மக்கள் பாதை முப்பெரும் விழா மூலம் நேர்மை நாயகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சகாயம் ஐஏஎஸ், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, தமிழ் சினிமா இயக்குனர்கள் ராஜு முருகன், அமீர், தங்கர் பச்சன் மற்றும் நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது, நான் இந்த சினிமா உலகில் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஒரு 40 வருட காலம் சினிமா உலகில் இருக்கிறேன்.
எனது படங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறி வருகிறேன். மதவாதிகள் செய்கின்ற தவறுகள், எந்த மதவாதிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும், அரசியல்வாதிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும், அதிகாரிகள் செய்கின்ற தவறாக இருந்தாலும் என் படத்தின் மூலம் தவறை எடுத்து காட்டி அந்த ஊழல் அதிகாரிகளையும், அரசியவாதிகளையும் மாற்ற முயற்சி செய்துள்ளேன். ஆனால் தற்போது நினைக்கிறேன் அது முடியாத காரியம் என்று, மேலும் சரி செய்ய வேண்டியது இன்றைக்கு இருக்கும் இளைஞர்களை என்று கூறினார். நான் முதல் முறையாக சகாயம் அவர்களை வீட்டில் சந்திக்கும் போது சொன்னேன் நீங்கள் தான் ரியல் ஹீரோ. படத்தில் நடிப்பவர்கள் எல்லாம் பொம்மை ஹீரோக்கள் நீங்க தான் ரியல் ஹீரோ என்று தெரிவித்தேன். அதற்கு சகாயம் அவர்கள் நான் அப்படி எல்லாம் இல்லை, நான் ஒரு நேர்மையான அதிகாரி அவ்வளவு தான் என்று சகாயம் கூறினார்கள்.
தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், எந்த ஒரு அதிகாரியும் அப்படி கட்டிலை போட்டு சுடுகாட்டில் படுக்க முடியுமா? ஆனால் அதை சகாயம் செய்தார்கள். அதற்கு ஒரே காரணம் நேர்மை என்று கூறினார். படத்தில் ஒரு ஹீரோ 100 பேரை அடிப்பார்கள். கையில் ஆயுதம் வைத்து கொண்டு சண்டை போடுவார்கள். ஆனால் நேர்மை என்ற ஒரு ஆயுதத்தை வைத்து கொண்டு அந்த இடத்தில படுத்தவர். ஏன் தமிழகத்தை வழிநடத்தக் கூடாது என்று யோசித்தேன் என்று இயக்குனர் சந்திரசேகர் பேசினார்.
மேலும் இன்றைய இளைஞர்கள் லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக நெஞ்சை நிமித்தி நடக்க வேண்டும் என்று கூறினார். எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்காமல் இருந்து பழகி பாருங்கள். அதை நடைமுறை படுத்துவது கஷ்டம் தான் இருந்தாலும் செய்து பாருங்கள் பின்பு நெஞ்சை நிமித்தி நடங்கள் இது தான் எனக்கு தோன்றுகிறது என்று கூறினார்.ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள் லஞ்சம் வாங்குபவர்களை குறை கூறாமல், லஞ்சம் கொடுக்காமல் இருந்து பாருங்கள் என்று கூறினார். மேலும் ஒரு தலைவன் வந்து பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் நினைக்கவில்லை. ஆனால் தொண்டர்கள் நினைத்தால் முடியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.