முதன்முறையாக ஒரு நடிகை நிர்வாணமாய் நடித்திருக்கும் தமிழ்ப் படம், நச்சென்ற டீசர், சுவாரசியமான போஸ்டர்கள் என பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி கடைசி நேர பரபரப்பினூடே வெளியான திரைப்படம் ஆடை. பட அறிவிப்பு முதலே ‘இது ஒரு போல்டான படம்’ எனும் அடைமொழியும் எப்படியோ படத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டது. இரண்டு விதமான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கிறது ஆடை. ‘தைரியமான படம், நல்ல கருத்து சொல்ற படம்’ போன்ற பாராட்டுகள் ஒருபுறம், ‘பொய்யான திரைப்படம், துப்பட்டா போடுங்கள் தோழி என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன்’ போன்ற விமர்சனங்கள் ஒருபுறம். என்ன சொல்லியிருக்கிறது, எப்படி சொல்லியிருக்கிறது ஆடை?
சமூகத்தின் எந்த பொதுப்புத்திக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாய் வாழ்பவள் காமினி. தொலைக்காட்சியில் தான் நடத்தும் ப்ராங்க் ஷோ வின் வெற்றிக்காக யாரையும் எந்தளவும் சீண்டத் தயங்காதவள். யாருமில்லாத அலுவலகத்தில், தன் டீமுடன் பிறந்தநாள் இரவை கொண்டாடும் காமினி, பெட் கட்டினால் நிர்வாணமாய் செய்தி வாசிக்கக் கூடத் தயார் என்று சவால் விடுகிறாள். அடுத்தநாள் காலை, உடலில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் கண் விழிக்கிறாள் காமினி. மொத்தக் கட்டடத்திலும் உதவிக்கு கூப்பிடக் கூட ஆளில்லை. காமினியை அந்த நிலைக்கு ஆளாக்கியது யார், ஏன், காமினி எப்படி அந்த கட்டடத்தில் இருந்து வெளியே வருகிறாள் என்று டீசர் நமக்கு கோடிட்டு காட்டிய அதே கதைதான்.
நிர்வாணத்தை ஆபாசமாக காட்டாத லாவகமான ஒளிப்பதிவு, பதைபதைப்பை நமக்குள்ளும் கடத்தும் படத்தொகுப்பு & இசை என சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது ஆடை. மேயாத மான் என்ற ஜாலியான ஒரு படத்தை எடுத்த ரத்னகுமாரிடம் இருந்து இப்படியொரு களமும் உருவாக்கமும் நிச்சயம் பெரும் பாய்ச்சல்தான். கதையின் தேவைக்கருதி, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முழு நிர்வாணமாய் நடித்திருக்கும் அமலா பாலின் அர்ப்பணிப்பும் சினிமா காதலும் நிச்சயம் கைத்தட்டி வரவேற்கப்பட வேண்டியது.
காமினி & டீம், அவர்களின் ப்ராங்க் ஷோ, இதைச் சுற்றியே நகரும் முதல் பாதி கதையில் இரண்டாம் பாதிக்கான அத்தனை விஷயங்களும் கட்டமைக்கப்பட்டு விடுகின்றன. தேவையற்ற பல காட்சிகளும், வசனங்களும் இருந்தாலும் காமினி எப்படிப்பட்ட பெண், அவள் மனோபாவம், தொழில், காலி செய்யப்படும் அலுவலகக் கட்டடம், பிறந்தநாள் இரவு என படத்தின் மைய சம்பவத்திற்கான அத்தனை விஷயங்களும் படிப்படியாக கோர்க்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து நகரும் திரைக்கதையில் அந்த கதாப்பாத்திரம் வலுவாக கட்டமைக்கப்பட வேண்டும். அதன் உள்ளும் புறமும் நமக்கு உணர்த்தப்பட வேண்டும். சுதந்திரக் கொடி என்னும் இயற்பெயரை காமினி என்று மாற்றிக் கொள்வது, புடவை கட்டுவதையே கெட்ட கனவாய் பார்ப்பது, ஆண்கள் பைக் என்று முத்திரை குத்தப்பட்ட பைக்கை ஓட்டுவது, நடு டிராஃபிக்கில் ரேஸ் செல்வது, பெட் கட்டினால் அதில் ஜெயிக்க எந்த எல்லைக்கும் போவது, குற்றவுணர்வு எதுவும் இல்லாமல் குடிப்பது, சுயமாய் சம்பாதித்து அம்மாவை பார்த்துக் கொள்வது, அம்மாவின் மேல் எழும் கோபம் & பாசம், அப்பா பேரை சொன்னதும் எழும் வெறுப்பு, உடன் இருப்பவர்களே சாடிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கான செயல்கள் என நாயகிக்கென எந்த புனித பிம்பத்தையும் கொடுக்காமல், இயல்பான நவநாகரிக இளம்பெண்ணாகவே காமினி (எ) சுதந்திரக் கொடியின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் படம் அதன் பிரதான முகப்பிற்குள் நுழையும் போது தான் படத்தின் பிரதான சிக்கலும் எழுகிறது. இப்படியாக கட்டமைக்கப்பட்ட ஒரு பெண், எதிர்பாராத ஒரு சூழலில் சிக்கிக் கொள்ளும் போது, அந்தப் பெண் அல்லது அந்த கதாப்பாத்திரம் எப்படி எதை எதிர்கொள்கிறது என்பது தான் இதுபோன்ற திரைக்கதைகளின் களம். சிறந்த உதாரணமாக மௌனகுரு திரைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இருந்து யாருடனும் அதிகம் பேசாமல், முரட்டுத்தனமாய் காட்டப்படும் நாயக கதாப்பாத்திரம், ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் போது, அதை அதன் வழியே எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் மௌனகுருவின் இரண்டாம் பாதி திரைக்கதை. அதன் முடிவு வேறாக இருந்தாலும், அந்த Conflict-ஐ ஒரு பாத்திரம் அதற்கு முன் நிறுவப்பட்ட அதன் பாத்திரத் தன்மையின் வழியே அணுகும். உலகளவில் பல படங்களை இதற்கு உதாரணமாக காட்டலாம்.
ஆனால் ஆடையில், இடைவேளையில் ஏற்படும் படத்தின் அந்த முதல் Conflict-ஐ (இது மிகத் தாமதமாக இடம்பெறுவதே முதல் பாதியின் தடுமாற்றத்திற்கு காரணம்) காமினி அணுகும் விதம், முதல் பாதியில் வெளிப்பட்ட அவளின் பாத்திரத்திற்கு முற்றிலும் முரணானது. சொல்லப் போனால் ஆரம்பத்தில் இருந்து நிறுவப்பட்ட அதன் தன்மைக்கு முழுவதும் எதிராகவே அந்த பாத்திரம் இரண்டாம் பாதியில் நடந்து கொள்கிறது.
இங்கே ஒரு கேள்வி எழலாம். இப்படிப்பட்ட ஒரு பாத்திரமே கூட அப்படியான ஒரு சூழலில் எப்படி தடுமாறுகிறது, முற்றிலும் வேறு விதமாக எப்படி மாறுகிறது என்பதை காட்டுவது கூட இயக்குனரின் நோக்கமாக இருக்கலாமே? இருக்கலாம். ஆனால் இதுதான் நோக்கமெனில் எனில் அந்த கதாப்பாத்திரத்தை புரிய வைக்க ஏன் இடைவேளை வரை முழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? ஒரு கதாப்பாத்திரத்தை நம் மனதிற்குள் ஆழமாக பதிய வைத்துக் கொண்டே செல்வது, ஒரு சூழலை அது எப்படி அணுகுகிறது என்பதற்கான அதன் அகவெளியை நமக்கு பதிய வைப்பதற்காகத் தானே? அரைவாசிப் படத்தில் சொல்லப்பட்ட ஒரு கதாப்பாத்திரம், அதன் இயல்புக்கு மாறாய் ஒரு சூழலை அணுகுவதில் இருந்து தான் ஆடை படத்தின் பிரச்சினை துவங்குகிறது.
திரைக்கதைக்கு என எந்தவொரு சட்டமும் சட்டகமும் இல்லைதான். சரி.. மேலே குறிப்பிட்ட ஒரு வாதத்தையே எடுத்துக் கொள்வோம். படம் சொல்ல வருவது, ஒரு கதாப்பாத்திரத்தின் வித்தியாசமான எதிர்வினை என்றே வைத்துக் கொள்வோம். எதிர்பார்க்காத ஒரு சம்பத்திற்கான உடனடி எதிர்வினையாக மட்டும் இருந்தால் சரி. ஆனால் அதன் பிறகு ஏதாவது ஒரு கட்டத்தில் சுதாரித்து அந்த கதாப்பாத்திரம் தன் இயல்பில் அந்த சூழலை அணுக வேண்டும் அல்லவா? Apocalypto போல! ஆனால், முதல் பாதியில் தான் பேசிய அரசியலுக்கு முற்றிலும் மாறான, சொல்லப் போனால் அதை உடைக்கும் ஒரு அரசியலை பின்பற்றுகிறது அந்த பாத்திரம். ஒரு பெண் எவ்வளவுதான் பேசினாலும், இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்கையில் அவளுக்குள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்கள் தான் வெளியே வரும். எனவே அதற்கேற்றளவில் நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வதைப் போல் இல்லையா இது?
இரண்டாம் பாதியில் காமினியின் கதாப்பாத்திரம் எந்த தருணத்தில் தன் இயல்பிற்கு மாறுகிறது? எங்கேயும் இல்லை. ஆனால் மாறுகிறது. எங்கே எப்படி என்றால், ‘ஒரு பொண்ணு இப்படிலாம் பண்ணலாமா’ என்கிற கலாச்சார காவலர்களின் கேள்வியை ஏற்று, அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், அவர்கள் எதிர்பார்க்கும் பெண்ணாய் மாறுகிறது. அப்படி மாறும் அளவிற்கு முதல் பாதியில் என்ன தவறு செய்தாள் காமினி? குடிக்கிறாள், பைக் ஓட்டுகிறாள், தைரியமாய் இருக்கிறாள், உடல் குறித்த தனக்கென ஒரு அரசியலை கொண்டிருக்கிறாள், தனக்குப் பிடித்த ஒரு பெயரை வைத்துக் கொண்டு தனக்கான வாழ்வை முழுதாக வாழ்கிறாள். இதில் என்ன தவறு?
காமினி மாற்றிக் கொள்வது ப்ராங்க் ஷோவிற்காக எந்த அளவிற்கும் செல்லும் அந்த சாடிஸத்தைத் தான். மற்ற எதையும் அவள் மாற்றிக் கொள்ளவில்லையே என்று கூட கேட்கலாம். ஆனால் இறுதியில் வரும் அந்த நங்கேலி பாத்திரம், ப்ராங்க் ஷோக்களை மட்டும் குறை சொல்லி காமினியிடம் பாடம் எடுக்கவில்லை. நீட் பத்தி பேசுகிறாள், Free the nipple பற்றி பேசுகிறாள், சமூகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களைப் பற்றியும் காமினியிடம் கேள்வி கேட்கிறாள். காமினியும் அதற்கு தலைகுனிகிறாள். சமூகத்தின் மேல் நமக்கு இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் ஒரு பாத்திரத்தை பிரதிநிதியாக்கி, இன்னொரு பாத்திரத்தின் மூலம் கேமிராவை பார்த்து கேள்வி கேட்க வைக்கும் இந்த செயற்கையான உத்தியை கூட விட்டு விடுவோம். நங்கேலி ப்ராங்க் ஷோ வின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து விளக்குவதை புரிந்து கொண்டு காமினி வேறு மாதிரியான ஒரு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பிக்கிறாள் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் காமினி என்ற பெயரை மாற்றி ஏன் மீண்டும் சுதந்திரக் கொடியாகிறாள்?
இதைத்தான் ஆடை பேசும் அரசியலாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சுதந்திரக் கொடி என்பது காமினியின் அம்மா வைத்த பெயர். அது வெறும் பெயர் மட்டுமல்ல. காமினி எப்படியிருக்க வேண்டுமென்ற அம்மாவின் எதிர்பார்ப்பும் கூட. அடக்க ஒடுக்கமாக புடவை கட்டிக்கொண்டு, செய்திகள் வாசித்து, குடிக்காமல், ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த சமூகம், அதாவது ஆணாதிக்க சமூகம் விரும்புகிறதோ, அப்படி இருக்க வேண்டும் என்கிற அம்மாவின் எதிர்பார்ப்பின் சுருக்கம்தான் அந்தப் பெயர். அதற்கு நேர் மாறான வாழ்வின் பெயர் தான் காமினி. இங்கே ஆணாதிக்க சமூகம் என்பதை ஆண்களாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆண்களுக்கு நாம் பணிந்து இருக்க வேண்டும் என்றெண்ணும் பெண்களுமே கூட ஆணாதிக்க சமூகத்தின் அங்கம்தான். எனவே, கடைசியில் சுதந்திரக் கொடியாக மாறும் காமினி, தன் பெயரை மட்டும் மாற்றவில்லை. தன் மொத்த இயல்பையே மாற்றிக் கொள்கிறாள். ப்ராங்க் ஷோக்கள் அடுத்தவர் சுதந்திரத்தில் எல்லை மீறுகின்றன என அதை மாற்றிக் கொள்வது சரி. ஆனால் தன் இயல்பை, குணத்தை, பெயரை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?
‘சுதந்திரக் கொடியாவே இருந்தாலும் அதோட சுதந்திரம் கொடிக் கம்பம் வரைக்கும் தான்’. படத்தின் இறுதியில் வரும் இந்த வசனத்தை வைத்தும் ஆடை அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்த வசனம் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படவில்லையோ என்று தோன்றுகிறது. நங்கேலி காமினியிடம் சொல்லும் கடைசி வசனம் ‘நமக்குத் தெரிஞ்சவங்கட்ட, அவங்களுக்கு தெரியாம செய்யுறதுக்கு பேரு தான் ப்ராங்க். யார்னே தெரியாதவங்கட்ட இப்படி பண்றதுக்கு பேர் நியூசன்ஸ்’.
இது புரிந்ததா என்று நங்கேலி கேட்கும்போது காமினி சொல்லும் வசனம்தான் அந்த சுதந்திரக் கொடி வசனம். 'The right to swing my fist ends where the other man's nose begins' என்றொரு சொலவடை ஆங்கிலத்தில் இருக்கிறது. இதே நோக்கத்தில் தான் இந்த சுதந்திரக் கொடி வசனமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் இருக்கும் மேற்சொன்ன பல குழப்பங்களால் இந்த வசனம் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘ட்ரெஸ்ஸே இல்லாம கீழ வருவன்னு நினைச்சேன்.. ஆனா நீ அவ்ளோ மோசம் இல்ல’ என்று நங்கேலி சொல்லும் வசனமும் இதற்கு தூபம் இடுகிறது.
ஆடை தான் உன் கவசம், அதை உருவிவிட்டால் ஒரு பெண் கூனிக் குறுகி தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இத்தனை வருடம் நாம் பார்த்த அதே பொதுப்புத்தியைத் தான் ஆடையும் விதைக்கிறது. யாருமே இல்லை என்று தெரிந்தபிறகும் கூட, நிர்வாணத்தில் தான் நான் அழகாய் இருப்பேன் என்று கூறும் காமினி, தன் அந்தரங்கங்களை மறைத்துக் கொண்டு குறுகியபடியே தான் நடக்கிறாள். இந்த இடத்தில் காலா திரைப்படத்தில், போலீஸ்காரர்கள் தன் பேண்ட்டை உருவிய பிறகும், கையை கூனிக் கொண்டு நிற்காமல், பேண்ட்டை எடுத்து மறைக்க முயலாமல், லட்டியை எடுத்து அந்த போலீஸ்காரர்களையே அடிக்கும் புயல் கதாப்பாத்திரத்தை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
கதைக்குள் வருவோம். ஆளே இல்லாத ஒரு கட்டடத்தில் நிர்வாணமாய் மாட்டிக் கொள்கிறாள் காமினி. அதன் பின் நடக்கும் சம்பவங்களிலும் அதன் எதிர்வினைகளிலும் நிறைய செயற்கைத்தனம். மொபைல் உள்ளிட்ட எந்த தொலைத்தொடர்பும் இல்லாமல் மாட்டிக் கொண்டுவிட்டாள் என்பது ஒரு வகை திரைக்கதை. காமினிக்கு மொபைல் கிடைக்கிறது. ஆனால் பேலன்ஸ் இல்லை. டோல் ஃப்ரீ நம்பர்களுக்கு அழைப்புகள் செல்கிறது. மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து, வருகின்ற டெலிவரி பாயை வைத்து தப்பிக்க நினைக்கும் அளவிற்கு யோசிக்கும் காமினி, அந்த பிரியாணியை தன் வீட்டிற்கு சென்று கொடுக்கச் சொல்லி, அதன் மூலம் தன் அம்மாவிடம் பேசியிருக்கலாமே?
மேலும் போலீஸிற்கு ஃபோன் செய்தால், அது மீடியாவிற்கு போகும் என்று நினைப்பது கூட அம்மா, சமூகம் என்கிற தயக்கத்தினால் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெவ்வேறு திருப்பங்களினால் அங்கே ஒரு போலீஸ் டீம் வந்த பிறகும் கூட அவர்களிடம் நிலைமையை எடுத்து சொல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டே இருப்பது ஏன்? இதுபோன்ற Convenient Writing இரண்டாம் பாதி முழுக்க பல இடங்களில் படத்தை தொய்வாக்குகிறது. அதே போல இடைச்செறுகலாக வரும் பல காட்சிகள் - இன்ஸ்பெக்டர் குடும்பத்தின் டிக்டாக், இளையராஜா ராயல்டி, சில இரட்டை அர்த்த வசனங்கள் என ஆங்காங்கே துருத்திக் கொண்டு தெரிகின்றன.
நங்கேலி காமினிக்கு உணர்த்த நினைத்தது என்ன? ப்ராங்க் ஷோவின் எதிர்மறை தாக்கங்களை காட்சிப்படுத்தியிருப்பதும் அவை இன்னொரு மனிதனின் சுதந்திரத்தில் எப்படி அத்துமீறி நுழைகின்றன என்பதும் அவசியமான பதிவுகள் தான். ஆனால் நங்கேலி அதை காமினிக்கு உணர்த்த ஏன் காமினியை நிர்வாணமாக்க வேண்டும், அதன் மூலம் நங்கேலி சாதிக்க நினைத்தது என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல் நங்கேலி போன்ற ஒரு பெண், இன்னொரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, அப்படியொரு சூழ்நிலைக்கு தள்ளுவாளா என்ற கேள்வியும் எழுகிறது.
ஒரு திரைப்படம் பார்வையாளர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அலச வேண்டும். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போடும் பிற்போக்குவாதிகளை ஆடை திருப்திப்படுத்தியிருக்கிறதா இல்லை பெண்ணியவாதிகளை திருப்திப்படுத்தியிருக்கிறதா என்றெழும் விவாதங்களும் முக்கியமானவையே.
முலைவரிக்கு எதிரான நங்கேலியின் போராட்டத்தோடு துவங்கும் கதை, சமகால அத்துமீறல்களுக்கு(?) எதிரான நங்கேலியின் குமுறலோடு முடிவடைகிறது. முலைவரி என்பது பெண்களுக்கு எதிரான ஒரு அடக்குமுறை கிடையாது. ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கு எதிரான ஒரு அடக்குமுறை. சாதியப் பின்புலத்திலேயே முலைவரியை அணுக வேண்டும். அதை வெறும் பெண்ணடிமைத்தனமாக மட்டும் அணுகுவதும், ‘அப்போ முலைய மூட போராட்டம் பண்ணாங்க.. இப்ப முலைய காட்டி போராட்டம் பண்றீங்க’ என்று ஒப்பீடு செய்வதும் தவறாக சமூகப் புரிதல்.
ஆடையை அவிழ்த்து செய்யப்படும் போராட்டத்தையும் கேள்வி கேட்கிறாள் நங்கேலி. பல வருடங்களுக்கு முன்பு மணிப்பூரில் 12 பெண்கள் இந்திய ராணுவத்திற்கு எதிராக நூதனமான ஒரு போராட்டத்தை நடத்தினர். மனோரமா என்ற பெண்ணை விசாரனைக்காக அழைத்துச் சென்ற இந்திய ராணுவம், அவளை கற்பழித்து கொன்று வீசியது. அதற்கெதிராக போராடத் திரண்ட அந்த 12 பெண்களும், தங்கள் ஆடைகள் அனைத்தையும் களைந்து இந்திய ராணுவத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை தொடங்கினர். ‘அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது. எங்களிடம் எங்கள் உடல்தான் இருக்கிறது. உடலே எங்கள் ஆயுதம். நாங்கள் மனோரமாவின் தாய்மார்கள். இந்திய ராணுவம் எங்களையும் கற்பழிக்கப்பட்டும்’ என்ற கோஷத்துடன் உடலை ஆயுதமாக்கிய அந்த பெண்களின் போராட்டம், ‘ட்ரெஸ்ஸை அவுத்துப் போட்டு செய்யும்’ போராட்டம் அல்ல. உலகம் முழுக்க உடல் ஒரு ஆயுதமாய், தீவிர அரசியலாய் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலோ பெண்ணுடல் ஒரு குடும்பத்தின் கௌரவமாய், பரம்பரை மானமாய் மட்டும் பார்க்கப்படுகிறது. அதையே தான் மீண்டும் நிறுவ முற்படுகிறது ஆடை.
‘நான் மானத்தோடு வந்தருவேம்மா’ என்று காமினி மனதிற்குள் அம்மாவிற்கு செய்து கொடுக்கும் சத்தியமுமே அப்படிப்பட்டது தான். பெண் உடலை ஒரு ஆண் பார்த்துவிட்டால் மானம் போய்விடும் என்பதுதான் ஆடையின் இரண்டாம் பாதி திரைக்கதை முன்வைக்கும் சவால் அல்லது Conflict. அதிலிருந்து தப்பிக்கத் தான் ஓடிக்கொண்டே இருக்கிறாள் காமினி. தன் உடலை ஒரு ஆண் பார்ப்பது, அதாவது அத்துமீறி பார்ப்பதே தனக்கு அவமானம் என்கிற எண்ணம் தான், ஒரு பெண் வன்கொடுமை செய்யப்பட்டால் அது அந்த பெண்ணிற்கு அவமானம், அவள் வெளியே தலைகாட்ட முடியாது என்கிற எண்ணத்திற்கான அடிப்படை. வன்கொடுமை என்பது அதை செய்யும் ஆணிற்கான அவமானமே அன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான அவமானம் இல்லை. பெண்களுக்கெதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தியா போன்றொரு தேசத்தில், நமக்குத் தேவைப்படுவது ‘அது உன் தவறல்ல.. உன் மானம் உன் உடலில், உன் யோனியில் இல்லை’ எனும் வார்த்தைகள் தானே தவிர, உன் மானம் உன் நிர்வாணத்தை மறைப்பதில்தான் இருக்கிறது என்கிற பொதுப்புத்தி இல்லை. வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும், மனச்சிதைவு அடைவதற்கும் பின்னால் இந்த எண்ணம் தானே இருக்கிறது?
ஆரம்பத்தில் இருந்து சமூகத்தின் எந்த கட்டுப்பாடுகளுக்கு அடங்காமல் வாழும் ஒரு பெண், இப்படியொரு சம்பவத்திற்கு பிறகு, மனம் திருந்தி, பெயர் மாறி, குணம் மாறி, சமூகம் எதிர்பார்க்கும் அந்த பெண்ணாகவே மாறுவது என்பது நிச்சயம் ஒரு போல்டான படத்தில் வரும் காட்சியும் அல்ல... ஒரு சரியான படம் சொல்லும் செய்தியும் அல்ல. இதில் இருக்கும் நுணுக்கமான அரசியல் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.
ஒரு பெண் இப்படித்தான் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும் என்று ஒரு ஆண் மூலம் சொல்வது ஒருவகை அரசியல். வெளிப்படையான அரசியல். உடனே எதிர்வினைகள் கிளம்பி அது அடித்து நொறுக்கப்பட்டு விடும். அதையே ஒரு பெண் மூலம் சொல்வது இன்னொரு வகை அரசியல். இதுவும் எதிர்வினைகளை கிளப்பி புறம் தள்ளப்பட்டு விடும். கொஞ்சம் தாமதமாக, கொஞ்சம் மென்மையாக. ஆனால் இதே கருத்தை பெண்ணியவாதியாய் காட்டப்படும், பெண் சார்ந்த அத்தனை பிற்போக்குத்தனங்களையும் எதிர்க்கும், சுதந்திரமாய் வாழும் ஒரு பெண் மூலமே சொல்வது இன்னொரு வகை அரசியல். இது முன்னதைப் போன்ற எந்தவொரு பெரிய எதிர்வினைகளையும் கொண்டு வராது. ஏனென்றால் இதை சொல்வதே ஒரு தைரியமான பெண்தானே? அதுவும் அத்தனை பிற்போக்குத்தனங்களையும் எதிர்த்து வாழ்ந்த ஒரு பெண்ணாயிற்றே? அதுவும் அவள் சாதாரணமாக சொல்லவில்லை. ஒரு பதறவைக்கும் சம்பவத்திற்கு பிறகே இதை சொல்கிறாள் என்றால் அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா? ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்? ‘அவளே சொல்லிட்டா.. பாத்த ல?’
இந்த மூன்றாவது வகை அரசியல்தான் மிகவும் ஆபத்தானது. இட ஒதுக்கீடு தேவையில்லை என்று ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனையே சொல்ல வைப்பது போன்றது இது. ஸ்டெர்லைட் தேவை என்று தூத்துக்குடி மக்களையே சொல்ல வைத்து வீடியோ எடுப்பது போன்றது இது. ஆடை படம் முடிவதும் இதே தொணியில்தான்.