நாடு முழுவதும் சிஏஏ தொடர்பான வாத பிரதிவாதங்கள் எழுந்து வரும் நிலையில் இதுதொடர்பான எதிர்ப்பு கூட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் அத்தகைய கூட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்புக்களை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடி பேசினார். விஜய் படத்தின் வெற்றியையும், ரஜினி படத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை பற்றியும் அவர் பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " சினிமாவில் இருப்பவர்கள் பெயர் வைப்பதிலும் கூட தற்போது புதிய முறைகளை பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது. அது சரியாக ஓடவில்லை. அதனுடைய பெயர் நல்லா இருந்த ஊரும், நான்கு பேரும். இப்போது ஒரு சின்ன வார்த்தை மட்டும் மாறி தற்போது ஆட்சி நடக்கிறது. அதாவது நல்லா இருந்த நாடும், நான்கு பேரும். தில்லியில் இரண்டு தாடி, இங்கே இரண்டு கேடி என இவங்கள் நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் இருப்பவர்களை தெருவில் நிறுத்துகிறார்கள். அவர்களும் நிம்மதி இல்லாமல் தூக்கமில்லாமல் இருக்கிறார்கள். மதத்தலைவர்கள் என்பவர்கள் மக்களை நல்வழிப்படும் நோக்கில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் அவர் மதத்தலைவர்கள் இல்லை என்றால் அவர்கள் மடத்தலைவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னிடம் கூட நேற்று வரைக்கு ஒருவரை காட்டி இவர்தான் சூப்பர் ஸ்டார், இவர் படம் நடித்தால் பல கோடி வசூலாகும் என்று கூறி வந்தார்கள். நானும் அதை நம்பினேன்.
ஆனால் தற்போது திடீரென நடிகர் விஜய் நடித்த பிகில் படம் 300 கோடி வசூல் ஆனதாக சொல்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. வருமானவரித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்த படம் 300 கோடியையும் தாண்டி வசூல் செய்ததாக கூறுகிறார்கள். இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் மற்றொரு நடிகர் நடித்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு அந்த படத்தால் இழப்பு ஏற்பட்டதாக கூறி போராடுகிறார்கள். அப்படி என்றால் உண்மையான சூப்பர் ஸ்டார் யார், தளபதி விஜய்தான் தற்போது உண்மையான சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று தற்போது கேட்கிறார்கள். முதலில் வரலாற்றை தெரிந்துகொண்டு பேசுங்கள். நீங்கள் தற்போது கொடியேற்றுகிறீர்களே அந்த செங்கோட்டையை கட்டியது ஒரு முஸ்லிம் மன்னர் தானே? இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்கள் அவர்கள் தானே, எதையாவது தெரிந்துகொண்டு பேசுகிறீர்களா? வாய்க்கு என்ன தோன்றுகிறதோ அதை பேசினால் அனைவரும் அதை உண்மை என்று ஏற்றுக்கொள்வார்களா? உங்களை பதவியில் அமர வைத்ததால் நீங்கள் அவ்வாறு நினைக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆனால், மக்கள் தற்போது கொதித்துள்ளார்கள், அவர்களுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லை என்றால் காலம் உங்களுக்கு பதில் சொல்லும்" என்றார்.