அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுத்துப் போட்டதில் எடப்பாடி பழனிசாமியின் சாமர்த்தியம் வெளிப்பட்டாலும், கடந்த தடவை போலவே, தாமரையோடு பட்டும் படாமலும் தொடர்கிறது பாமகவின் நட்பு.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த பாமக, தருமபுரியில் மட்டுமே வென்றது. அப்போது பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்தன. கூட்டணிக் கட்சிகளிடையே இருந்த ஒத்துழையாமை காரணமாக, தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே இக்கூட்டணி வென்றது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி உடைந்தது,
தற்போது 7+1 என்று சீட் ஒதுக்கீடானவுடன், தைலபுரத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுகவை மட்டும் அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார் ராமதாஸ். 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது ராமதாஸுக்கு 6 சீட் கொடுத்தார் ஜெயலலிதா. 6 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, தா.பாண்டியன், ஆர்.வரதராஜன் ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்தார் ஜெயலலிதா. அப்போது ராமதாசுக்கு அழைப்பில்லை.
கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி, அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேநாளில்தான் பாஜகவுக்கும் 5 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், விருந்துக்காக தைலாபுரம் தோட்டக்கதவு பாஜகவுக்கு மட்டும் திறக்கவில்லை. அன்று ஜெயலலிதா தேர்தலுக்குப்பின் செய்ததை, இன்று ராமதாஸ் தேர்தலுக்கு முன்பே செய்திருக்கிறார்.
பிப்ரவரி 22-ஆம் தேதி இரவு ராமதாஸ் விருந்து கொடுத்தார். அதே நாளில் ராமநாதபுரத்தில் நடந்த பிஜேபி நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். என்டிஏ கூட்டணி என்று விளித்த அவர், 35 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அதற்கு முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்று முழங்கினார். ஆனால், கூட்டணிக் கட்சி என்ற குறைந்தபட்ச மரியாதையைக் கூட பாஜகவுக்கு தராமல், விருந்துக்கும் ராமதாஸ் அழைக்கவில்லை. அதேபோல், ராமதாஸைப் பொறுத்தவரையிலும் இது வெற்றிக் கூட்டணி; மக்கள் நலன் காக்கும் கூட்டணி என்று சொல்கிறாரே தவிர, என்.டி.ஏ கூட்டணி என்று சொல்ல மறுக்கிறார். அதுபோலவே, ஊழல் கட்சி என்று அதிமுகவை விமர்சித்துவிட்டு, இப்போது அந்தக் கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தோம் எனத் தன்னிலை விளக்கம் அளித்த அன்புமணி ராமதாஸூம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று சொன்னாரே ஒழிய, பாஜகவுடன் கூட்டணி என்று சொல்வதை நாசூக்காகத் தவிர்த்துவிட்டார்.
இதுஒருபுறம் இருக்க, பிப்ரவரி 25-ஆம் தேதி, தருமபுரி அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு 7 நிமிடம் உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அதிமுகவும், பாமகவும் உழைக்கின்ற கட்சிகள். அதனால்தான், கூட்டணி வைத்திருக்கிறோம் என்று சொன்ன அவர், மற்றொரு பங்காளியான பாஜகவின் பெயரை ஒரு முறை மட்டுமே கூட்டணி கட்சி என்று உச்சரித்தார். ஆக , அதிமுக கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளுமே பட்டும் படாமல்தான் நட்பினைத் தொடர்கின்றன.
இந்தச் சூழ்நிலையில்தான், மார்ச் 1-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கும், 6-ஆம் தேதி சென்னைக்கும் வருகிறார் பிரதமர் மோடி. அன்றைய தினம், கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையேற்ற வேண்டும் என்பது அமித்ஷாவின் அஜண்டா. பாஜகவோடு கை குலுக்குவதில் அதிமுகவுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், மோடி பங்கேற்கும் மேடையில் ராமதாஸ் ஏறுவாரா என்பது தான் அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.