பிறந்து 19 ஆண்டுகளே ஆன ஒரு இளம் மாநிலத்தின் இளம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் உலகையே தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன். இந்தியாவின் ஒட்டுமொத்த கனிம வளத்தில் 40 சதவீதத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு மாநிலம், மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பூர்வகுடி மக்களை கொண்ட பழமை மாறா பாரம்பரியமிக்க ஒரு மாநிலம். இப்படி பல சிறப்புகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக வாகை சூடியிருக்கும் ஹேமந்த் சோரனின் அரசியல் வாழ்க்கை பல எதிர்பாரா திருப்பங்களையும், தோல்விகளையும் கடந்தே வந்திருக்கிறது.
1914 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் பலனாக கடந்த 2000 ஆவது ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உருவானது ஜார்க்கண்ட். இந்த நீண்ட போராட்டத்தின் கடைசி 30 ஆண்டுகளில் மிக முக்கிய நபராக விளங்கிய சிபு சோரனின் மகன்தான் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்டின் உருவாக்கத்திற்கு பிறகு நடந்த முதல் தேர்தலில் சிபு சோரனின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை பிடிக்கமுடியாத நிலையில், பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது. அதன்பின் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றிபெற்று சிபு சோரன் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அந்த பதவியில் வெறும் 10 நாட்கள் மட்டுமே அவரால் நீடிக்க முடிந்தது. அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் சிபு சோரனின் முதல்வர் பதவி பத்தே நாட்களில் பாஜகவின் அர்ஜுன் முண்டா வசம் சென்றது.
தேர்தலில் வென்றும் தனது முதல்வர் கனவு நிறைவேறாத வருத்தத்தில் இருந்தார் சிபு சோரன். அதேநேரம் தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே தோல்வியை சந்தித்திருந்தார் ஹேமந்த் சோரன். இந்த தேர்தலில்தான் 30 வயதான ஹேமந்த் சோரன் முதன்முறையாக அரசியலில் களம் கண்டார். சோரன் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான தும்காவில் போட்டியிட்டு தனது சொந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ விடமே தோல்வி அடைந்தார் ஹேமந்த். தங்களது பலம் மிக்க தொகுதியிலேயே தோல்வியை கண்ட ஹேமந்த், மாநிலம் முழுவதும் தங்கள் செல்வாக்கை உயர்த்தும் திட்டங்களை வகுக்க தொடங்கினார். அப்படி அவர் வகுத்த திட்டமே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் நடைபயண திட்டத்திற்கு முன்னோடி எனலாம். அவர் வகுத்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் தொடர் பயணங்கள் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில், சிபு சோரனின் அரசியல் வாரிசாக கருதப்பட்டு வந்த அவரது மூத்த மகனும், ஹேமந்த்தின் சகோதரருமான துர்கா சோரன் 2009 ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தார்.
துர்கா சோரனின் இந்த திடீர் இழப்பு அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் குடும்ப ரீதியாகவும் சோரன் குடும்பத்திற்கு பல பிரச்சனைகளை கொடுத்தது. ஆனால் இவை அனைத்தும் முன் நின்று களைந்தவர் ஹேமந்த் சோரன் தான். குடும்ப நிர்வாகத்தோடு, தனது சகோதரனின் அரசியல் பொறுப்புகளையும் சுமக்க தொடங்கினார் ஹேமந்த். சகோதரனை இழந்த இந்த காலகட்டமே ஹேமந்தை தீவிர அரசியலை நோக்கி தள்ளியது எனலாம். இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் மக்கள் உடனான சந்திப்புகளையும் தொடர்ந்தார். சட்டசபை தேர்தலின் போது தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து தும்கா தொகுதியில் போட்டியிட்டார். தொடர் சந்திப்புகளால் மக்கள் மத்தியில் கிடைத்த நம்பிக்கையின் பலனாக அடுத்து வந்த தேர்தலில், 2005 ல் தோல்வியுற்ற அதே தும்கா தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார் ஹேமந்த். அதுமட்டுமல்லாமல், மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தார் சிபு சோரன். ஆனால் இந்த முறையும் அரசியல் குழப்பங்கள் ஜார்க்கண்டை சூழ ஆரம்பித்தன. அதன் பலனாக பதவியேற்ற ஐந்து மாதத்தில் மீண்டும் பதவியை இழந்தார் சிபு சோரன். ஆனால் ஹேமந்த்திற்கு துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.
2009 தேர்தலில் பாஜக - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்றாலும் பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக்க நடைபெற்ற முயற்சியால், பாஜகவின் அர்ஜுன் முண்டா முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது ஹேமந்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலானது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 38 வயதான ஹேமந்த் அம்மாநிலத்தில் முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின் 17 மாதகாலம் அம்மாநில முதல்வராக ஹேமந்த் ஆட்சி செய்தார். அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, நக்சலைட்டுகள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியது, ஜார்க்கண்ட் பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றியது, என தனது செயல்பாடுகளால் மக்களின் ஆதரவை பெற்றார் ஹேமந்த்.
இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட கூட்டணி தொடர்பான குளறுபடிகளால், 2014-ம் ஆண்டு தேர்தலை தனித்து சந்திக்க முடிவெடுத்தார் ஹேமந்த். ஆனால் அந்த தேர்தலில் அவரின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமே அமர முடிந்தது. எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார் ஹேமந்த். ஐந்து ஆண்டுகாலம் எதிர்கட்சி வரிசை கொடுத்த அனுபவம், இந்த முறை ஹேமந்த்தை சரியான கூட்டணியை தேர்வு செய்ய வைத்தது எனலாம். அந்த வகையில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டு, இரண்டாவது முறையாக முதல்வர் நாற்காலியிலும் ஏறியிருக்கிறார் ஹேமந்த். ராஞ்சி, பொகாரோ மற்றும் ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட பல இடங்களில் விதிமுறைகளை மீறி இவரது குடும்பம் சொத்துக்களை வாங்கியுள்ளது, இவரது கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றாது என பல குற்றசாட்டுகளை ஹேமந்த் சோரன் மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறிய போதும், அக்கட்சிகள் மீதான மக்களின் அதிருப்தி அவற்றை விட அதிக அளவு இருந்ததும் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கான காரணமாக கூறப்படுகிறது.
44 வயதான ஹேமந்த் ஜார்க்கண்ட்டின் முதல்வராக பொறுப்பேற்றாலும், அவர் ஐந்து ஆண்டுகள் எப்படி அந்த பதவியை தக்கவைக்கப்போகிறார்? அங்குள்ள பூர்வகுடி மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கப்போகிறார்? பின்தங்கியுள்ள கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை எப்படி முன்னேற்ற பாதையில் பயணிக்க வைக்க போகிறார்? உள்ளிட்ட பல விடை காண வேண்டிய கேள்விகள் அவர் முன்னே வைக்கப்படுகின்றன. ஆனாலும், கடந்த முறை 17 மாதங்களில் முதல்வராக மக்களிடம் பெற்ற நன்மதிப்பை, வரப்போகும் ஐந்து ஆண்டுகளிலும் அவர் தக்கவைப்பார் என்கின்றனர் அக்கட்சியினர்.