Skip to main content

"பொள்ளாட்சி வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் எதற்காக நீக்கப்பட்டது..." - தேனி கர்ணன் தடாலடி பேட்டி!

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

பொள்ளாட்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதுதொர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சனம் செய்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் தேனி கர்ணன். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தினை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. சிபிசிஐடி விசாரித்து வந்த அந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பொள்ளாட்சி பாலியல் கொடுமைகளை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியாது. சிபிஐ அந்த வழக்கை விசாரிப்பதாக சொல்கிறீர்கள். அப்படி அவர்கள் விசாரிப்பதாக தெரியவில்லை. தற்போது சிதம்பரம் மீது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அது எப்படி நம் எல்லோருக்கும் தெரிகின்றது. நீதிமன்றம் அடிக்கடி அதுதொடர்பாக உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அவ்வாறு இந்த வழக்கில் ஏதாவது நடைபெறுகிறதா?  அப்படி எதுவும் இல்லையே. அப்புறம் எப்படி   சிபிஐ விசாரிக்கிறது என்று நம்புவோம். இந்த வழக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று, பண திமிர் பிடித்த இந்த மனித மிருகங்கள் 200 பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். அதுவும் நமக்கு தெரிந்தது அவ்வளவுதான். தெரியாமல் செய்த குற்றங்கள் எத்தனை என்று தெரியவில்லை. இந்த மிருகங்கள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் குண்டர் சட்டம் என்றால் என்ன என்ற புரிதல் வேண்டும். கொலை வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள், முறையான விசாரணை முடியும் முன்னரே ஜாமீனில் வெளியே தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை வைப்பார்.
 

jh



மாவட்ட ஆட்சியரும், துணை ஆட்சியரை விட்டு குற்றம் தொடர்பாக விசாரித்து அது உண்மைதான் என்று அவர்கள் சொல்வார்களாயின் அதன் அடிப்படையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பிப்பார். அவ்வாறு ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த குண்டர் சட்டத்தை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரோடு இந்த சட்டம் நிற்கவில்லை. அதையும் தாண்டி சென்னையில் உள்ள குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற மூன்று உயர்மீதிமன்ற நீதிபதிகள் இதற்கு ஒப்புதலும் வழங்கியுள்ளனர். அதாவது இவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவதற்குரிய முகாந்திரம் உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவர்கள் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தரவில்லை என்று இதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன தகவல் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊருக்கே தெரியும் அவர்கள் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்தது நாசப்படுத்தியது. அண்ணா! என்னை விட்டு விடுங்கள் என்று அவர்கள் கதறியதை யார்தான் கேட்கவில்லை. அவர்கள் அப்பா, அம்மா கேட்கவில்லையா? எந்த அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்புளிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

குண்டர் சட்டம் நீக்கப்பட்டதாலேயே அவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என்பது போல பேசுகிறீர்களே?

நிச்சயமாக வெளியே வருவார்கள். குண்டர் சட்டம் உடைப்பே அவர்கள் ஜாமீன் பெறுவதற்கான தகுதியாகி விடுகிறது. இதனை பயன்படுத்தி ஒருவர்பின் ஒருவராக வெளியே வருவார்கள். ஏனென்றால், ஒரு வழக்கில் ஏ1 குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்தால் அதனை பயன்படுத்தி மற்ற குற்றவாளிகள் எளிதில் வெளியே வருவார்கள் என்பது சட்டம் தந்த வழிமுறை. அதனை எளிதாக பயன்படுத்தி அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன? அவர்களின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது. இந்த பண பலம் படைத்த மிருகங்கள் அவர்களை என்ன வேண்மானாலும் செய்யும். நான் கூட சிறைச்சாலைக்கு சென்றிருக்கிறேன். கொலை,கொள்ளை வழக்குகளில் சிறைக்கு செல்லவில்லை. அரசியல் வழக்கிற்காக சிறைக்கு சென்றிருக்கிறேன். அங்கு குற்றம் செய்யாதவர்களே அதிகம் சிறையில் அவதிப்படுகிறார்கள். தவறு செய்பவர்கள் அரசியலில் படைப்பலத்தோடு வெளியில் ஜாலியாக இருக்கிறார்கள். அதே மாதிரியான நிலை இந்த வழக்கிற்கும் வந்துவிடும் என்றே ஒரு தகப்பனாக நான் அஞ்சுகிறேன்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்? அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்ததாக உணர்கிறீர்களா?

அந்த துன்ப நிகழ்விற்கு முதலில் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தமிழக அரசு பல்வேறு உண்மைகளை மறைக்க பார்க்கிறது. குழந்தை 88 அடியில் சிக்கி இருப்பதாக சொன்னார்கள். அப்படி என்றால் நாம் 100 அடி தோண்ட வேண்டும். ஆனால் மூன்று நாட்களாக தோண்டியும் 54 அடிதான் தோண்டியதாக தெரிவித்தார்கள். அதுவும் பல இயந்திரங்களை கொண்டுவந்து நிறுத்தி இது மணிக்கு எத்தனை அடி தோண்டும் என்று சொன்ன அதிகாரிகள், திடீரென நள்ளிரவு  இரண்டு மணிக்கு உடலை எடுத்ததாக ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். சிறுவன் குழிக்குள் விழுந்ததை மணிக்கணக்காக காட்டிய தொலைக்காட்சிகள் இந்த மீட்பு நடவடிக்கையை ஏன் காட்டவில்லை. இந்த விஷயத்தில் ஊடகங்கள் தோல்வி அடைந்தது. நாள் கணக்காக சிறுவனின் கையை மட்டும் காட்டிவந்த ஊடகங்கள் சிறுவனின் பாடியை ஏன் காட்டவில்லை. குழியில் இருந்து சிறுவன் முதலில் மீட்கப்பட்டானா? அவ்வாறு மீட்கப்பட்டிருந்தால் சிறுவனின் தாய், தகப்பன் ஏன் ஆழ்துளைக் கிணற்றுக்கு மாலை போட போகிறார்கள். அவர்களை சரிகட்டிவிட்டார்கள். அதனால் தான் உண்மை வெளிவரவில்லை. இந்த விஷயத்தில் பல உண்மைகள் மக்கள் பார்வைக்கு வரவில்லை என்பதே உண்மை.