நொடிப்பொழுதும் பரபரப்பாகவே காட்சியளிக்கும் சென்னை, ஆங்காங்கே 'இயற்கையைப் பாதுகாப்போம்', 'மழை நீரைச் சேமிப்போம்', 'மரங்களை வளர்ப்போம்' என்ற வார்த்தைகளால் பொதுச் சேவை அறிவிப்புகள் எழுதப்பட்டிருக்கும். பெரும் மக்கள் படை கொண்ட சென்னை வாசிகளில், சிலர் அன்றைய பொழுதைக் கழிக்கவேண்டும் என்பதால் அந்த வார்த்தைகளைக் கவனிக்காமலே கடந்தும் சென்றுவிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதை நாம் மறுக்கமுடியாது. அவ்விதத்தில் சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயிலில், தொடர்ந்து பறவைகளும், வண்ணத்துப் பூச்சிகளும் இறந்து மடிகிறது என்று கூறிவருகிறார் இயற்கை ஆர்வலரும் தனியார் கல்லூரியின் ஆசிரியருமான லயோலா சதீஸ்.
இதுகுறித்து அவரிடம் நாம் பேசியபோது, “நான் சென்னை மண்ணடியில் இருந்து திருமங்கலம் வரை மெட்ரோவில் தான் கல்லூரிக்குச் செல்வேன். கடந்த ஆண்டு 28-07-2019 அன்று நான் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு புகார் கொடுத்தேன்.
‘மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்வேயில் பயணிக்கிறேன். இந்த இரண்டு மாத காலத்தில் தினமும் 5-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் திருமங்கலம் மெட்ரோ ரயில்வே நிலையத்தின் வாயிற்கதவு அருகில் இறந்து கிடப்பதைப் பார்க்கிறேன். இது குறித்து நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தபோதும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இரண்டு மாத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் இறந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கதவைப் பொருத்தினால் அதன் வருகையைக் கட்டுப்படுத்தலாம். இல்லையென்றால் ஒரு கதவைத் திறந்துவைத்தால் அதன் இறப்பைக் கட்டுப்படுத்தலாம் . நீங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்பிக்கையில் உங்கள் கவனத்திற்கு இதைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று புகாரில் தெரிவித்திருந்தேன்.
அதற்குப் பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பிரிவிலிருந்து எனக்குக் கடிதம் வந்தது. ‘உங்கள் புகாரை மெட்ரோ நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு அனுப்பியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் மெட்ரோ நிர்வாகத்திடம் இருந்தும் ஒரு கடிதம் வந்தது. அதில், ‘உங்கள் புகாரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் உடனே நாங்கள் மெட்ரோ நிலையக் கதவில் எலெக்ட்ரோ ரெபெல்லேண்ட் (Electro Repellents) என்ற கருவியைப் பொருத்துகிறோம்’ என்று கூறினார்கள்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், 5 மாதங்கள் கடந்துவிட்டது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு மீண்டும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், நான் ஏற்கனவே அனுப்பியிருந்த புகாரை சுட்டிக்காட்டி இதுநாள் வரை மெட்ரோ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினேன். ஆனால், அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. ஒரு நாள் நான் வழக்கம்போல கல்லூரிக்குச் செல்லும்போது, 5-க்கும் மேற்பட்ட புறாக்கள் மூச்சடைத்து இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனேன். மீண்டும் மெட்ரோ நிர்வாகத்திடம் புகார் கொடுத்தேன். எந்தப் பயனும் இல்லை. கரோனா ஊரடங்கு தளர்வு முடிந்து, தற்போது மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல ஓடுகின்றது. நான் நேற்று பயணம் செய்தபோது, அதேபோன்று பல வண்ணத்துப் பூச்சிகள் இறந்து கிடப்பதைப் பார்த்தேன். எனக்குக் கவலைப்படுவதும், கண்ணீர் விடுவதையும் தவிர வேறு ஏதும் தெரியவில்லை.
சிறுவயதில் வண்ணத்துப் பூச்சிகளையும் பார்த்திருப்போம். ஆனால், இப்பொழுது அதை எல்லாம் நாம் பார்த்தால், அது எதோ அதிசயம் போன்று நமக்குத் தோன்றுகிறது. காரணம் அதன் இனங்கள் அழிந்துவருகிறது. மனிதர்கள் நாம் மிக வேகமாக வளர்ந்துவருகிறோம். ஆனால், இந்த உலகில் வாழும் மற்ற ஜீவராசிகளைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப்படுவதில்லை. இயற்கையை நாம் பாதுகாத்தால்தான் அது நம்மை வாழவைக்கும்” என்று கூறினார் ஆதங்கமாய்.
-சேகுவேரா