ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற பெயரில் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக விழா இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள். விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மெரினா போராட்டம் தொடர்பாக இதுவரை யாரும் கூறாக பல்வேறு தகவல்களை கூறினார். இதுதொடர்பாக பேசிய அவர், " மதவெறி சக்திகள் தமிழகத்தை குறிவைத்து விட்டார்கள். ஏதோ ஒரு வகையில் அவர்கள் எண்ணங்களை நம்மீது ஊடுறுவ செய்ய பார்க்கிறார்கள். போராட்டங்களை ஆதரிக்கிறார்கள்.
எந்த போராட்டங்களாக இருந்தாலும் ஊக்கப்படுத்துகிறார்கள். சாதிய போராட்டங்களாக இருந்தாலும், உரிமைக்கான போராட்டங்களாக இருந்தாலும் மறைமுக ஆதரவை தெரிவிக்கிறார்கள், ஏதோ ஒரு நோக்கத்தோடு. காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பிறந்த மண். பகுத்தறிவுக்கு விதைபோட்ட புண்ணியபூமி. ஆனால் இன்று அத்திவரதர் பூமியாகி உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் அத்திவரதரை காண மக்கள் கூட்டம். வெளிமாநிலங்களில் இருந்து எல்லாம் மக்கள் அங்கு வருகிறார்கள். கடந்த வாரம் காஞ்சிபுரம் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது என்னை சந்தித்த பொதுமக்கள் அத்திவரதரை காண வரும் கூட்டத்தை பயன்படுத்தி எண்ணற்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக என்னிடம் கூறினார்கள்.
ஆனால், இதுகுறித்து காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தத்தோடு என்னிடம் சொன்னார்கள். போராட்டங்கள் என்பது முக்கியமான ஒன்றுதான். ஆனால் அவைகள் எப்படி நடக்க வேண்டும், எப்படி முடிய வேண்டும் என்ற வழிமுறை இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சாதி,மதம் கடந்து இளைஞர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள், போராடினார்கள், ஆனால் முடிவு வருத்தமளிக்கும் ஒன்றாக அமைந்தது. வன்முறைகள் அவிழ்த்துவிடப்பட்டது. தலைமை இல்லாமல் நடைபெற்ற போராட்டங்களை யார் வழிநடத்த இயலும். அனைவருக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால் சரியான வழிமுறையில் வழிநடத்த வேண்டியுள்ளதே. எந்த போராட்டங்களையும் தனி குழுவாக செய்வதை காட்டிலும், அரசியல் இயக்கங்களோடு இணைந்து செய்வதுதான் சரியான ஒன்றாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது என்னுடைய புரிதல்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலங்களில் காண்டம் வைத்து கொடுத்ததாக போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். யார் உணவு வழங்கினார்கள் என்றே தெரியவில்லை என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை உங்களை போன்ற இளைஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதனால்தான் மீண்டும் கூறுகிறேன் தலைமையோடு இணைந்து போராட்டங்களை மேற்கொள்ளுங்கள் என்று. இல்லையென்றால் தேவையில்லா பிரச்சனைகளை வேண்டும் என்றே உருவாக்குவார்கள்" என்றார்.