Skip to main content

பிசிசிஐ-யில் பதவியில் இருக்கும் அமித்ஷா மகன் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடியவரா..? -ஆளூர் ஷாநவாஸ் கேள்வி

Published on 26/11/2020 | Edited on 26/11/2020
gj

 

 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில்ல தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில் ஆச்சர்யமாக அதிமுக, பாஜக கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகம் வந்த அமித்ஷா இதனை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதியை வைத்து ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், அமித்ஷாவின் வரவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா, திமுகவுக்கு அது நெருக்கடியை கொடுக்குமா? போன்ற பல்வேறு கேள்விகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

தமிழக அரசியல் களம் தேர்தலுக்கு தயாரான ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதி ஆகியுள்ளது. இது வெற்றி கூட்டணி என இரண்டு கட்சிகளும் கூறியுள்ளன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அதிமுக பாஜக கூட்டணி எங்களுக்கு சவால் என்ற பேச்சு எழுவதற்கே வாய்ப்பில்லை. அது எங்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்புவதற்கும், அவர்களை களத்தில் வீழ்த்துவதற்கும் இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இது வெற்றி கூட்டணி என்று அவர்கள் கூறலாம். எங்களுக்கு வெற்றியை ஏற்படுத்த அமைக்கப்பட்ட கூட்டணி என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் அது எங்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. எனவே அவர்கள் இணைந்து தேர்தலை சந்திக்கும்போது எங்களுக்கு வெற்றியை தட்டுவதில் எவ்வித இடைஞ்சலையும் அவர்கள் கொடுக்க போவதில்லை என்பது நூறு சதவீதம் நிஜம்.

 

நாடாளுமன்ற தேர்தலை போல் சட்டமன்ற தேர்தலையும் நினைக்கிறீர்களா?

 

மத்திய அரசின் நிலைபாட்டில் என்ன மாற்றம் வந்திருக்கிறது. அப்போது எப்படி ஏதேச்சதிகாரத்தோடு இருந்தார்களோ அதைபோலத்தான் தற்போது இருக்கிறார்கள். தமிழக அமைச்சரவை கூடி தமிழ்நாட்டுக்கு இதெல்லாம் தேவை என்று கூறி மசோதாவை அனுப்பினால் அதை தூக்கில் குப்பையில் போடுகிறார்கள். தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் வாக்கு கேட்க தமிழகம் வருவார்கள் என்று தெரியவல்லை. அவர்கள் இதற்கெல்லாம் அச்சப்பட மாட்டார்கள். தேர்தல் களத்திற்கு வருவார்கள், ஆனால் அங்கு தோல்வியை சந்தித்துவிட்டு செல்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

 

ஆனால் அதிகாரத்தில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று கூறி இருக்கிறார்களே? 

 

அவர்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கிறது. மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது என்ற கேள்வி இயல்பாகவே எழும் இல்லையா? மக்களுக்கு தேவையான எதையும் இந்த இரண்டு கட்சிகளும் இதுவரை செய்யவில்லை. எனவே அவர்கள் மக்களை சந்திப்பதில் தோல்வியை பெற உள்ளனர். இருவருக்கும் தேவையானதை இதுவரை மத்திய அரசு இணக்கமாக செய்து வருகிறது. அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களும் அவர்களின் சகாக்களும் மத்திய அரசினால் நல்ல பலன்களை இதுவரை அடைந்துள்ளனர். 

 

சேகர் ரெட்டி விவகாரம் ஊத்தி மூடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு என்ன ஆனது என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? எனவே மத்திய அரசு இவர்களின் நலனுக்கான அரசாக தொடர்ந்து உள்ளது. தமிழகம் கேட்பதை எதையும் அவர்கள் தரவில்லை. நீட் விலக்கு கேட்டோம், ஏழு தமிழர் விடுதலை கேட்டோம், கொடுக்கவில்லை. ஆனால் அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து வேண்டி யாராவது போராட்டம் செய்தோமா?  அதை எதற்கு கேட்காமலே தர முயல்கிறார்கள். 

 

எதிர்கட்சியாக இருக்கும் போதே திமுக பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த காரணமாக இருந்திருக்கிறது என்கிறீர்கள், ஆனால் வெற்றிபெற்று அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசு மாறபோவதில்லையே? 

 

திமுக கூட்டணி சொல்வதைத்தானே தமிழக அரசு ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. எந்த திட்டங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் எங்களின் அழுத்தம் நிச்சயம் இருக்கும். மக்கள் பாஜகவுக்கு 100 வருடத்துக்கு ஆட்சியை பட்டா போட்டா கொடுத்துள்ளார்கள். மக்களின் முடிவுக்கு ஏற்ப இந்த ஆட்சி நிச்சயம் மாறும்.

 

ஊழல் அரசு என்று காங்கிரஸ் திமுக கூட்டணியை மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளாரே? 

 

அதை இவர் எங்கே நின்று சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். ஊழல் செய்து தண்டனை பெற்ற ஒரு கட்சியின் முன்னிலையில் நின்று சொல்கிறார். அவருக்கு பக்கத்தில் ஓபிஎஸ் நிற்கிறார். அவருடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினர். இந்த நிலையில் அவர் வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று கூறுகிறார். அவருடைய மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பதவியில் இருக்கிறாரே அவர் என்ன சச்சின் கூட கிரிக்கெட் ஆடியவரா? அவர் எப்படி அந்த இடத்திற்கு சென்றார். எனவே அமித்ஷாவின் வாதம் அவருக்குத்தான் சரியாக இருக்கும் என்பதே எங்களுடைய கருத்தாகும்.