. அவங்க கட்சி வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. நான் உட்பட எங்கள் எல்லோரையும் அமைச்சர்களாக நியமித்தவர் புரட்சித் தலைவி அம்மாதான். இதில் சசிகலாவின் ரோல் எங்கிருக்கிறது? அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதலமைச்சரானவர் எடப்பாடி. வேறு யாரும் கையெழுத்துப் போட்டு அவர் முதலமைச்சராகவில்லை'' என ஆவேசப்பட்டார்.
சசிகலாவுக்கு எதிராக ஜெயக்குமார் உயர்த்தியிருக்கும் இந்தக் குரல், தினகரனின் அ.ம.மு.க நிர்வாகிகளையும் கோபப்பட வைத்துள்ளது. இதுறித்து தினகரனிடம் மா.செ.க்கள் பலரும் பேச, தினகரனும் ஜெயகுமாரை விமர்சித்திருக்கிறார். ஜெயக்குமாரின் கருத்து குறித்து அ.ம.மு.க.வின் தேர்தல் பிரிவு செயலாளரும் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செந்தமிழனிடம் கேட்டபோது, "அம்மா (ஜெயலலிதா) இருந்த காலத்திலேயே சின்னம்மாவின் (சசிகலா) பரிந்துரை இல்லாமல் யாரும் அமைச்சர்களாகவோ கட்சிப் பதவிகளுக்கோ வந்ததில்லை. இந்த உண்மை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் வரைக்கும் தெரியும். அம்மா ஜெயலலிதாவின் சுகதுக்கங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் சின்னம்மா சசிகலாதான் உறுதுணையாக இருந்தார். நான் அமைச்சராக இருந்திருக்கிறேன். என்னை அமைச்சராக்கியவர் சின்னம்மாதான். ஒருமுறை அமைச்சர்களையும் மா.செ.க்களையும் போயஸ்கார்டனுக்கு வரவழைத்த ஜெயலலிதா, 'என்னிடம் அவசரமாக ஏதேனும் தகவல் தெரிவிப்பதாக இருந்தால் சின்னம்மாவிடம் தெரிவியுங்கள். அவரது உத்தரவை என் உத்தரவாக எடுத்துக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார்.
சின்னம்மா என்கிற வார்த்தையை நிர்வாகிகளிடம் முதலில் பயன்படுத்தியதே ஜெயலலிதாதான்.
இன்னைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதாலும் சின்னம்மா சிறையில் இருக்கிறார் என்பதாலும் அவருக்கு எதிராக இவர்கள் பேசலாம். ஆனால், அமைச்சர்களாக இருந்ததும், இருப்பதும் சசிகலாவால்தான் என்பது அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும்.
ஜெயலலிதா மறைந்ததும், ஓ.பி.எஸ் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அந்தச் சமயத்தில், அமைச்சர்கள் எல்லோருமே என்னால் நியமிக்கப் பட்டவர்கள்தான்; அவர்களில் எந்த மாற்றமும் வேண்டாம் என சொல்லி, அமைச்சரவை பட்டியலை ஓ.பி.எஸ்.சிடம் தந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது சின்னம்மா சசிகலாதானே! அவர் தந்த பதவி வேண்டாம்னு இதே ஜெயக்குமார் அன்றைக்குச் சொல்லியிருக்கலாமே? அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை எல்லா அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளைப் போல புகழ்ந்து பேசியவர் ஜெயக்குமார்.
அரசியல் சூழ்ச்சிகளால் சின்னம்மா சசிகலா, முதல்வராவது தடுக்கப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை அமைச்சர்களாகவும் உருவாக்கிவிட்டே சிறைக்குச் சென்றார் சின்னம்மா. விரைவில் அவர் வெளியே வருகிறார். எடப்பாடி உள்பட அனைவரும் சின்னம்மா சசிகலாவின் காலில் விழுந்து வணங்குவார்கள். இது நடந்தேதீரும். அதனால் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் சகோதரி பிரேமலதா'' என அதிரடி காட்டுகிறார் செந்தமிழன்.