Skip to main content

"பெண் விடுதலையைப் பற்றி வெளியில் வீரமாகப் பேசும் ஆண்கள் வீட்டில்.." - மகளிர் தினமும் மறைக்கப்படும் உண்மையும்!

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

"ஒரு நாட்டில் உள்ள பெண்களின் நிலையை வைத்தே அந்த நாட்டின் நிலையைக் கூறி விடலாம்" என்று கூறியவர் பண்டித நேரு. வருடம் தோறும் மகளிர் தினம் கொண்டாடுவது இருக்கட்டும். நாம் நம்மைச் சேர்ந்த மகளிரை எப்போது கொண்டாடப் போகிறோம், பெற்றெடுத்த தாயாய் தூக்கி வளர்த்த சித்தியாய் நொண்டி விளையாடச் சொல்லித் தந்த சகோதரியாய், சேர்ந்து விளையாடும் தோழியாய், கரம் கோர்க்கும் காதலியாய், வாழ்வைப் பகிரும் மனைவியாய் இப்படி எல்லாப் படிநிலைகளிலும் ஆணுடன் சேர்ந்தே பயணிக்கும் பெண்களை வாழ்வில் எப்படி நடத்துகிறோம் என்பது நம் மனசாட்சி மட்டுமே அறிந்த உண்மை. "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றான் பாரதி. இப்படி மாதவம் செய்து பூமிக்கு வந்த பெண்களை இந்த சமுதாயம் நடத்தும் விதம் இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து வந்த பின்னரும் மாறாமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

 

sdfg


கல்வியும், வேலைவாய்ப்பும், இட ஒதுக்கீடும் இங்கே பெண்களுக்கு எளிதாய்க் கிடைக்கவில்லை எல்லாம் போராடிப் பெற்றதுதான். நம்முடன் தொடக்கக் கல்வி கற்ற எத்தனைத் தோழிகள் உயர்நிலைக் கல்வி கற்றார்கள். அங்கிருந்து மேல்நிலைக் கல்வி எத்தனை பேருக்கு கிடைத்தது. அதிலும் கிராமத்துப் பெண்கள் இதையெல்லாம் பெற எத்தனைப் போராட்டங்கள்? படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் எத்தனை பேர்? இவை அத்தனைக்குமான விடைதான் நம் நாட்டின் பெண் விடுதலையின் நிலை. இன்று பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கிடப்பதையே நாம் நூற்றாண்டின் சாதனையாகப் பார்க்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை எழுத்துக்களாய் மட்டுமல்லாமல் எதார்த்தத்தில் பார்க்கும் காலம் என்று வாய்க்குமோ!

கடந்த கால மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விபரங்களைப் பார்த்தால் பெண் கல்வியின் நிலை நன்றாகவே விளங்கும் 1991ஆம் ஆண்டின் படி இந்தியாவில் படித்த பெண்கள் வெறும் 40% மட்டுமே, பின் 1997ல் இது 45 சதவீதமாகவும் 2001ல் 53 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்திருந்தது இருப்பினும் மொத்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் இது வெறும் சொற்பம் தான். மேலும் கல்வியறிவில் ஆண் பெண் இருவருக்குமான சராசரி வித்தியாசம் 20 சதவீதம் இந்த நிலை மாற இன்னும் அரை நூற்றாண்டு கூட ஆகலாம். "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதரறிவைக் கெடுத்தார்" என்று பாரதி கூறியது போல இத்தனை தடைகளைத் தாண்டி ஏதேனும் ஒரு துறையில் நுழையும் பெண்கள் அங்கே நடத்தப்படும் விதத்திற்குச் சான்று அன்றய சட்டப்பேரவை முதல் இன்று நாம் வேலை பார்க்கும் அலுவலகம் வரை அத்தனையையும் நம் கண் முன் சாட்சிகள் எந்த ஒரு துறையானாலும் அங்கே வேலை வேலையாகப் பார்கப்படுவதை விட அதன் பால்தான் அந்த வேலைக்கான அங்கீகாரத்தைப்  பெற்றுத் தருகிறது இதற்கு ஆண்டிப்பட்டியும் விதி விலக்கல்ல அமெரிக்காவும் விதி விலக்கல்ல.

ஜெர்மன் பாராளுமன்றத்தில் ஒரு ஆண்  உறுப்பினர்,  நாடாளப் பெண்கள் தகுதியற்றவர்கள் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான் லாயக்கு என்று கூறியதற்கு ஒரு பெண் உறுப்பினர் இப்படி பதில் கூறுகிறார், 'ஆம் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் உடலமைப்பு அப்படி. ஆனால் ஆண்களுக்கு நாடாள்வதற்கு தகுதியான உறுப்பு எது' என்ற அவரது கேள்விக்கு அத்தனை பேரும் வாயடைத்து விட்டார்களாம் இப்படி பெண்களை அடிமைப்படுத்தும் பழக்கம் இன்னமும் நம்மை விட்டு அகன்றபாடில்லை."எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி" என்றானே பாரதி அப்படிப் பட்ட பெண்களுக்கு ஆணாதிக்க சமூகத்தால் ஏற்படும் இன்னல்களை யாரிடம் சென்று முறையிட முடியாமல் தன்னுள்ளே புதைத்து வைத்து வைரம் போல கடினமாய் மாறிப் போகிறார்கள் நம் பெண்கள். இன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்வருகையால்  வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சற்றே ஆறுதலாய் உள்ளது தனியார் மயமாக்கலின் நேர்மறை விஷயமாக இதைப் பார்க்கலாம். மற்றபடி ஆணின் கர்வம் அப்படியேதான் இருக்கிறது.
 

 

h



பெண் விடுதலையைப் பற்றி வெளியில் வீரமாகப் பேசும் ஆண்கள் வீட்டில் மனைவி குழந்தைகளை நடத்தும் விதம் அப்படியே எதிர்மறையாக இருக்கும், அப்பா வீட்டிற்க்குள் வந்தவுடன் அம்மா சமயலறைக் கதவுக்குப் பின் ஒளிந்து கொள்ளும் தேவர் மகன் படக் காட்சி போல் ஆங்காங்கே இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. "ஆண்டு தோறும் வீட்டுக் கிணற்றை தூர் வாரும் அப்பா மறந்தே போனார், தன் மனதை தூர் வார" என்று முடியும் நா முத்துக்குமாரின் 'தூர்' எனும் கவிதை எத்தனை ஆழமாய் ஆணாதிக்க சமூகத்தை தாக்குகிறது. ஆனால் அதுதான் இன்று நிதர்சனமான உண்மை. பேருந்திலே செல்லும் போது மகள் வயதுள்ள பெண்ணை ஒரு ஆண் உரசுவதைப் பார்த்தும் அதை மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். அதை வெளிக்காட்ட முடியாமல் பெண்கள் வெட்கி நகர்வதை இந்த சமுதாயம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தனை தடைகளைத் தாண்டி சாதனை படைத்த இந்திரா காந்தியில் தொடங்கி இன்று இந்திரா நூயி வரை பிடி உஷா தொடங்கி இன்று  பிவி சிந்து வரை அத்தனை பெண்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். வீட்டிலும் நாட்டிலும் பெண்களை முன்னிலைப் படுத்துவோம்! பெண்மையைப் போற்றுவோம்! ஏனென்றால் பெண்களைப் போற்றாத சமுதாயம் ஒருபோதும் முன்னேறாது.

 

எழுத்தாக்கம் - கார்த்திக் கண்ணன்