இந்தியப் பிரதமரை தமிழ் பத்திரிகைக்காக தனி பேட்டி காண்பது பகீரத பிரயத்தனம் என்பது தெரிந்த்தும், நக்கீரன் தனது முயற்சியை உறுதியுடன் தொடங்கியது. தேசிய ஏடுகள் தவிர, வேறு எந்த மாநில மொழி ஏட்டிற்கும் பிரதமர் வாஜ்பாய் இதுவரை சிறப்பு பேட்டி அளித்ததில்லை. 1998 செப்டம்பரில் முதல்முறையாக நக்கீரனுக்கு பேட்டியளித்திருக்கிறார் பிரதமர் வாஜ்பாய்.
நக்கீரன் : இந்தியாவின் பிரதமராக ஒருநாள் வருவோம் என்று நீங்கள் எப்போதாவது கனவு கண்டதுண்டா?
வாஜ்பாய் : நாட்டுக்கு சேவை செய்ய, மக்கள் எப்படிப்பட்ட பொறுப்புகளை எனக்கு அளித்தாலும், அதனை ஏற்க நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். எனினும் இன்ன பொறுப்புத்தான், அதாவது பிரதமர் பதவிதான் வகிக்க வேண்டும் என்று நான் சொந்த முறையில் ஒருபோதும் கருதியதில்லை. என்னைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பது ஒரு அலங்காரப் பதவி அல்ல. இத்திய நாட்டிற்கு தொண்டு செய்ய கிடைத்த நல்லதோர் வாய்ப்பு என்றே நான் கருதுகிறேன்.
கடந்த 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக பாராளுமன்றத்தில் நான் எதிர்கட்சி வரிசையிலேயே அமர்ந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதுதான் அரசுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனினும், எதிர்க்கட்சியில் பணியாற்றிய அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி என்னுடைய அணுகுமுறை என்பது எப்போதும் ஒரேமாதிரியானதுதான்; அது நான் மக்களின் ஊழியன் என்பதே!
நக்கீரன் : அரசியல் பணிகள் பொதுத்தொண்டுகளுக்கு மத்தியில் கவிதைகள் எழுத எப்படி முடிந்தது ?
வாஜ்பாய் : முதலில் நான் ஒரு கவிஞன்; அப்புறம்தான் நான் அரசியலுக்கு வந்தேன். நான் குவாலியர் நகரத்தில் பிறந்தேன். நான் பிறந்த அந்த மண் கவிதை, இசை போன்ற கலைகளை வளர்த்துப் பெருமை பெற்ற பூமி! குவாலியர் நகரின் காற்றிலும்கூட கவிதையும் இசையும் கலந்து மணம் வீசிடும் என்கிற அளவுக்கு கலை வளர்த்த நகர் அது. அதுவும் தவிர என்னுடைய குடும்பமும் கலைக்குடும்பம்தான். எனது தாத்தா சம்ஸ்கிருத மொழியில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவர் என்பதோடு, மிகச்சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தவர்; தாத்தாவைப் போலவே எனது தந்தையும் கவிஞரே.
அப்பா கலந்துகொள்ளும் கவி அரங்கங்களுக்கெல்லாம் நானும் போவேன். சின்னஞ்சிறு வயது முதலே எனக்கு கவிதைகளில் ஒரு ஈடுபாடு உண்டு; நாளாவட்டத்தில் அது என்னை கவிதை எழுதத் தூண்டியது; மெள்ள மெள்ள நான் கவிஞன் ஆனேன்!
நக்கீரன் : அரசியலில் ஈடுபட்டதற்காக எப்போதாவது நீங்கள் வருத்தப்பட்டதுண்டா?
வாஜ்பாய் : ஒருபோதும் இல்லை. அரசியலில் ஈடுபட்டது என்பது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட காரியமாகும். எனது இளமைப் பருவத்தில் நான் விரும்பி ஏற்றுக்கொண்ட சில இலட்சியங்கள் கொள்கைகளின் அடிப்டையிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் நான் மாணவர் இயக்கங்களில் தீவிர பங்குகொண்டேன். கல்லூரி நாட்களில் அரசியலில் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடே இயற்கையாக என்னை தேசிய அரசியலில் கொண்டுவந்து சேர்த்தது ஆகவே அரசியலில் ஈடுபட்டதற்காக வருந்தவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. எனினும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் கவிதை, இலக்கியம் சங்கீதம் போன்ற துறைகளில் ஈடுபட்டு சாதனை குவிக்க முடியாத வகையில் அரசியல் ஈடுபாடு எனது நேரம் முழுவதையும் ஈர்த்துக்கொண்டு விட்டது என்பது தான் அது.