'வாக்குத்' தவறாத ஆர்.கே.நகர் மக்கள்!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். இது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஆகும். தினகரனின் வெற்றி தமிழக அரசியலையும் அதிமுகவின் வரலாற்றையும் புரட்டிப் போடப்போகிறது என்கிறார்கள்.
ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு, வாங்கிய பணத்திற்கு வாக்குத் தவறாமல் வாக்களித்திருக்கிறார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். தினகரன் தரப்பினரும், ஆளும்கட்சி தரப்பினரும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வினியோகித்ததாகவும், திமுகவினர் பணம் கொடுக்கவில்லை என்றும் பகிரங்கமாக பேசினார்கள்.

அந்த வகையில் அதிகமாக பணம் கொடுத்தவர்களுக்கு அதிக வாக்குகளும், குறைவாக பணம் கொடுத்தவர்களுக்கு குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. அதேசமயம், பணமே வினியோகிக்காத திமுக மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது.
தினகரன் வெற்றி என்ற இந்தச் செய்தி இப்போதே ஆளும் அதிமுகவுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்லோரும் தினகரனுக்கு வேண்டியவர்கள்தான். சசிகலா குடும்பம் பார்த்து தேர்தல் டிக்கெட் கொடுத்தவர்கள்தான். அப்படி இருக்கும்போது, தினகரனிடம்தான் ஆளுமை இருக்கிறது என்பதை உணர்ந்தபிறகு எம்எல்ஏக்கள் எப்படி எடப்பாடியையும் பன்னீரையும் நம்புவார்கள்.
தேர்தல் முடிவு வந்துகொண்டிருக்கும்போதே, இது அதிமுகவுக்கு எதிரான முடிவல்ல. எங்களை ஒற்றுமையாக இருக்கச் சொல்லி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜுவே வாயைத் திறந்திருக்கிறார்.
அதேசமயம், இரட்டை இலையையும், அதிமுக பெயரையும் வைத்துக்கொண்டே இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற உண்மையை எம்எல்ஏக்கள் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் ஒபிஎஸ், இபிஎஸ்சை எம்எல்ஏக்கள் நம்புவார்களா என்ற கேள்வி எழுகிறது.
எம்ஜியார் நினைவு நாளிலேயே அவர் கண்டெடுத்த இரட்டை இலைச் சின்னத்தின் முக்கியத்துவத்தை முழுவதுமாக அழித்திருக்கிறார்கள் என்று இபிஎஸ்சையும் ஒபிஎஸ்சையும் தொண்டர்கள் தூற்றுகிறார்கள்.
எப்படியோ, தினகரன் எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்குள் எம்எல்ஏக்களில் பலர் தினகரனை சந்திப்பார்கள். எடப்பாடியையும் பன்னீரையும் ஜெயக்குமாரையும் தவிர மற்றவர்கள் தினகரனை ஆதரிக்க தயாராக இருப்பார்கள். தினகரனையும், சசிகலாவையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தவர்களை தினகரன் சேர்க்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.
தேர்தலில் சின்னம் முக்கியமில்லை, புதிய சின்னத்தை விளம்பரப்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் கடினமும் இல்லை என்று தினகரன் கூறியிருந்தார்.
எம்ஜியார் இறந்தபிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது எம்ஜியாரின் மனைவி ஜானகியின் பக்கம் மூத்த தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு அருகே சசிகலா குடும்பம்தான் இருந்தது.
அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த சேவல் சின்னம்தான் 37 இடங்களில் ஜெயித்தது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் சசிகலா குடும்பத்தினர் என்று சொல்லிக் கொண்டார்கள்.
பணத்தை எப்படி வாக்காளர்களுக்கு கொடுப்பது என்ற வித்தையை சசிகலா குடும்பத்தினரும் அவருடைய ஆதரவாளர்களும் நன்றாக கற்று வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய தந்திரம்தான் ஜெயலலிதாவை இத்தனை ஆண்டுகள் காப்பாற்றி இருக்கிறது என்பதை நம்ப வைத்திருக்கிறார் தினகரன்.
இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் தினகரனுக்கு ஏன் வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தினகரன் ஜெயித்தால் ஆட்சியைக் கலைப்பார் என்று வாக்காளர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள். அந்த அளவுக்கு மக்கள் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியாக இருந்தார்கள்.

திமுகவினரேகூட தினகரன் ஜெயித்தால்தான் அதிமுகவை உடைத்து, ஆட்சியைக் கலைப்பார் என்று கூறினார்கள். அதனால்தான் திமுக வாக்குகள் மிகவும் குறைந்துள்ளன என்கிறார்கள்.
திமுக மூன்றாவது இடத்துக்குச் சென்றிருப்பதை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இந்த தேர்தலின் முடிவை அடிப்படையாக வைத்து எதிர்வரும் தேர்தல்களை சந்திக்க முறையாக திட்டமிட வேண்டும். இல்லையென்றால் மக்களவைத் தேர்தலிலும், அதற்கடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஏனென்றால், திமுக பணம் செலவழிக்கவில்லை என்று பெருமைப் பட்டுக் கொண்டாலும், புதிய கட்சிகளின் ஆதரவு, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு இவற்றையெல்லாம் மீறி திமுக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது என்பதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூறிவந்த பாஜக இப்போது, நோட்டாவைக் காட்டிலும் குறைவாக வாக்குகள் பெற்றிருக்கிறது. இதைத்தான் பலரும் மகிழ்ச்சியாக பார்க்கிறராகள் என்பது மிகவும் முக்கியமானது.
தினகரனின் இந்த வெற்றி அவரை முதல்வராக்குமா? ஆட்சியைக் கலைக்க உதவுமா? என்பதை போகப்போக தெரிந்து கொள்ளலாம்.
-ஆதனூர் சோழன்