தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை பாலவாக்கத்தில் கடந்த 9ம் தேதி 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்றத்திற்கான 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். அதில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே தோற்றார். அந்த வேட்பாளர் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக உள்ளார். அந்த வேட்பாளர் வாயைத் திறந்தால் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டுகள் வந்து விழும். ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்னும் வாய் திறந்து பேச ஆரம்பிக்கவில்லை. எங்கள் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் தான். அவர் அந்தப் பக்கம் பேச ஆரம்பித்தால் மீட்டர் மாதிரி ஓட்டுகள் வந்து விழும்” என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நாம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுசாமியிடம் கேட்டோம்.
இது குறித்து பேசிய அவர், “அவர் மோடியைப் பற்றி சொல்ல நினைக்கிறார். ஆனால், அவரால் அதைச் சொல்ல முடியவில்லை. மோடி வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதுமே; கண்டதையும் உளறிக்கொண்டு இருக்கிறாரே; ஆபத்தாக இருக்கிறதே என்பதை மாற்றி இளங்கோவன் என்று சொல்கிறார். இளங்கோவன் பேசினால் உங்களுக்கு லாபம் என்றால் நீங்களே (பாஜக) இரண்டு கூட்டங்களை தயார் செய்து கொடுங்கள். உங்கள் மேடைகளில் நானே அவரை அழைத்து வந்து பேச வைக்கிறேன்.
நேற்று கூட ஏறத்தாழ நானூறு பாஜகவினர் அதே தொகுதியில் திமுகவில் இணைந்துள்ளனர். அதுவே அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இருக்கும் இரண்டு மூன்று பேரையாவது கட்சியில் நிலைக்க வைக்க அண்ணாமலை முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.