மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தமிழகத்தின் பெரிய கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. எம்.பி. சீட்டைக் கைப்பற்ற, கோதாவில் குதித்துள்ளனர் கட்சிப் புள்ளிகள். யாருக்கு எந்த தொகுதி என்ற பரபரப்பிற்கிடையே, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் உள்ளூர் வேட்பாளரா, வெளியூர் வேட்பாளரா என பட்டிமன்றம் நடக்கிறது.
திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், திருவரங்கம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் இப்போதைய திருச்சி எம்.பி.தொகுதி. இத்தொகுதியில் இந்து, கிறிஸ்தவ பிள்ளைமார் ஓட்டுகள் பெரும்பான்மையாகவும் அதற்கடுத்து முறையே தலித், இஸ்லாமியர்கள், கள்ளர், முத்துராஜா, உடையார், பிராமணர் ஓட்டுகளும் இருக்கின்றன.
1980-ல் வெற்றி பெற்ற தி.மு.க.வின் என்.செல்வராஜ், 84, 89, 91, 96-தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரசின் அடைக்கலராஜ், இந்த இருவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 98, 99-ல் சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க. சார்பிலும், 2004-ல் தஞ்சையைச் சேர்ந்த எல். கணேசன் ம.தி.மு.க. சார்பிலும் எம்.பி.யானார்கள். 2009, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.குமாருக்கு சொந்த ஊர்... இத்தொகுதிக்குட்பட்டதும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்ததுமான கந்தர்வக்கோட்டை என்றாலும் தற்போது திருச்சியிலேயே செட்டிலாகிவிட்டார். இந்தமுறையும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவருடன் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், அருள்செந்தில் ராம், ராமலிங்கம் உள்ளிட்ட 10 பேர் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
வருகிற தேர்தலில் பல கட்சிகளிலும் வெளியூர் வி.ஐ.பி.க்கள் திருச்சியை நோக்கி தங்களது பார்வையைத் திருப்பியுள்ளதால், உள்ளூர் வி.ஐ.பி.க்கள், இப்போதே உஷார் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர். இந்த முறை விருதுநகர் தனக்கு தோதுப்படாது என நினைத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடியில் களம் இறங்கலாமா என நினைத்தபோது, அங்கே தி.மு.க.வின் கனிமொழி, இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டார். தமக்கு திருச்சி தான் தோதுப்படும் என்ற எண்ணத்துடன், தி.மு.க. தலைமையுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்து, தொகுதி முழுவதும் ஒரு மாதமாக தொடர்ச்சியாக கூட்டங்களையும் நடத்தி முடித்துவிட்டார் வைகோ. 2004-ல் தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வின் எல்.கணேசன் திருச்சியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் கணக்குப் போட்டு, தி.மு.க. மா.செ. கே.என்.நேருவிடம், லோக்கல் ம.தி.மு.க. புள்ளிகள் தெரிவித்தபோது, “""வைகோ எவ்வளவு பெரிய தலைவர், அவருக்கு எதுக்கு அலைச்சல். அதனால எங்க தலைவரிடம் பேசி ராஜ்யசபா சீட்டை வாங்கச் சொல்லுங்க''’என நேரு சொன்னதும் லேசாக ஜெர்க்காகிவிட்டனர் ம.தி.மு.க. புள்ளிகள். அவர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பும்போது, ""ம.தி.மு.க.வைச் சேர்ந்த நம்மூரு டாக்டரம்மா ரொக்கையாவுக்கு சீட் கொடுத்தா, இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை மொத்தமா வாங்கி ஜெயிக்க வைக்கலாம்''’’என சொல்லியுள்ளார் நேரு.
தி.மு.க. நின்றாலும் கூட்டணிக் கட்சிகள் நின்றாலும் உள்ளூர் வேட்பாளர்தான் என்பது கே.என்.நேருவின் கணக்கு.
நேருவின் எண்ண ஓட்டம் இப்படி இருக்க, தனது மாவட்டமான புதுக்கோட்டை, திருச்சி தொகுதிக்குள் வருவதால், தமிழக காங்கிரசின் மாஜி தலைவரான திருநாவுக்கரசருக்கும் திருச்சி மீது ஆசை வந்துவிட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி இல்லாவிட்டாலும் எம்.பி. சீட் வாங்கிவிடும் நம்பிக்கையில் உள்ள திருநாவுக்கரசர், கடந்த வாரம் நேருவிடம் பேசியிருக்கிறார். "மொதல்ல சீட்டை வாங்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம்'’என்றிருக்கிறார் நேரு.
1999 எம்.பி. தேர்தலில் லோக்கல் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜை வீழ்த்தி தி.மு.க. கூட்டணியில் நின்ற பா.ஜ.க. வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலத்தை ஜெயிக்க வைத்தார் நேரு. அதற்குப் பரிகாரமாக இந்தமுறை அடைக்கலராஜின் மகன் ஜோசப்லூயியை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினால், ஜெயிக்க வைக்கலாம் என்பது நேருவின் வியூகம். எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜோசப்லூயியை திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நேரு. ஏற்கனவே ஸ்டாலின் குடும்பத்திற்கு அறிமுகமானவர், ராகுல்காந்தியை தலைவராக முன்மொழிந்த, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரில் ஒருவர். இதெல்லாமே ஜோசப்லூயிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு பிரகாசமா இருக்கு என்கிறார்கள் திருச்சி காங்கிரஸ் புள்ளிகள். வேறு கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, எம்.பி.வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையிலிருந்து 15 சி தரப்போவதாக தகவல் வெளியானதால், தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகனும் இன்னும் சிலரும் வேட்பாளர் ரேஸில் குதித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே திருச்சியை குறிவைக்கும் வைகோ எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது பா.ஜ.க. தி.மு.க. பற்றியும் கலைஞர், ஸ்டாலின், கி.வீரமணி குறித்தும் வைகோ பேசிய பழைய பேச்சுக்கள் அடங்கிய மீம்ஸ்களை ரெடியாக வைத்துள்ளனராம் பா.ஜ.க.வினர்.