தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம், வேட்புமனு தாக்கல் என்று வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளார் பட்டியலை வெளியிட்டர். அதில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது
மதுரையின் பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சரவணன், பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்தவர். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் முகாம் என மதுரையில் செல்வாக்கு கொண்டவராக இருப்பதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான மருத்துவர் சரவணன், அரசியலில் இணைவதற்கு முன்பு தன்னை மு.க.அழகிரியின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதே படத்தில் இவரும் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து அரசியலுக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, மதிமுகவில் சேர்ந்து வைகோவுக்கு நெருக்கமானவராகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அங்கு ஒருவருடம் இருந்த சரவணன் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சரவணனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, உடல் நலக்குறைவால் போஸ் காலமானதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட சரவணன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாஜகவில் சேர்ந்தார். கையோடு அவருக்கு பாஜக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் மாநகர மாவட்டத் தலைவராக சரவணன் செல்வாக்குடன் இருந்து வந்தார். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கட்சித் தலைவருக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரவணன் தெரிவித்தார். மேலும், பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகிய சரவணனன் மீண்டும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சரவணன், திடீரென அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மதுரையில் விருப்பமனு பெறப்பட்டது. ஆனால், போட்டியிட மதுரை மாவட்டத்தில் அதிமுக சீனியர் நிர்வாகிகள் பெரிதாக யாரும் முன்வரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட் கேட்டு போட்டி போட்டவர்கள், இந்தமுறை கட்சி அலுவலகம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், விருப்பமனு கொடுத்த சில நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு கொடுத்து எஸ்கேப் ஆகி வந்தனர்.
இதில், தனக்கு சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்த ஒரே நபர் டாக்டர் சரவணன் மட்டும்தான். முக்கிய நிர்வாகிகள் பலரை அதிமுக தலைமை போட்டியிட வற்புறுத்தியும் யாரும் 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே மதுரை தொகுதி வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளரான சு.வெங்கடேசன் மதுரை தொகுதியில் களம் காணும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக கூட்டணி சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த மார்ச் 25 ஆம் தேதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், பிரமாண்ட முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சரவணன் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மதிமுக, பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்குச் சென்றுவந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணன், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவது மதுரை அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.