சும்மா இருந்த ஜீயரை, உசுப்பி விட்டது யாரு?
எந்த ஒரு பிரச்சனையும் இந்தக் காலத்தில் 10 நிமிடம்கூட பேசுபொருளாக இருப்பதில்லை. இதை நன்கு உணர்ந்தவர் நம்ம பிரதமர் மோடி. அந்த வித்தையை பயன்படுத்தித்தான் பொய்க்கு மேல் பொய்யாக பேசித் தள்ளிக்கொண்டே இருக்கிறார்.
இப்போக்கூட, சிம்லா ஒப்பந்தத்தில் இந்திராவும் பெனாசிர் புட்டோவும் கையெழுத்திட்டதாக கூறி பரபரப்பை பற்றவைத்துவிட்டு பிளைட்டில் ஏறி ஜோர்டானுக்கு ஜோரா போய்ட்டார்.
மோடியின் இந்த வித்தையையும் அவருடைய பொய்களையும் தமிழ்நாட்டில் இருக்கிற எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற காவிச் சங்கிகளும் கத்துக்கொண்டிருக்கலாம். எதுக்குன்னு கேக்குறீங்களா?
கவிஞர் வைரமுத்து விவகாரத்த ஹேண்டில் பண்றதுல படுமோசமா கோட்டை விட்டுட்டு அசிங்கப்படுறாங்களே அதைத்தான் சொல்றேன். ஆண்டாளை வைரமுத்து அப்படி ஒன்னும் தப்பாச் சொல்லிவிடவில்லை என்று விவரமறிந்தோர் விளக்கம் அளித்தார்கள். வைரமுத்துவேகூட தனக்கு அப்படி ஒரு நோக்கம் இல்லை என்று சொல்லிவிட்டார். வருத்தமும் தெரிவித்தார்.

கொஞ்சம் கீழே இறங்கிவந்தவுடன் அவர் பயந்துவிட்டதாக கருதிய சங்கிகள், அவரை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வைத்துவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள். ஆனால், அது நடக்கவில்லை. உடனே, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜரை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடச் செய்தனர். அவரும் இதுவரை யாரும் அறியாமல் இருந்துவிட்டு வீணாக மீடியாவில் சிக்கி சின்னாபின்னமானார். எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி, கேலிப்பொருளானது போதாது என்று, ஜீயரையும் நைஸாக கோர்த்துவிட்டனர்.
முதலில் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி உண்ணாவிரதம் அறிவித்தார். வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கோரும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார். ஆனால், வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிஎஸ்பி கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
அதன்பிறகும் வைரமுத்து விவகாரத்தை அவர் கைவிடவில்லை. மீடியாக்களிடம் பேசிய அவர், தங்களுக்கும் சோடாபாட்டில் வீசத்தெரியும் என்று தெருச்சண்டைக்காரர்கள் பேசுவதைப்போல பேசினார். அதையும் சமூக வலைத்தளங்கள் படுமோசமாக கிண்டலடித்து அவரை நோகடித்தன. உடனே, தான் அப்படி பேசியதற்காக ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டதாக கூறினார். இதெல்லாம் ஒரு ஜீயருக்கு அழகா என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில்தான், வைரமுத்து விவகாரத்தை அவர் மீண்டும் கையில் எடுத்தார். பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், தவறினால் 3 ஆம் தேதியிலிருந்து அவர் மன்னிப்புக் கேட்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார்.
அறிவிப்பையே கலாய்க்கத் தொடங்கினார்கள். ஆனால், அவர் சொன்னபடி 3 ஆம் தேதி வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை. அதேசமயம், ஜீயரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. உடனே, ஜீயர் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று கேலிசெய்ய தொடங்கினார்கள். இதையடுத்து, பிப்ரவரி 8 ஆம் தேதி கோவில் மண்டபத்திலேயே உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். வைரமுத்து தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் வரை தனது உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவித்த அவர், 9 ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கூறினார்.
ஜீயர் சடகோப ராமானுஜர், தானுண்டு தனது வேலையுண்டு என்று இருந்தார். அவரை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து, இவ்வளவு தூரம் அவமானப்படுத்தியதற்கு எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும்தான் காரணம் என்று வைணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஜீயர் உண்ணாவிரதத்தை வைத்து ஏதேனும் அசம்பாவிதம் நடக்காதா என்று சிலர் தீட்டிய சதி திட்டத்தை மக்கள் புரிந்துகொண்டனர் என்றும், மதத்தை வைத்து தமிழ்நாட்டில் மோதல்களை உருவாக்கும் முயற்சி தோல்வியில்தான் முடியும் என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஆதனூர் சோழன்