ஏப்ரல் 17 - நடிகர் விக்ரம் பிறந்தநாள்
இந்திய சினிமாவின் பெருமை என்று ஒரு சிலரை சொல்வார்கள். அந்த நபர்களில் ஒருவராக இருப்பவர் சீயான் விக்ரம்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதைக்கு ஏற்றது போல் தனது உடலையும், தனது தோற்றத்தையும் மாற்றக்கூடியவர் என்றால் கமலுக்கு பின்பு நடிகர் விக்ரம் என்று உறுதியாகச் சொல்லலாம். நடிகர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,போட்டோகிராஃபர் என்று பன்முக திறன்கொண்டவர் விக்ரம். இவரது திரைப்பயணம் 1990ஆம் ஆண்டு தொடங்கினாலும் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'சேது'தான் விக்ரமின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன் என்று தமிழ் திரையுலகை ஒரு புயலாக சூழ்ந்தார் விக்ரம்.
இன்று துருவநட்சத்திரம் டீசரில் மிரட்டும் விக்ரமின் குரல் இப்பொழுது மட்டுமல்ல அப்பொழுதும் ஸ்பெஷல். நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விக்ரமுக்கு அதற்கு முன் சினிமாவில் கடினமான ஒரு காலகட்டம் இருந்தது. அப்பொழுது நடிகராக படங்கள் நடித்த பொழுதே தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் அஜித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்தவர் விக்ரம். அவ்வாறு விக்ரமின் குரல் விளையாடிய சில படங்கள்...
அமராவதி அர்ஜுனுக்கு
இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள, 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்திற்கு 1993ஆம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில் அஜித் நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் சீயான் விக்ரம்தான். அந்தப் படத்தில் அஜித்தின் அப்பாவித்தனமான இளம் காதலர் பாத்திரத்துக்கு விக்ரமின் குரல் முழுமை கொடுத்தது. இவ்வளவு நடிப்பை தனக்குள் வைத்திருப்பவரின் குரலும் நடித்தது. சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தில் அஜித் ஒரு காட்சியில் வருவார். அதிலும் அஜித்துக்கு டப்பிங் பேசியிருப்பார் விக்ரம்.
"கண்ண பாக்காதடா"
நடன கலைஞராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவிற்கு இரண்டு படங்களில் டப்பிங் பேசியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான வெற்றிப்படமான 'காதலன்' மற்றும் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சாரக் கனவு' திரைப்படத்திற்கும் விக்ரம் டப்பிங் பேசியுள்ளார். மின்சாரக் கனவில் கஜோலின் காதலை மறுக்கும் அந்த கடல் காட்சியில் "கண்ண பாக்காதடா... ஏங்க எல்லா பொண்ணுங்களும் எனக்கு சிஸ்டர்ஸ்" என்று திணறும் அந்தக் காட்சி இன்றும் மறக்க முடியாதது. அதில் பிரபுதேவாவுக்கு உறுதுணையாக இருந்தது விக்ரமின் குரல். அந்த ஒரு காட்சிக்கு டப்பிங் செய்ய விக்ரம் அழைக்கப்பட்டிருந்தார்.
சாக்லேட் ஹீரோவுக்கு சீயான்
விக்ரம், மொத்தமாக 11 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதில் அதிகமாக அவர் டப்பிங் பேசியது இப்பொழுது ஹார்ப்பிக் பாயாகவும் அப்பொழுது பெண்களின் மனதில் சாக்லேட் பாயாகவும் இருந்த அப்பாஸிற்கு. காதல் தேசம், வி.ஐ.பி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் பேசியுள்ளார்.
இப்படி எந்த வடிவில் இருந்தாலும் சினிமாவில் இருக்கவேண்டுமென்று மனம் தளராமல் இருந்த விக்ரம், ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அந்த ஒரு நல்ல வாய்ப்பு மிக மிக தாமதமாக வந்தது, ஆனாலும் அப்பொழுது தொடங்கிய சினிமா சக்ஸஸ் இன்றும் தொடர்கிறது. வெற்றி தோல்வி தாண்டி, மீம்ஸ், ரசிகர்கள் ரைவல்ரி காலத்திலும் யாராலும் வெறுக்கப்படாத ஹீரோவாக இருக்கிறார் விக்ரம். இதுதான் சீயான் ஸ்பெஷல். ஹேப்பி பர்த்டே சீயான்...