உதயநிதியால் திமுகவுக்கு லாபமா? நஷ்டமா?

இந்தியா முழுவதும் எல்லாக் கட்சிகளிலும் வாரிசுகள் பொறுப்புகளுக்கு வந்தாலும் திமுக மட்டுமே வாரிசு அரசியலில் பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
இதற்கு காரணம் திமுக மீதான வெறுப்பா? கலைஞர் மீதான காழ்ப்புணர்ச்சியா என்பது இன்னமும் விவாதப் பொருளாகவே இருக்கிறது.
திமுகவை கலைஞர் தனது குடும்பக் கட்சியாக மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டை இன்றைக்கு இருக்கிற இளம் தலைமுறையினர் வரை பரப்பி இருக்கிறார்கள். ஆனால், அந்த தலைமுறையினருக்கு பல குடும்பக் கட்சிகளை தெரியவே இல்லை என்பது ரொம்பவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தனது கொள்கையிலும், நடவடிக்கைகளிலும் தீவிரமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடைய செயல்பாடுகளிலோ, முடிவுகளிலோ குறை கண்டுபிடிப்பவர்கள் தனியாக கட்சி தொடங்கியிருக்கிறார்கள். தோழர் ஜீவா, அறிஞர் அண்ணா ஆகியோர் அப்படித்தான் தனிக்கட்சி தொடங்கினார்கள்.
அண்ணா தனிக்கட்சி தொடங்கிய பிறகும்கூட அவருடைய முடிவுகளை விமர்சித்த ஈ.வே.கி.சம்பத் உள்ளிட்டோர் தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார்கள். திமுகவில் எம்ஜியாரை ஓரங்கட்டுவதற்காக, தனது மூத்த மகன் மு.க.முத்துவை கட்சிக்குள்ளும் சினிமாவிலும் கலைஞர் அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட பிளவு ரொம்பவும் முக்கியமாக பேசப்பட்டது.
திமுகவை தனது குடும்பச் சொத்தாக மாற்ற கலைஞர் நினைக்கிறார் என்று அப்போது விமர்சனம் எழுந்தது. எம்ஜியார் பிளவால் மூத்தமகனின் சினிமா வாய்ப்பும், அரசியல் வாய்ப்பும் அடிபட்டுப் போனது. இந்நிலையில்தான் நெருக்கடி நிலை காலத்தில் கலைஞரின் இன்னொரு மகனான ஸ்டாலினை மத்திய அரசாங்கமே அரசியலுக்கு கொண்டுவந்தது.

ஸ்டாலினை மிசாவில் கைது செய்து சிறையில் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கி, அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு வழிவகுத்தது இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு.
ஆனால், எம்ஜியார் பிளவுக்குப் பிறகு கட்சியையும் ஆட்சியையும் திறமையாக தக்கவைத்த கலைஞர், நெருக்கடி நிலைக் கொடுமைகளையும் தாண்டி கட்சியை காப்பாற்றினார். இது கட்சியை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியது. அதேசமயம், தனது மகன் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டுவருவதில் ஒரு தயக்கம் அவருக்குள் இருந்தது. என்றாலும் கட்சிக்கு இளைஞர்கள் இழுக்க வேண்டும் என்பதற்காக இளைஞர் அணியைத் தொடங்கியபோது அந்த அணிக்கு ஸ்டாலினை பொறுப்பாளராக நியமித்தார்.
ஸ்டாலினும் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து இளைஞர் அணியை பலமிக்கதாக உருவாக்கினார். திமுகவுக்கு இணையாக இளைஞர் அணி வளர்ச்சி அடைந்தது. ஆனால், ஸ்டாலின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுப்பதை கட்சிக்குள் ஒரு கோஷ்டி எதிர்த்தது. ஸ்டாலினுக்கும் அழகிரிக்குமே ஒத்துவரவில்லை என்றார்கள். அதனால்தான் அழகிரியை மதுரைக்கு அனுப்ப முடிவு செய்தார் கலைஞர். ஆனால் அழகிரியை வைத்து பொன்முத்துராமலிங்கம் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.
அப்போதே திமுகவை தனது குடும்பக் கட்சியாக்கிவிட்டார் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஸ்டாலினை திமுக தலைவராக கொண்டுவரவே கலைஞர் திட்டமிடுவதாக ஒரு புரளி பரவியது. அதை ஊதிப்பெரிதாக்கி, வைகோவும் தனது பங்கிற்கு கட்சியைப் பிளந்தார். ஆனால், இன்றுவரை ஸ்டாலின் செயல்தலைவராக மட்டுமே உயரமுடிந்திருக்கிறது.

ஆனால், இடையில் முரசொலி மாறன் குடும்பத்திலிருந்து தயாநிதி மாறன், கலைஞரின் மகள் கனிமொழி என்று அடுத்தடுத்து பொறுப்புகளை கொடுத்தபோது கட்சிக்குள் கோஷ்டிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
2016 தேர்தலின்போது திமுகவில் குடும்ப ஆதிக்கம் என்ற பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்தது. அப்போது திமுகவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும், திமுக மீதான மக்கள் எதிர்பார்ப்பு குறி்த்தும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர், இனிமேல் திமுகவில் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வரமாட்டார்கள் என்றார்.
ஆனாலும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். 2016 தேர்தலில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கவும் செய்தார். கட்சிக்குள் மறைமுகமாக உதயநிதி செல்வாக்கு செலுத்துவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்தான், உதயநிதி நேரடியாகவே அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். கட்சிக்கு உழைப்பதற்காகவே வந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், அழகிரி கட்சிக்கு வந்தபோதும் இதையே சொன்னார் என்று ஒரு கோஷ்டி கிண்டல் செய்கிறது. உதயநிதியின் படங்கள் அனைத்துமே நன்றாக போகவில்லை என்ற நிலையில் அவர் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு என்ன பயன் இருந்துவிடப் போகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். உதயநிதியின் படங்களைக்கூட திமுகவினரில் பெரும்பகுதியினர் விரும்பிப் பார்ப்பதில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும் அவர் ரசிகர்களாக பெறவில்லை. சரளமாக பேசவும் தெரியவில்லை. பிறகு எப்படி இவர் கட்சிக்கு உதவியாக இருப்பார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அவருக்கு பொறுப்பா கொடுத்திருக்கிறார்கள்? தொண்டராக ஒரு கட்சிக்குள் வேலை செய்ய அவருக்கு உரிமையில்லையா என்றும் சிலர் கேட்கிறார்கள். அதேசமயம், கலைஞரின் குடும்பத்தில் செயல்தலைவரின் மகன் என்ற தோரணையில் நுழையும் ஒருவரை எப்படி சாதாரணத் தொண்டனாக கருதமுடியும். எல்லாத் தொண்டனுக்கும் மீடியா வெளிச்சமும், மைக்குகளும் கிடைத்துவிடுமா என்றும் வினா எழுப்புகிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும் திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்கிறவர்களின் வாய்க்கு மேலும் ஒரு பிடி அவலாகத்தான் உதயநிதி இருப்பார் என்றே பலரும் கருதுகிறார்கள்.
-ஆதனூர் சோழன்