திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் பிரபலங்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினார்கள். இதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது, "எந்த விலங்குகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு சிங்கத்திற்கு இருக்கிறது. பின்னோக்கி திரும்பி பார்க்கும் ஆற்றல் அதற்கு மட்டும்தான் இருக்கிறது. அதற்கு பேர்தான் அரிமா நோக்கு. அது மட்டும் அரிமா நோக்கு அல்ல, படுத்துக்கொண்டிருந்த சிங்கம் எழுந்த உடன், முதலில் வலது பக்கம் பார்க்கும், பிறகு இடது பக்கம் பார்க்கும், பிறகு பின்பக்கம் பார்த்த பிறகுதான், முன்னோக்கி செல்ல பார்க்கும். தளபதிக்கும் அந்த அரிமா நோக்கு பார்வை உண்டு என்று சொல்வதில் பெருமை அடைகின்றேன். தளபதி எழுந்து நின்று பின்பக்கம் பார்க்கிறார், அதில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இருக்கிறார்கள். இடது பக்கம் பார்க்கிறார் அவருடைய எதிரிகள் தெரிகிறார்கள், வலது பக்கம் பார்க்கிறார்கள் அவருடைய நண்பர்கள் தெரிகிறார்கள். பிறகு முன்பக்கம் பார்க்கிறார் கிரீடமும், சிம்மாசனமும் தெரிகின்றது.
தலைவரின் மகன் என்பதற்காகவே அவர் மீது எனக்கு பாசம் அதிகம் இருக்கின்றது. அவரை நான் உற்று நோக்கி வருகிறேன். ஒருவனின் பலவீனத்தை அறிய அவனிடம் பதவியை கொடுத்துப்பார் என்பார்கள், ஒருவனின் பலத்தை அறிய அவரிடம் அதிகாரத்தை பறித்துப்பார் என்பார்கள். அந்த வகையில் எட்டு ஒன்பது ஆண்டுகளாக எந்த அதிகாரமும் இல்லாமல், இந்த இயக்கத்தை முதல் நிலையில் கட்டிகாப்பது என்பது மிக ஆச்சரியமான ஒன்று, யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு காரியம். அதிகாரத்தை பறித்த பிறகும் எவன் ஒருவன் எஞ்சி நிற்கிறானோ அவனே பலசாலி. அந்த வகையில் அவரின் உழைப்பு என்பது நிகரில்லாதது. தளபதி என்பவர் கலைஞர் நமக்கு விட்டுச்சென்ற கொடை, இந்த திராவிட இயக்கத்தை காக்க ஒரு ஆள் தேவைப்படுகிறார். அதை தளபதி நமக்கு ஈடுசெய்து வருகிறார். அவரின் பாதை சரியாக இருக்கின்றதா? அவர் தன்னை சரியாக தகவமைத்துக் கொள்கிறாரா என்பதை நான் தொடர்ந்து பார்த்து வருகின்றேன். அந்த பணியை அவர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றார்.
இந்த தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு கட்சிகள் மட்டும் தான் கட்டமைப்பு உள்ள கட்சிகள். பத்திரிக்கை நண்பர்கள் இதனை தயவு செய்து திரித்து எழுத வேண்டாம். தமிழகத்தில் விஞ்ஞான பூர்வமாக கட்டமைப்பு உள்ள கட்சிகள் ஒன்று திராவிர முன்னேற்றக் கழகம், மற்றொன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இதை யாரும் மறுப்பதிற்கில்லை. இதிலிருந்து ஒப்பிட்டு பார்ப்பதில் இருக்கின்றது உங்களின் பெருமை. அதிகாரம் மறுக்கப்பட்ட இந்த காலத்தில் இந்த இயக்கத்தை இவ்வளவு உயரம் கட்டி எழுப்ப முடியும் என்றால் அதற்கு காரணம் கலைஞர், தளபதியின் அளவிட முடியாத உழைப்பு தான். அறிவாலயத்தின் அடித்தளத்தை திடமாக கலைஞர் உருவாக்கி வைத்திருக்கிறார், அதில் உயரமான கட்டடமாக தளபதி எழுந்து நிற்கிறார்" என்றார்.