ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சிதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல தீவிர பிரச்சாரங்களை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டார். பிரதமர் மோடி ராகுல் காந்திக்கு அரசியல் தெரியாது அவர் ஒரு குழந்தை என்ற பாணியிலேயே பப்பு என்று ஒருமுறை விமர்சித்தார். பலரும் அவ்வாறே விமர்சித்தனர், ஆனால் இன்று பெற்றிருக்கும் வெற்றியின் மூலம் பப்பு என சொல்லியவர்களுக்கு ஆப்புதான் வைத்திருக்கிறார் ராகுல். இந்நிலையில், ராகுல் காந்தியின் பள்ளி பருவம் முதல் அரசியல் பிரவேசம் வரை பார்ப்போம்...
இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் குடும்பம், காங்கிரஸ் கட்சியின் தலைவர், இந்நிலையில் இந்திய மக்கள் மனம் வைத்தால் அடுத்த பிரதமர் என்று அரசியல் உலகில் ஒரு இடம் பிடிக்க காத்திருக்கிறார். ராகுல் காந்தியின் அப்பா இந்தியாவின் பிரதமராக இருந்தவர், அவரது பாட்டியும் இந்திய பிரதமராக இருந்தவர், அவரது கொள்ளு தாத்தாவும் இந்திய பிரதமராக இருந்தவர், அதுவும் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு அதிக காலம் இவர்கள் குடும்பத்தின் ஆட்சிப் பொறுப்பில்தான் நாடு இருந்திருக்கிறது, இந்தியாவில் அவ்வளவு அந்தஸ்துள்ளவர்கள். இவரது தாயார் சோனியா காந்தி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் இருந்தபோதிலும், ராஜீவ் காந்தியை காதலித்து மணம் முடித்தால் இந்திய அரசியலில் ஒரு பெரும்பங்காற்ற வேண்டிய சூழலில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக பல வருடங்கள் இருந்தார். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவரான ராகுல் காந்தி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது அவருக்கு வயது 33, அதாவது பதினான்கு வருடங்களுக்கு முன்புதான். அரசியல் பயணத்திற்கு முன்புவரை ராகுலின் வாழ்க்கை, படிப்பு, என்ன நினைப்பில் இருந்தார், காலம் அவரை என்னவாக மாற்றியிருக்கிறது என்பதை பார்ப்போம்.
இந்திரா காந்தியின் செல்லப்பேரனாக இருந்த ராகுல் காந்தி, ஆரம்பக் கல்வியை செயின்ட் கொலம்பஸ் பள்ளியில் படித்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவின் தலைசிறந்த பள்ளி என்று சொல்லப்படும் டூன் பள்ளியில் படித்து வந்தார். பின்னர், இந்திரா காந்தியின் கொலையை அடுத்து பாதுகாப்பு காரணமாக வீட்டு கல்வி முறையிலேயே கற்பிக்கப்பட்டார். அப்போது ராகுல் காந்திக்கு வயது பதினான்கு தான். இந்திரா காந்தியின் கொலையை அடுத்து பைலட்டாக இருந்த ராகுலின் அப்பா இந்திய பிரதமராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பள்ளி படிப்பை வீட்டு கல்வி முறையிலேயே முடித்த ராகுல் 1989 ஆம் ஆண்டு இளநிலை கல்லூரிப் படிப்பை முதல் ஆண்டுவரை டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தார். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு தேர்வை முடித்த பின்னர் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். பிரதமராக இருந்த தன் பாட்டி கொலை செய்யப்பட்டதைப் போலவே, 1991 ஆம் ஆண்டு அவரது அப்பாவும் கொலை செய்யப்பட்டார். இதனால் மீண்டும் பாதுகாப்பு கருதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து ப்ளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரிக்கு வேறு புனைப்பெயருடன் மாற்றப்பட்டார். ரவுல் வின்சி என்ற அந்த புனைப்பெயர் கல்லூரி நிர்வாகத்துக்கும், பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்துள்ளது. இதையடுத்து எம்.ஃபில் பட்டத்தை 1995ஆம் ஆண்டு கேம்பிரிஜ் ட்ரினிட்டி கல்லூரியில் படித்து முடித்தார்.
கல்வியை முடித்தவனுடன் லண்டனிலுள்ள கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்துள்ளார். 2002ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பேக்கோப்ஸ் பிரைவேட் லிமிடேட் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தில் இயக்குனராக வேலை செய்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ராகுலின் ரூம் மேட்டான அவரது நண்பர் ஒரு பேட்டியில், "ராகுலுக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையே கிடையாது. அவருக்கு சட்டம் படிப்பதில்தான் ஆசை இருந்தது" என்று தெரிவித்துள்ளார். நாற்பத்தி எட்டு வயதை தொட்டும் திருமணம் செய்து கொள்ளாத ராகுல், 'ஒரு முறை நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள்?' என்று கேட்கப்பட்டபோது, "எனக்கு சரியான ஜோடி கிடைத்துவிட்டால் செய்துகொள்வேன்" என்றார். அப்படிப்பட்ட ராகுல் அரசியல் பயணத்திற்கு வருவதற்கு முன்பு கேம்பிரிட்ஜில் தன்னுடன் படித்த பெண்ணான வெக்டோரியா என்பவருடன் காதலில் விழுந்துவிட்டார் என்று பத்திரிகைகள் கிசுகிசுத்தன. அதற்கு ஏற்றார் போல, அவர்கள் இருவரும் பலமுறை பத்திரிகையாளர்களின் புகைப்படங்களில் சிக்கினார்கள். இப்படியெல்லாம் சென்றுகொண்டிருந்தவரின் வாழ்க்கை 2004ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்குள் நுழைந்தது. மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அரசியல் பயணத்தைத் தொடங்கினார் ராகுல். அரசியலில் நுழைந்து பல சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கி மீண்டு எதிர்நீச்சலடிக்கிறார். இந்த வருட மழைக்கால கூட்டத்தொடரின்போது பாஜகவுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி பேச்சிலேயே பலருக்கு நம்பிக்கை வந்தது. மேலும் அப்போது, மோடியை ராகுல் அரவணைத்து உலகளவில் பேசப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து மீட்டுக் கொண்டுவருவாரா என்று யோசித்தவர்களுக்கு இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் பல ஒரு பதிலை சொல்லப்போகிறது.