ஈழப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலை மையமிட்டிருந்தது. முல்லைத்தீவின் மிகக்குறுகிய அந்தப் பிரதேசத்தின் அதிலும் குறுகிய பகுதியில் குவிந்திருந்த மக்களைக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது. ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் கொல்லப்பட... சரணடைந்த பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்த இனப்படுகொலை நடந்துமுடிந்து பத்தாண்டுகள் கடந்தும், ஈழப்போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்காக "மே 18'-ஐ வெற்றிநாளாகக் கொண்டாடும் இலங்கை அரசு, தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ஒவ்வொரு ஆண்டும். இந்தாண்டு, ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் காரணம்காட்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தவிடாமல் செய்கிறது அரசு நிர்வாகம்.
இது ஒருபுறமிருக்க, தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்காக, வடமேற்குப் பகுதியிலுள்ள குலியப்பிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா மற்றும் டும்மாளசூரியா ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீதான பகுதிகள் மீது கொடூரத் தாக்குதல்கள் அரங்கேறின. மசூதிகள், வீடுகள், கடைகள் என இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். இதனால், அரையுத்தக் களம்போல் காட்சியளிக்கும் இலங்கையின் பதற்றத்தை ஜிகாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பி விட்டிருக்கிறது இலங்கை அரசு.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை மக்களோடு சேர்ந்து நடத்திவரும் சமூக சிற்பிகள் அமைப்பின் அமைப்பாளர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஷெரீன் சேவியரிடம் பேசியபோது, "குண்டு வெடித்த கொழும்பு மாகாணத்தைவிட அதிகப்படியான சோதனைச்சாவடிகள் தமிழர்கள் வசிக்கும் வடக்குப்பகுதியில் இருக்கின்றன. ஆயிரம் கேள்விகளைக் கேட்டபின்பே அனுமதிக்கின்றனர் இராணுவத்தினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படமும், புலிகளின் பதாகைகளும் கண்டெடுக்கப்பட்டதால், மாணவர் தலைவரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர். அதனூடாகவே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப்படம் பல ஆண்டுகளாக அங்குதான் இருந்தது. இதற்குமுன் இராணுவத் தளபதிகள் வெளியிட்ட புத்தகங்களில்கூட பிரபாகரன் படம் இடம்பெறத்தான் செய்தது. ஒடுக்குவது ஒன்றே அவர்களின் குறிக்கோள். நாங்கள் மே 12-ல் தொடங்கி நினைவேந்தல் நிகழ்ச்சிகளை வீடுகளிலும், கோவில்களிலும் நடத்திவருகிறோம். மே 17-ஆம் தேதியோடு முடித்துக்கொள்வோம் என்றார் அவர்.
முள்ளிவாய்க்கால் துயரத்தை நேரில்கண்ட சிவகுமார் மலர்ச்செல்வி, தமிழ் மக்களின் நியாபகங்களையும், தியாகங்களையும் இலங்கை அரசு மட்டுப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து நாங்கள் மாறோணுமென்று நன்மைகள் செய்து நாங்கள் மாறப்படயில்லை. இழந்த உறவுகளை நினைவுகளை நினைவுகூருவது எங்கள் உரிமை. ஆனால், எங்கள் விருப்பத்தைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் கோவில்களில் நினைவேந்தலை நடத்துகிறோம். நாங்களும் இலங்கை மக்கள்தானே''…என்றார் ஆதங்கத்துடன்.