Skip to main content

மோடி வரை சென்ற பிரச்சினை... சுஜித் மீட்பில் இருக்கும் மர்மங்கள்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

எந்தத் திசையில் இருக்கிறது என்றே அறியப்படாமல் இருந்த நடுக்காட்டுப்பட்டி, அந்த பேரதிர்ச்சியான 80 மணி நேரத்திற்குப் பின்னர் இந்தியா முழுவதும் அறியப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் அரசியல்வாதிகளின் காலடிச்சுவடு கூட பதியாத அந்தப் பகுதியில் முதல்வர், துணை முதல்வர், அனைத்துக் கட்சியினர் என அரசியல் தலைகளே தென்படுகின்றன.

 

incident



வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதியில் தான் சுஜித் குடும்பம் தலைமுறை தலைமுறையாக வசிக்கிறது. மூன்று போர்வெல் அமைத்தும் தண்ணீர் வராததால் விவசாயமே அவர்களுக்கு நெடுங்காலமாக ஒரு போராட்டமாக இருந்து வந்தது. இப்போது பெரும் போராட்டத்திற்கு பின்னரும் சுஜித்தை உயிருடன் மீட்க முடியாமல் போன நிலையில்... தி.மு.க. சார்பில் 10 லட்சம், அ.தி.மு.க. சார்பில் 10 லட்சம், தமிழக அரசு சார்பில் 10 லட்சம், காங்கிரஸ் சார்பில் 10 லட்சம், தே.மு.தி.க. சார்பில் 1 லட்சம் என இழப்பீடு தொடர்கிறது. மேலும் பலர் இழப்பீடு அளித்து வருகிறார்கள். ஒரு துயரம் மிகுந்த கண்ணீர்ச் சம்பவத்திற்கு பின்னர் தான் மணப்பாறை தொகுதியில் இருக்கும் நடுக்காட்டுப்பட்டி அனைவரின் கவனத்திற்கு வந்திருக்கிறது என்பது வேதனைதான். இனியாவது இவர்களின் வாழ்வுக்கும் விவசாயத்திற்கும் விடிவுகாலம் பிறக்கும் என்றே நம்பப்படுகிறது.

 

incident



தண்ணீர் வராமல் ஏமாற்றிய போர்வெல் குழாயை மண் அள்ளிப் போட்டு மூடி நாளாயிற்று. சோளம் பயிரிடப்பட்டு வந்த அந்த நிலத்தில் மூடப்பட்டிருந்த ஆழ்துளையில்தான் கடந்த 25-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் விழுந்தான். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தின் மீட்புப் பணி நடந்த நான்கு நாட்களும் சம்பவ இடத்திலேயே இருந்து சேலத்தில் இருந்த முதல்வருக்கு ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்துகொண்டிருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். 

 

incident



ஆனால், சுஜித்துக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது, முதல்வரின் பார்வையில் படாதவாறு, பின்னாடி பம்மிக் கொண்டு நின்றுகொண்டிருந்தார். என்னவென்று அதிகாரிகளிடம் விசாரித்தால், "குழந்தையை மீட்டுவிடுவோம் என்று சொல்லிக்கொண்டே வந்து கடைசியில் துர்நாற்றம் வரும் வரை இழுத்துவிட்டீர்களே'' என்று முதல்வர், விஜயபாஸ்க ரிடம் கடிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். தன் வீட்டில் தீபாவளி நேரத்தில் மாமனார் இறந்த துக்கம் என்பதால்தான் 3-ஆம் நாளன்று முதல்வர் வெளியே வரும்வரை குழந்தை யைக் காப்பாற்றுவது போன்ற முயற்சி நடந்தது என்கிறது இன்னொரு தரப்பு. கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? "பிரதமர்வரை பிரச்சினை போய்விட்டது. இன்றுடன் எப்படியாவது ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' என்று 28-ஆம் தேதி மதியத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசிக்கொண்டனர். இதனால், புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் வைத்திருந்த உபகரணம் ஒரு அங்குலம் அளவுக்கு ஓட்டை இருந்தாலும் குழந்தைக்கு கீழே சென்று அப்படியே குழந்தையை தூக்கும் விதமாக உள்ளது. அதனால் வீரமணி குழுவை அழைப்போம் என்று முடிவெடுத்தார்கள். சதாசிவம், அருள், விஜய் ஆனந்த், ராஜேந்திரன், அலெக்ஸ், தங்கராசு என 7 பேர் கொண்ட தனது குழுவினருடன் மாலை 4:00 மணிக்கு நடுக்காட்டுப் பட்டிக்கு வந்தார் வீரமணி. ஆனாலும் அவர்கள் இரவு 10:00 மணி வரை காக்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் 12:00 மணிக்கு மீட்புப் பணியை தொடங்கலாம் என்று காக்க வைக்கப் பட்டனர்.

 

incident



இதற்கிடையில், மாலை 6 மணிக்கே பொது மக்கள் கூட்டத்தை குறைக்க வேண்டுமென்று அதிகாரிகள் பேசிக்கொண்டனர். அதனால் மீட்புக்குழு, அதிகாரிகள் தவிர மற்றவர்களை அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர்.

நள்ளிரவு 12.00 மணி வரை குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து 3 மீட்டர் தொலை வில் 6 அடியில் இன்னொரு பெரிய துளையை லால்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட ரிக் இயந்திரங்கள் கொண்டு துளைக்கப்பட்டது. 32 அடிவரை துளையிட்ட பின்னர், பாறைகள் அதிக மாக இருந்ததால் துளை போட்ட ரிக் இயந்திரத்தின் பற்கள் உடைந்து போனது. இன்னொரு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதைவிடவும் 3 மடங்கு அதிக திறன் கொண்ட இயந்திரம் என்பதால் சீக்கிரத்தில் முடியும் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில் தான், பாறைகள் அதிகமாக இருப்பதால் இந்த ரிக் இயந்திரத்தை நம்பி பயன் இல்லை என்று போர்வெல் துளைபோடும் இயந்திரம் கொண்டு துளையிட்டனர். 55அடி ஆனவுடன் துளையில் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித், பாறை ஒன்றை எடுத்துவந்து அதன் தன்மையை ஆராய்ந்தார்.

இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பெரியார் அழகன் என்கிற சமூகச் செயற்பாட்டாளர் அறிவுரையின்படி, ம.ஜ.க. கட்சியின் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி, அமைச்சர் விஜய பாஸ்கரிடம் பஞ்சாபை சேர்ந்த மீட்புக் குழு நிபுணர்கள் குரிந்தர் சிங் மற்றும் ஹரிவிந்தர் சிங் ஆகியோரை பற்றிச் சொன்னார். இதையடுத்து உடனே விமானம் மூலம் 29-ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்கு திருச்சிக்கு வந்த அவர்களை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். அவர் களை அமைச்சர் விஜயபாஸ்கர், "கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு 3.30 மணிக்கு மேல கூட்டிக்கிட்டு வாங்க' என்று சொல்ல... அதன்படி நடந்தது.

 

cognizant news



இரவு ஒரு மணிக்குப் பின்னர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு தலைமையில் போலீசார் அங்கே வந்து இறங்கினார்கள். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த சிலரையும் போலீசார் லேசான தடியடி நடத்தி அப்பகுதியை விட்டு மக்களை வெளியேற்றினர். சுற்றிலும் மறைக்கப்பட்ட ஆழ்குழாய்க் கிணறு அருகே மத்தியக் குழு வினர் சிலரைத் தவிர மற்றவர்களையும் வெளியேற்றினார்கள். அப்போது அந்தப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருட்டாக இருந்தது. மீட்புப்பணி நடந்த இடம் மட்டும் பிரகாசமாக எரிந்துகொண்டி ருந்தது. நள்ளிரவு 1:50 மணிக்கு சுஜித் கையை ஏர்லாக் முறையில் பிடித்து வைத்திருந்த கோவை குழுவினரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். அனைவரையும் வெளியேற்றிய பிறகு வந்த வருவாய்த்துறை ஆணையரும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., "துர்நாற்றம் வந்துவிட்டது' என்று அறிவித்தார். மத்திய, மாநிலக் குழுவினர் 7 பேர் தவிர மற்ற குழுக்களையும் 20 மீட்டருக்கு அப்பால் அனுப்பிவிட்டார்கள். மூடி மறைக்கப் பட்ட ஆழ்குழாய்க் கிணற்றுக்குள் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறியாதபடி பணிகள் நடந்தன. மீடியாவினரையும் நேரலையை நிறுத்தும்படி அரசுத் தரப்பு வலியுறுத்தியது. போலீஸ் உயர் அதிகாரிகளின் குரல் மிரட்டும் தொனியில் இருந்தது.

சிறுவன் விழுந்த அந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஒரு பெரியகம்பி நான்கு முறைக்கு மேலும் கீழுமாக இறங்கியது. சுஜித் வீட்டு மாடி மற்றும் அருகில் இருந்த சுஜித் பெரியப்பா வீட்டு மாடியில் நேரலை செய்துகொண்டிருந்த தொலைக்காட்சியினர், ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து, நேரடி ஒளிபரப்பை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். அவர்களை போலீசார் மிரட்டும் தொனியில் எச்சரித்தனர்.

அப்போது வேகவேகமாக வந்த பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். "துர்நாற்றம் வீசுகிறது என்று சொல்கிறார்கள். டாக்டர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். குழந்தையை மீட்பதற்கான முயற்சி தொடர்கிறது. எப்படி மீட்கப் போகிறோம் என்பதை உங்களுக்குப் பிறகு தெரியப்படுத்துகிறோம்'' என்று சொல்லி விட்டு அந்த 3 பேரும் சுஜித் அம்மாவிடமும், அப்பாவிடமும் அரை மணிநேரம் பேச ஆரம்பித்தார்கள்.
 

ilayaraja bharathiraja news



அதிகாலை 4:15 மணி முதல் 4:30-க்குள் 7 பேர்கள் கொண்ட மாநில, தேசிய மீட்புக் குழுவினர், 3 மருத்துவர்கள் ஆகியோர் மறைக்கப் பட்ட பகுதியின் உள்ளே சென்றனர். சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில், சிறுவன் சுஜித் உடல் எடுக்கப்பட்டுவிட்டதாக மருத்துவக் குழுவினர்கள் வெளியேறினார்கள். ஒரு மூட்டை போல் இருந்த பொருளை அவசரமாக மத்திய-மாநில மீட்புக் குழுவினர் தூக்கிக்கொண்டு வந்தார்கள். தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பினார்கள். இன்னொரு ஆம்புலன்சில் சுஜித் அம்மாவையும் அழைத்துக்கொண்டு சென்றனர். அத்தோடு அங்கு நின்றிருந்த அனைத்து மீட்புக் குழுக்களையும் "உடனே கிளம்புங்கள்' என்று அனுப்பி வைத்தனர்.


இதைச் சற்றும் எதிர்பாராத பத்திரிகையாளர்கள் பின்னோக்கி ஓடுவதற்குள் ஆம்புலன்ஸ் பறந்தது. 2 வயது குழந்தை அதிகபட்சம் 10 கிலோ எடை இருப்பான். ஆனால், அவர்கள் தூக்கிச் சென்றது 15 முதல் 20 கிலோ மாதிரியான அளவு இருக்கே என்கிற சந்தேகம் அப்போதே அங்கிருந்தவர்களிடையே வலுத்தது.

மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பாக வழக்கமாகப் போஸ்ட்மார்ட்டம் செய்யும் ஊழியர்கள் அத்தனைபேரையும் வெளியேற்றிவிட்டனர். திருச்சி பிரேத பரிசோதனைத் துறைத்தலைவர் ஜீலினா, மருத்துவர் செல்வகுமார், டாக்டர் ஜெயந்தி இவர்களோடு மணப்பாறை மருத்துவமனை சி.எம்.ஓ. டாக்டர் முத்துக்கார்த்தி ஆகியோர் மட்டுமே பிரேத பரிசோதனையில் இருந்திருக்கிறார்கள். இதில் டாக்டர் முத்துக்குமார், ஜெயந்தி மட்டுமே போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிறார்கள்.

குழந்தையின் அப்பாவையும், அம்மாவையும் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவினர், சுஜித்தின் அழுகிய பாதி உடம்பை காண்பித்ததும் கதறி அழுதிருக்கிறார்கள். அப்படியே அவர்களை வெளியே அழைத்து வந்து, "இதைப் பெட்டியில் வைத்து அடைத்து தருகிறோம். உங்கள் கிறிஸ்தவ முறையில் முகம் பார்க்கும் பழக்கம் இருந்தாலும் எங்களுக்குப் பண்ணும் ஒரு உதவியாக பெட்டியைத் திறக்கக்கூடாது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

"இந்தப் பெட்டியை எங்கள் வீட்டிற்கும், சர்ச்சுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்'' என்று பெற்றோர் சொல்ல, ""தேவையில்லாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும். நீங்க நேராக கல்லறை சென்று போலீஸ் பாதுகாப்புடன் புதைத்துவிடுங்கள்'' என்று சொல்லி உறுதிமொழி வாங்கிய பின்னரே பெற்றோரிடம் ஒப்படைத் திருக்கிறார்கள்.


இது குறித்து சுஜித் அப்பா பிரிட்டோவிடம், "குழந்தையை மருத்துமனையில் காட்டினார்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர், "காட்டினார்கள்'’என்று சொன்னார். ’’ "முழு உடலையும் காட்டினார்களா?'’என்று கேட்டவுடன், "அதெல்லாம் வேணாங்க''…என்று தேய்ந்த குரலுடன் மறுத்தார். மகனின் இறப்பு குறித்து நம்மிடம் பேசின சுஜித்தின் தாய் கலாமேரி, "ஆழ்துளைக் கிணறுகளில் உயிரிழப்புச் சம்பவம் இனி தொடரக் கூடாது. எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். சுஜித்தை என் பிள்ளையா நினைச்சேன், ஆனா உலகமே அவுங்க பிள்ளையா நினைச்சு வேண்டுனாங்க. சுஜித் தவறி விழுந்த இடத்தில் நினைவிடம் கட்டவேண்டும் என்பதே எனது ஆசை''’என்று கண்ணீர்மல்க கூறினார்.

சிறுவன் தவறி விழுந்த ஆழ்துளைக் கிணறு சிமெண்ட் கலவை போட்டு மூடப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு திரண்டு வந்த ஏராளமான பொது மக்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த இடத்தில் சுஜித்தின் அம்மாவும் அப்பாவும் அஞ்சலி செலுத்தும் படம் எல்லோரையும் உலுக்கிவிட்டது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் சுஜித் மீட்பதற்காக ஆன செலவு 11 கோடி என்று பரபரப்பாகக் கிளம்ப... அதற்குள் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசன், 5 லட்சம் பணமும், 5,000 லிட்டர் டீசலும் செலவானதாகவும், ரிக் வண்டி கொண்டுவந்த எல்.என்.டி. போர்வெல் வண்டி கொண்டு வந்தவர்கள் எல்லோரும் வாடகை வேண்டாமென்று மறுத்துவிட்டார்கள் எனவும் அவசரமாக அறிக்கை கொடுத்துள்ளார்.

"குழந்தை விழுந்து சிக்கியது 6 அடி ஆழம். அதன்பிறகு பொக்லைன் தோண்டியபோது அதிர்வில் 27 அடிக்குச் சென்றான். 70 அடிக்குப் போன நேரத்திலேயே மண் சரிவால் மூச்சு முட்டி இறந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், "பிராணவாயு போகுது, உடல் சூடு இருக்கிறது' என்று சொன்னதெல்லாம் ஏனோ தெரியவில்லை'' என்று கண்ணீருடன் சொல்கிறார்கள் மீட்புப் பணியில் இருந்த அதிகாரிகள் சிலரே. சுஜித்தின் மீட்புப்பணியில் ஆழ்துளைக் கிணறு ஆழத்திற்கு இன்னும் பல மர்மங்கள் புதைந்துள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

- இரா.பகத்சிங்