பலரின் வாழ்க்கையை இன்றும் செய்திகள்தான் தொடங்கிவைக்கின்றன. செய்திகளை படித்தபின்பு, பார்த்தபின்பு, கேட்டபின்புதான் பலர் அன்றாட வேலைகளையே தொடங்குகின்றனர். அந்தளவிற்கு செய்திகள் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் இன்று எந்த செய்திகளும் இல்லை என்று ஒரு மிகப்பெரிய செய்தி நிறுவனம் கூறினால் அது எப்படி இருக்கும்... சரியாக 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1930ம் ஆண்டு இதே நாளில்தான் லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைவரும் வானொலியின் முன்பு காத்திருந்தபோது, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி வானொலியின் மூலம் வழக்கமாக வழங்கும் தனது மாலை செய்தியில் "இன்று எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது. செய்தி வாசிப்பாளரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவரிடமிருந்த செய்தியறிக்கையில் "There is no news" செய்திகள் ஏதும் இல்லை என்பது மட்டுமே இருந்தது. இரவு 08.45 அவர் இதை அறிவித்ததற்கு முன்பாக, 15 நிமிடங்கள் வரையில் பியானோ இசை மட்டுமே ஒலிபரப்பப்பட்டது. இதனால் மக்களுக்கு அன்று ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
இப்போது நடக்கும் திரைப்பட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் டாப் 10 ல் இந்த வாரம் எந்தப் படங்களும் வெளியாகாததால் நமது டாப் 10ல் அனைத்து இடங்களும் காலியாகவே உள்ளன. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம், வணக்கம். என்று சொல்லும்போதே நமக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. என்றால் ஒருநாள் முழுக்க செய்தியே இல்லை என்று ஒரு நம்பத்தகுந்த ஊடகம் சொல்லும்போது அதை கேட்டவர்களுக்கு எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். அன்றுதான் அப்படி ஆனால் இன்று ஒரு செய்தியை முழுமையாக அறியும் முன்னரே அடுத்த செய்தி வந்துவிடுகிறது. கால ஓட்டத்தாலும், அறிவியல் வளர்ச்சியாலும் நாமும் அதனுடன் சேர்ந்தே ஓடுகிறோம்.