Skip to main content

வீடு தானாகவே இடிந்து விழுந்ததா..? - ஆளூர் ஷானவாஸ் கேள்வி!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

சில தினங்களுக்கு முன்பு மேட்டுபாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் போதிய நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியபோது அதில் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

மேட்டுபாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயரிழந்துள்ளனர். இழப்பீடு சம்பந்தமான நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை நீங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த சம்பவம் நடந்து அடுத்த 24 மணி நேரம் வரையில் வெளியான செய்திகளை பார்த்தோம் என்றால், மழையின் காரணமாக சுவர் இடிந்து 17 பேர் பலியானார்கள் என்றுதான் ஊடகங்களில் செய்தி வெளியாகி வந்தது. மழையில் சுவர் இடிவது நடக்க வாய்ப்பிருக்க கூடிய விபத்தாக இருந்தாலும், அதில் எப்படி 17 பேர் உயிரிழப்பார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. பிறகு அதை பற்றி நாம் ஆராய்ந்து பார்க்கும் போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டின் மீது மற்றொருவருடைய வீட்டின் சுற்றுச்சுவர்  இடிந்து விழுந்தது தெரிய வந்தது. ஆனால் இதை ஆரம்பத்தில் அவ்வாறு குறிப்பிடாமல் வீடு இடிந்து 17 பேர் பலி என்றே அனைவருக்கும் சொல்லப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பட்டதாரி பெண் ஒருவர் பள்ளிக்கரணை பகுதியில் விபத்தில் இறந்தார். அவரை லாரி மோதிய விபத்தில் இறந்தார் என்றா நாம் கூறினோம். பேனர் அவர் மீது விழுந்ததால் அவர் நிலைதடுமாறி பின்னால் வந்த லாரி மீது விழுந்து உயிரிழந்தார் என்று தானே குறிப்பிடுகிறோம். ஆனால் இங்கு மட்டும் சுவர் இடிந்ததை குறிப்பிடாமல் வீடு இடிந்து 17 பேர் பலி என்று ஏன் சொல்ல வேண்டும். எதற்காக உண்மையை மறைக்க வேண்டும். 
 

df




இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மகளிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்கிறார்கள், நீங்கள் உங்கள் அப்பாவை விபத்தில் இழந்திருக்கிறீர்கள், தற்போது உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கிறார்கள். அதற்கு பாட புத்தகங்களை மட்டும் கொடுங்கள் நான் அம்மாவை காப்பாற்றிக் கொள்கிறேன் என்று கண்ணீர் ததும்ப அந்த பிஞ்சு சொல்கிறது. இதை பார்த்துவிட்டு யாராலும் மனம் கணக்காமல் இருக்க முடியுமா? இந்த குழந்தையின் அழுகைக்கு யார் காரணம். மிராசுதாரர்கள், பணக்காரர்கள் என்று யார் சட்டத்தை மீறினாலும் முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், அரசாங்கமும் தான் இந்த நிலைக்கு காரணம். எங்களை பார்க்க கூடாது, எங்களோடு எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று நினைத்து இந்த சுவர் கட்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இது தீண்டாமை சுவரா, தன் வீட்டை சுற்றி ஒருவர் சுவர் கட்டிக்கொள்ள கூடாதா என்று தற்போது பேசி வருபவர்களுக்கு அந்த மக்கள் அளித்த இந்த பதிலே போதுமானது என்று நினைக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களிடத்தில் இருந்துதான் நாம் தகவல்களை பெற வேண்டும். அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். அதுதான் இயற்கை நீதியும் கூட. வலியில் இருந்து பேசுபவனிடம் பொய் வராது. அவன் அந்த வலியை உணர்ந்து இத்தனை ஆண்டுகாலமாக அங்கே வாழ்ந்து வந்திருக்கிறான். நீங்கள் நடவடிக்கை எடுப்பதில் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு அவர்கள் மீது குறை சொல்ல கூடாது.