மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் சர்ச்சை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சங்கத்தமிழனை சந்தித்து பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியில் ஒரு பகுதி.
சனாதனத்தை ஒழிப்போம் எனப் பேசும் திருமாவளவன் வாயிலிருந்து சாதி புத்தி எனும் வார்த்தை வரும்போதுதானே அது கண்டனத்துக்குரியதாக இருக்கிறது?
ஒருவனுக்கு ஒரு வியாதி இருந்தால் அதை அவனிடம் சொல்லித் தானே ஆக வேண்டும். அது போல தான் அவருக்கு இருப்பது முழுக்க முழுக்க சாதி புத்தி அதைத் தான் நாங்கள் கூறினோம். இளவரசு, கோகுல் ராஜ் படுகொலைக்கு பின்னால் இவர்கள் தானே இருந்தார்கள். 2012ல் பாமக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தலித் அல்லாதோர் என்ற கூட்டமைப்பை உருவாக்கி, ‘டி-ஷர்ட், கூலிங் கிலாஸ் ஜீன்ஸ் உடுத்தி எங்களுடைய பெண்களை எல்லாம் காதல் செய்கிறார்கள்’ என்று பேசி பெண்களை கேவலம் செய்தனர். அப்போது அரசியல் லாபத்திற்காக அப்படி ஒரு சொல்லாடலை பயன்படுத்தினார்கள். அதன் பிறகு தான் அன்புமணி ராமதாஸ் எம்.பியாக மாறினார். அதனால் தான் மீண்டும் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று எம்.பியாக ஆக வேண்டும் என்று இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். கோவிலுக்கு வரக்கூடாது என்று சொல்வது சாதி புத்தி தான். சாதி புத்தியை சாதி புத்தி என்று தானே சொல்ல வேண்டும்.
நான் மட்டுமல்ல ‘இந்த இந்தியா சாதிய கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது; இவர்களுக்கு சாதி புத்தி இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும்’ என்று புரட்சியாளர் அம்பேத்கரே அதைத் தானே சொல்லுகிறார். எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பாலாஜி ஒரு வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் தான். அது போல அவரைத் தொடர்ந்து எங்கள் கட்சியில் பல சாதிகளை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அது போல் நாங்கள், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்களையும் குறிப்பிடவில்லை. அவர்கள் எங்களின் தோழர்கள். நாங்கள் குறிப்பிட்டது அவர்களை தூண்டிய வழக்கறிஞர் பாலுவை தான்.
ஏனென்றால், அங்கு போராடுபவர்கள் சாதாரண மக்கள். படிப்பறிவு அவ்வளவாக உள்ளவர்களா என்பதும் தெரியவில்லை. அந்த சமயத்தில் ஒரு அரசியல் தலைவர், ஒரு வழக்கறிஞர் அவர்களிடம் பேசும்போது, ‘அரசியலமைப்பு சட்டம் 15 மற்றும் 17ன் படி யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வரலாம். அவரை தடுத்துவிட்டீர்கள். அது தவறு நாம் அவரை அழைத்து செல்வோம்’ என்று பேசியிருக்க வேண்டும். அது தான மனித நேயமிக்க மனிதன் செய்யும் செயல். ஆனால், அவர் (வழக்கறிஞர் பாலு) ‘நீ கவலைப்படாதே, நான் இருக்கேன். அய்யா தான் என்னைய அனுப்பினார். அவர்களை கோவிலுக்குள் விடவே மாட்டோம் தடுத்து நிறுத்திடுவோம்’ என அவர்களிடம் சாதி வெறியை தூண்டினால் அது தான் சாதி புத்தி.
1930 ஆம் ஆண்டில் இவர்கள், சத்ரிய குல வன்னியர் மாநாட்டை திறந்து வைக்க தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். அந்த மாநாட்டை திறந்து வைத்த பெரியார், ‘சாதி மீது பெருமை கொள்ளாதீர்கள். ஒவ்வொரு சாதினயரும் தங்களுக்கு பட்டப் பெயர் வைத்து அழைத்து கொள்வதே பெருமையாக எண்ணுகிறார்கள். உங்களுக்கு மேல் பிராமணர் சாதி ஒன்று இருக்கிறது. அவர்கள் யாரும் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சாதியை தூக்கி எறிந்துவிட்டு படியுங்கள்; மனித நேயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; சமதர்மத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். சுய சாதி பெருமை பேசுகிறாய் என்றால் உன்னை அறியாமல் பிராமணர்களை உங்களுக்கு மேல இருப்பதாக ஏற்றுக்கொள்கிறாய் என்று அர்த்தம். அதனால் சாதி புத்தி கொள்ளாதே’ என்று அந்த மேடையில் பேசுகிறார். அன்று தந்தை பெரியார் என்ன கூறினாரோ அதைத் தான் திருமாவளவன் கூறினார்.
‘நாங்கள் எந்த சமூகத்தவருக்கும் எதிரானவர்கள் அல்ல. மேலும் அனைவரிடமும் ஒற்றுமையாக வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் நீங்கள் தான் எங்களை கோவிலுக்கு வரக்கூடாது, தனி சுடுகாடு என்று பிரித்து வைத்திருக்கிறீர்கள். நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் தான். ஆனால் எங்களை நாயை விடக் கேவலமாக நடத்துகிறார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை எங்களுடைய அடையாளத்திற்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறோம்’ என்று அம்பேத்கர் அன்று கூறினார். அவர் கூறி 70 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அந்த நிலை மாறவில்லை” என்று தெரிவித்தார்.
முழு வீடியோவை காண: