1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தியாகிகள் பகத்சிங்கும் அவருடைய இரண்டு தோழர்கள் ராஜகுரு, சுகதேவும் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர்.
யார் கண்ணிலும் படாமல் எரியூட்டப்பட்டு, சாம்பல்கூட கிடைக்காமல் செய்தனர்.
பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது அவருடைய வயது 23 தான். வாழ்க்கையை இனிதான் வாழவேண்டும் என்ற நிலையில் தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
அவருடைய நலம் விரும்பிகளும், குடும்பத்தினரும் பிரிட்டிஷ் அரசிடம் கருணை மனு அளிக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், பகத்சிங் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக பிரிட்டிஷ் அரசுக்கு அவர் கொடுத்த கடைசி வாக்குமூலத்தில், தன்னை சுட்டுக் கொல்லும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
“பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நான் போர் தொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறேன். அது உண்மை என்றால் துப்பாக்கியில் என்னை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, பிரிட்டிஷாரிடம் இருந்தும், இந்திய ஒட்டுண்ணிகளிடம் இருந்தும் இந்திய உழைக்கும் மக்கள் விடுதலை பெற எனது மரணம் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
பாரதிய ஜனதாக் கட்சி பகத்சிங்கை கையில் எடுக்க முயற்சித்து வருகிறது. ஆனால், பகத்சிங் தன்னை ஒரு நாத்திகன் என்றும், கம்யூனிஸ்ட் என்றும் ஆணித்தரமாக நிறுவிச் சென்றிருக்கிறார். இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை அவர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
எனவே, பகத்சிங்கின் தேசபக்தியை தனதாக்கி, அவருடைய இமேஜை குழப்ப பாஜக திட்டமிட்டிருக்கிறது. எனவேதான், பகத்சிங்கின் பெயரை உச்சரிக்க சற்றும் தகுதியில்லாத பாஜக பல வழிகளில் அவருடைய நோக்கத்தையும், லட்சியத்தையும், தோற்றத்தையும் சிதைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது என்றாலும், பாஜக சார்பில் விடுதலைக்காக போராடியவர் என்று கூறப்படும் ஒரே நபரான வி.டி.சாவர்க்கரின் தேசபக்த யோக்கியதையை அறிந்தால் அந்தக் கட்சியின் தேசபக்த கபடநாடகம் புரியும்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 1911 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சாவர்க்கர் 50 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சிறையில் அடைக்கப்பட்டவுடனே, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி பிரிட்டிஷ் அரசுக்கு அவர் பல கருணை மனுக்களை அனுப்பினார்.
1913ல் மீண்டும் இத்தகைய கருணை மனுக்களை அனுப்பத் தொடங்கினார். கடைசியாக 1921 ஆம் ஆண்டு அந்தமான் சிறையிலிருந்து இந்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் 1924 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். “நீங்கள் என்மீது கருணை கொண்டு என்னை விடுதலை செய்தால் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசியாக இருப்பேன். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்” என்பதைத்தான் அவர் தொடர்ந்து தனது கருணை மனுக்களில் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்த கருணை மனுவை சாவர்க்கரின் தந்திரம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுவார்கள். ஆனால், அவர், தனது மனுவில் கூறியபடியே, பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசியாக இருந்தார். பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உதவியாக ஹிந்துத்துவா கோட்பாட்டை வலியுறுத்தத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாகத்தான், முஸ்லிம் லீக் இரு நாடுகள் கோட்பாட்டை முன்வைத்தது.
பிரிட்டிஷ் அரசிடம் கருணை பிச்சைகேட்டு வாங்கிய சாவர்க்கரை போற்றும் பாஜக, பிரிட்டிஷ் அரசை தகர்க்கத் துணிந்த வெடிகுண்டு பகத்சிங்கை கையில் எடுக்க முயற்சிப்பது எந்தக் காலத்திலும் இயலாது!