Skip to main content

“உங்க தாத்தாவையே பார்த்தவர் கார்கே” - மோடியை வறுத்தெடுத்த திருச்சி வேலுச்சாமி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Trichy velusamy Interview

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் அகில இந்திய அளவில் உள்ள பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்தும், சமகால அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஈடுபாட்டோடு செயல்பட்டால் நாட்டில் எதுவுமே சாத்தியம் தான். அதுபோல்தான் ஒத்த கருத்துடைய, இந்திய நாட்டின் நலனை விரும்பும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்தும். நாடு முழுவதும் மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிரான ஒரு மனநிலை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய தன்னம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற சிந்தனையுடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் இந்த ஆட்சியை நிச்சயம் வீழ்த்த முடியும். இதற்கான தீர்மானம் தான் சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.

 

பத்தாண்டு காலத்தில் நாங்கள் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கிறோம், அதனால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்று சொல்லும் தைரியம் பாஜகவுக்கு இருக்கிறதா? ஒரு மதம், ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என்று நாட்டு மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ளது பாஜக அரசு. எனவே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தவறான கனவு காண்பது பாஜக தான். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை 100 சீட்டுகளுக்குள் அடக்கிவிடலாம் என்று நிதீஷ் குமார் சொன்னது மிகச் சரி.

 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு இடத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் கூலிக்காகத் திரண்டவர்களா? இதை விமர்சிக்கும் துக்ளக் குருமூர்த்தி கனவுலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வருவது அவருக்கு நல்லது. நாட்டு மக்களிடையே தற்போது ஒரு அமைதிப் புரட்சி ஏற்பட்டுள்ளது. ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு அரசியலைப் பார்ப்பவர்களுக்கு அது புரியாது. 

 

நான் டீ விற்றவன், ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் மோடி தினமும் தன்னுடைய மேக்கப்பிற்கே லட்சக்கணக்கில் செலவழிக்கிறார். அவர் போல் அல்ல மல்லிகார்ஜுன கார்கே. 50 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அவர், மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்பவர். எனவே மோடிக்கு இதெல்லாம் புரியாது. இந்த நாட்டின் பிரதமராக ஒரு தலித்தை அறிவிக்க பாஜகவால் முடியுமா? பட்டியலினத்தைச் சேர்ந்த, நீண்ட அரசியல் அனுபவமுள்ள கார்கேவை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதால் அவருக்கு ஆதரவாகப் பேசுவது போல் நடிக்கிறார் மோடி. உங்களுடைய தாத்தாவையே பார்த்தவர் கார்கே. தாமரை எப்போதும் சாக்கடையில் தான் மலரும். தற்போது மக்கள் தெளிவாகி விட்டனர். இனி பாஜகவால் வெற்றி பெற முடியாது.