தாய்லாந்து நாட்டில் குகைக்குள் சிக்கிய 13 சிறுவர்களையும் அவர்களுடைய பயிற்சியாளரையும் மீட்க அந்த நாட்டு அரசு மேற்கொண்ட சர்வதேச அளவிலான முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் மீட்கப்படும்வரை நிலவிய பதற்றம் நமக்கு ஆச்சரியத்தை அளித்தது.
13 உயிர்களுக்கு இவ்வளவு மதிப்பா என்று நமக்கே வியப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் குறிபார்த்து சுடுபவர்களால் 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது. அவர்கள்போக, 100க்கு மேற்பட்டோர் குறிதவறி குண்டு பாய்ந்ததால் காயமடைந்திருந்தனர். பலருக்கு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன.
சுட்டுக் கொன்ற அரசாங்கமே, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாயும், காயம்பட்டவர்களுக்கு அவர்களுடைய காயத்துக்கு தகுந்தபடியான தொகையையும் இழப்பீடாக அளித்துவிட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.
அதற்கு கொஞ்சநாட்கள் முந்தி, ஒக்கி என்ற புயல் தாக்கியதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் 661 பேர் காணாமல் போனதாக இந்திய அரசாங்கமே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு, அரசுகள் அடுத்தகட்ட கொள்ளையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் குறிப்பாக உயிர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சாதிக்கு தகுந்தபடி வேறுபடும் என்பது எதார்த்தமான உண்மை. டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் நள்ளிரவில் பலரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்தபோது இந்தியாவே கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணியை வெளியிடாமல் மறைத்து, அத்தனை மீடியாக்களும் அரசுக்கு எதிராக ஓலமிட்டன. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விரைவாக வழங்கப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில்நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் பட்டப்பகலில் கொல்லப்பட்டபோதும் இப்படித்தான் கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட அரசாங்கமே தடைவிதித்தது. கொன்றவனைப் பற்றிய தகவல்களையும் மறைத்தது. ராம்குமார் என்பவனை கைது செய்து அவனை கடைசிவரை செய்தியாளர்களிடம் பேசவிடாமல், சிறையிலிருந்து பிணையில் வெளிவரும் நிலையில் நிரந்தரமாக பேசவிடாமலே செய்துவிட்டார்கள்.
ஆனால், காதலித்தார்கள் என்பதற்காகவே சாதியின் பேரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டாலும், வீடுபுகுந்து சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாலும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காகவே மூன்றுபேரை வெட்டிக் கொன்றாலும் எந்தவித சலனமும் இல்லாமல் கடந்து போவதைப் பார்த்து பழகியவர்களுக்கு தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு வியப்பையே ஏற்படுத்தும்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி தாய்லாந்து கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 13 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாம்லுவாங் என்ற நீளமான குகைக்குள் சாகசப் பயணம் மேற்கொண்டனர். 4 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பலத்தமழை பெய்து குகையில் நீர் நிரம்பிவிட்டது. வெளியில் வரமுடியாத அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.
அவர்களைக் காணாமல் தேடிய அரசு, அவர்களைக் கண்டுபிடித்து மீட்க உடனடியாக சர்வதேச உதவியை நாடியது. அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டின. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிரோடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் உயிர்க்காப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.
குகையில் மழைநீர் அதிகரித்துவிடாமல் இருப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனம் ராட்சத பம்ப்புகளை கொடுத்து நீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தது. இதனிடையே, சிறுவர்களுக்கு சுவாசிக்க ஆகிசிஜன் சிலிண்டரைக் கொடுத்துவிட்டு திரும்பும்போது தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர் சமன் குனன் உயிரிழந்தார்.
ஒருவழியாக சிறுவர்களை மீட்பதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஞாயிறன்று தொடங்கியது. முதல் நாள் 4 சிறுவர்களும், திங்கள்கிழமை 4 சிறுவர்களும், மீதமிருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் செவ்வாய்க்கிழமையும் மீட்கப்பட்டனர்.
சிறுவர்கள் காணாமல் போய் 9 நாட்கள் அவர்களைத் தேடும்பணி நீடித்தது. அப்போதுதான், தாம்லுவாங் குகை முன் சிறுவர்கள் சென்ற சைக்கிள்கள் நிற்பதை பார்த்த சிலர் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்துதான் சிறுவர்கள் குகைக்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்தது.
மனித உயிர்களின் மதிப்பறிந்த தாய்லாந்து அரசு அந்த உயிர்களைக் காப்பாற்ற கவுரவம் பார்க்காமல் சர்வதேச உதவியை நாடியது.
ஆனால், ஒக்கி புயலில் காணாமல் போன தனது நாட்டு மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றுவதில் இந்தியக் கப்பற்படை வேண்டுமென்றே மெத்தனம் காட்டியது என்று கன்னியாகுமரி மீனவர்கள் குமுறியதை கேட்க முடிந்தது. கடலோரப்பகுதிகளில் இருந்து தங்களை வெளியேற்றுவதே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியதும் கடல் அலையில் மோதி கரைந்துவிட்டது.
உயிரைக்கொல்லும் திட்டங்களுக்கு சாதகமாக மக்களுடைய உயிரை எடுக்கவும் தயங்காத அரசுகள், தாய்லாந்து அரசிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.