காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. இன்று காலை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது அவரை திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்னவேல் சந்தித்து, தனக்கு ராஜ்யசபா சீட் அளித்து ஒரு வாய்ப்பு கொடுக்குமாறும், இதேபோல் முன்னாள் அமைச்சரான சிவபதியும் சந்தித்து தனக்கு ராஜ்யசபா சீட்டு கேட்டு வலியுறுத்தியதாகவும் திருச்சி ர.ர.க்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதுதொடர்பாக நாம் விசாரித்தபோது, கடந்த மாசம் தஞ்சாவூருக்கு வைத்திலிங்கம் வீட்டு திருமணத்துக்கு வந்தப்ப, திருச்சியில கட்சிக்காரங்க வரவேற்பு கொடுத்ததை பாத்தேன், கட்சிக்குள்ள கருத்து வேறுபாடு இருக்கலாம், வெளிப்படையா பொதுமக்கள் மத்தியில நடக்கிற நிகழ்ச்சியில, வரவேற்பு விஷயங்கல்ல கோஷ்டியா பிரிஞ்சு நிக்கிறது சரியில்ல. வளர்மதி, ஆவின் கார்த்திக்கோட நீங்க வரவேற்பு தனியா கொடுத்தீங்க, குமாரும் வெல்லமண்டி நடராஜனும் தனியா வரவேற்பு கொடுத்தாங்க, இதெல்லாம் சரியில்ல என்று ரத்னவேலுவை பார்த்து கண்டித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்குது, கட்சியில் அனைவரும் ஒத்துமையா இருந்து வேலை பார்க்கணும், மீண்டும் வெற்றி பெறணுமுன்னு எண்ணம் இல்லையா? சட்டமன்றத் தேர்தலில் நம்பிக்கை இல்லையா? ஏன் ராஜ்யசபா சீட் வேணுமுன்னு அடம் பிடிக்கிறீங்க. நீங்க எல்லோரும் ஒத்துமையா கட்சிக்கு வேலை பாருங்க. சட்டமன்றத் தேர்தல் வருது, இப்பவே எதிர்க்கட்சிக்காரங்க வேலையை தொடங்கிட்டாங்க. ஆனா நீங்க ஒருத்தருக்கொருத்தர் மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா கட்சி திருச்சியில இல்லாம போயிடும் என எச்சரித்து அனுப்பி வைத்தாராம் எடப்பாடி பழனிசாமி.
இதேபோல் ராஜ்யசபா சீட்டு கேட்டு வலியுறுத்திய சிவபதியை பார்த்து, உங்களுக்கு ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல்ல பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கினோம். அதை நீங்க சரியாக பயன்படுத்தல. இப்ப ராஜ்யசபா சீட்டு வேணுமுன்னு சொல்றீங்க. இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாதவங்கள எப்படி சமாதனப்படுத்துவது. சீனியர்கள் பலருக்கு எந்த தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்காம இருக்கோம். அது தெரியுமா உங்களுக்கு. சீட்டு கேட்குற உரிமை உங்க எல்லாத்துக்கும் இருக்கு. அது இல்லன்னு நான் சொல்லல. ஆனா யாரை ராஜ்யசபாவுக்கு அனுப்பனுமுன்னு கட்சி தலைமை பேசி முடிவு அறிவிக்கும். நான் தனிப்பட்ட முறையில முடிவு எடுக்க முடியாது என கறாராக கூறிவிட்டதாக தெரிவிக்கின்றனர் திருச்சி ரரக்கள்.
-மகேஷ்