Skip to main content

அதிகாரம் எடப்பாடியிடம் குவியக்கூடாது..! அதிமுக சீனியர் அமைச்சர்கள், நிர்வாகிகள் போட்ட பிளான்..!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
admk

 

 

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடிக்கு எதிராக நேரடியாக மோதலை துவக்கிய ஓ.பி.எஸ்., கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமைப்போம், அங்கீகாரம் குறித்து அதில் தீர்மானிக்கலாம் என்பதில் பிடிவாதம் காட்டினார். அ.தி.மு.க. தலைமையின் அதிகார மோதல்கள் சட்டமன்ற தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? சாதக- பாதகம் என்ன? என தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைமைகள் விவாதிக்கிற அளவுக்கு பிரச்சனை தீவிரமானது.

 

செயற்குழுவிற்கு பிறகு, எடப்பாடி தலைமையில் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகளை முற்றிலுமாக புறக்கணித்தார் பன்னீர்செல்வம். இதனால் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து, "தலைமை குறித்து நமக்குள் ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக, அரசு சார்ந்த நிகழ்வுகளை தவிர்க்காதீர்கள்'' என சொல்ல நினைத்திருந்தார் எடப்பாடி. ஆனால், அவரது ஆதரவு அமைச்சர்கள், அதனை தடுத்துவிட்டனர்.

 

காந்தி ஜெயந்தி விழாவில் கவர்னர் கலந்து கொண்டதால் அதனை ஓ.பி.எஸ்.ஸால் புறக்கணிக்க முடியவில்லை. அந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் இருவரும் அருகருகே இருந்தும் பேசிக்கொள்ளவோ, மரியாதை நிமித்தம் புன்முறுவல் செய்துகொள்ளவோ இருவரும் விரும்பாமல் இறுக்கமாகவே இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியதும் தன்னை சந்திக்கவந்த தம்பிதுரையிடம் பேசிவிட்டு, தேனிக்கு புறப்பட்டு சென்றார் ஓ.பி.எஸ். அங்குள்ள தமது பண்ணை வீட்டில் அவர் ஓய்வெடுக்க, தேனி மாவட்டம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் பண்ணை வீட்டுக்கு படையெடுத்தனர். யார் யார் வருகிறார்கள்? என்பதை கண்காணித்து எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுத்தபடி இருந்தது உளவுத்துறை. ஓ.பி.எஸ்.ஸிடம் அவரது ஆதரவாளர்கள், "நீங்கள் தீர்மானித்த முடிவில் உறுதியாக இருங்கள். உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம். நீங்கள்தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும்'' என தூபம் போட்டபடி இருக்கிறார்கள். அதற்கு சீரியசாக எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை ஓ.பி.எஸ்.

 

அக்டோபர் 7-ல் என்ன நடக்கும் என இரு தரப்பு சீனியர்களுக்கும் நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது, "கட்சியில் செயற்குழு, பொதுக்குழு இரு அமைப்புகளிலும் எடப்பாடிக்குத்தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனை மேலும் அதிகரிக்க செய்ய கடந்த 6 மாதங்களாகவே நிறைய நடவடிக்கைகளை எடுத்து முடித்திருக்கிறார். கட்சிக்கு வழிக்காட்டும் குழு அமைக்க வேண்டும் என ஓ.பி.எஸ். விரும்பினாலும், எடப்பாடி உருவாக்கி வைத்திருக்கும் வலிமை ஓ.பி.எஸ்.ஸை யோசிக்கவே செய்தது. அதனால் அழுத்தம் கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. எடப்பாடியுடன் சமாதானமாகப் போகவே விரும்பியிருந்தார்.

 

ஆனால், வன்னியர் லாபியை கணக்குப் போட்டு சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தார் ஓ.பி.எஸ். அதன்பிறகே, வழிகாட்டும் குழு அமைப்பதில் அதிக அழுத்தமும் தீவிரமும் காட்டுகிறார். குறிப்பாக, அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக இருந்தார் ஜெயலலிதா. இருப்பினும் கட்சியின் முடிவுகள் ஆட்சி மன்ற குழுவில் வைத்து அதன் ஒப்புதலை பெற்றே அவர் அறிவிப்பார். 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதும், ஒரு வகையில் முந்தைய ஆட்சி மன்றக் குழு போன்றதுதான்.

 

அதனால், அதிகாரமிக்க வழிகாட்டும் குழு அமைப்பதில் உறுதியாக இருங்கள் என ஓ.பி.எஸ்.ஸுக்கு பண்ருட்டியார் யோசனைத் தெரிவித்திருக்கிறார். அப்படி குழு அமைக்கப்பட்டு அதில் உங்களின் ஆதரவாளர்கள் இருந்தால் மட்டுமே உங்களுக்கான எதிர்காலம் வலிமையாகும் எனவும் அந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்தே, வழிகாட்டும் குழு அமைத்தால் மட்டுமே எடப்பாடியின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்பதால் அதனை அமைப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறார் ஓ.பி.எஸ்.

 

அதாவது, தேர்தல் கால முடிவுகள் மற்றும் கட்சியின் கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு வழிகாட்டும் குழுதான் அதிகாரமிக்கதாக இருக்கும். அந்த வகையில், 11 பேர் கொண்ட அந்த குழுவில் எடப்பாடி சார்பில் 6 பேரும், பன்னீர் சார்பில் 5 பேரும் இடம் பெற்றாக வேண்டும். இந்த குழுவில் சீனியர்கள் பலரும் இடம்பிடிக்க துடிக்கின்றனர். குறிப்பாக, கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த தம்பிதுரை, பொன்னையன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேர் விரும்புகின்றனர். இந்த 5 பேருக்கும் இடமளித்தால் சாதி ரீதியிலான பிரச்சனை தனக்கு எதிராக திசைத் திருப்பப்படுவதுடன் தங்கமணி, வேலுமணியைத் தவிர மற்ற மூவரும் தன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

 

அந்த சூழல் வந்தால், ஓ.பி.எஸ்.ஸுக்கு இயல்பாகவே வலிமை கூடிவிடும். அதனால் அந்த 5 பேரில் தங்கமணி, வேலுமணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்க விரும்புகிறார் எடப்பாடி. ஆனால், சீனியர்கள் 3 பேரையும் தவிர்த்துவிட்டு இவர்களுக்கு வாய்ப்பளித்தால் அப்போதும் அந்த மூன்று சீனியர்களும் ஓ.பி.எஸ். பின்னால் சென்றுவிட்டால் அதுவும் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். தவிர, முதல்வர் வேட்பாளர் என்கிற தனது கனவுக்கு வலிமை சேர்க்க வேண்டுமெனில் அவரை நம்பியுள்ள வன்னியர்கள், முக்குலத்தோர், நாடார்கள், தாழ்த்தப்பட்டோர் என மாற்று சமூக சீனியர்களுக்கும் அவர் வாய்ப்பளித்தாக வேண்டும். ஆனால், அதிலும் சிக்கல் இருக்கிறது.

 

மேலும், வழிகாட்டும் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன் மாதிரியான சாணக்கியர்களை ஓ.பி.எஸ். உள்ளே கொண்டு வந்துவிட்டால், தான் எடுக்கும் எந்த முடிவுகளுக்கும் வழிகாட்டும் குழுவில் ஒப்புதல் கிடைக்காது என்கிற பயமும் எடப்பாடிக்கு உண்டு. இதையெல்லாம் உணர்ந்துதான் வழிகாட்டும் குழு அமைக்க உடன்பட மறுக்கிறார் எடப்பாடி. இந்த சிக்கல்களை அறிந்ததால்தான், வழிகாட்டும் குழுவை வைத்து எடப்பாடியின் கனவுக்கு வேட்டு வைக்க வேண்டும் என கங்கணம் கட்டி அக்குழுவை அமைப்பதில் பிடிவாதம் காட்டுகிறார் ஓ.பி.எஸ்.'' என்கின்றனர் சீனியர்கள்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர், பன்னீரின் வழிகாட்டும் குழு ஆகியவைகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் தீவிரமாக ஆலோசிக்கிறார்கள். இதுகுறித்து அமைச்சர்கள் தரப்பில் உள்ள சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, "முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற போட்டியில் எடப்பாடியைத்தான் அமைச்சர்கள் அனைவருமே ஆதரிக்கிறார்கள். ஏனெனில், கடந்த நான்காண்டுகளில் அமைச்சர்களுக்கும் அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கும் தேவையானதை குறை வைக்காமல் பூர்த்தி செய்தே வந்திருக்கிறார் எடப்பாடி. ஆனால், ஓ.பி.எஸ்.ஸோ தன்னை நம்பியவர்களுக்குகூட அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்கிற ஆதங்கம் அவர்மீது இருக்கிறது. அதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எடப்பாடிக்குத்தான்.

 

அதேசமயம் எடப்பாடியிடம் மட்டுமே அதிகாரம் குவிந்திருப்பதை அமைச்சர்கள் விரும்பவில்லை. "இன்றைக்கு நல்ல பிள்ளையாக தெரியும் எடப்பாடி, மீண்டும் அ.தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது எடப்பாடியின் முகம் மாறும்; கொங்கு வேளாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்' என நினைக்கின்றனர். அதனால் அதிகாரம் எடப்பாடியிடம் குவியக்கூடாது என விரும்பும் அமைச்சர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், ஓ.பி.எஸ்.சின் வழிகாட்டும் குழு அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு பச்சைக் கொடி காட்டுகின்றனர். இதனை எடப்பாடியிடமே நேரடியாக பேசிய அவர்கள், "முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான்; அதே சமயம் வழிகாட்டும் குழு அவசியம். அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்பதை வலியுறுத்துகின்றனர். இதனால் இடியாப்பச் சிக்கலில் இருக்கிறார் எடப்பாடி என்று விவரிக்கிறார்கள்.

 

இந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என இருவரும் கலந்து பேசி அக்டோபர் 7-ந் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்த கே.பி. முனுசாமி போன்ற மத்தியஸ்தர்கள்தான், ஞாயிற்றுக்கிழமை வரை இதற்கு முடிவு தெரியாததால் தடுமாறிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே இருவரையும் பேச வைக்கவும், சந்திக்க வைக்கவும் முயற்சிகளையும் எடுத்தனர் சீனியர்கள். இருவரையும் சமாதானப்படுத்தி இருவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியும் என்கிற நம்பிக்கையில் போராடினர் மூத்த தலைவர்கள்.  

 

மூத்த தலைவர்களின் முயற்சியால் கடந்த 7ஆம் தேதி அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிர்வாகிகள் முன்பு பேசினார்கள். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், பா.மோகன், ரா.கோபாலகிருஷ்ணன், கி.மாணிக்கம் ஆகிய 11 பேர் கொண்ட அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். 

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.