Skip to main content

ஜெயலிதாவை முதல்வர் ஆக்கியதே சசிகலா குடும்பத்தினர்தான் -தேனி கர்ணன் பேச்சு!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020
ுப


ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்து தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், சசிகலாவின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரின் ஆதரவாளர் தேனி கர்ணனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்குரிய முயற்சிகளை தமிக அரசு எடுத்துவந்த நிலையில், நீதிமன்றம் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகிய இருவர்தான் வாரிசு என்று அறிவித்துள்ளது. இதில் மற்றொரு விஷயம் என்வென்றால் ஜெயலலிதாவோடு 35 ஆண்டு ஒன்றாக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்தால் அங்கு செல்வாரா, அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். ஒரு சசிகலா ஆதரவாளராக அதை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழக அரசு முதலிலேயே அந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதற்கு அப்போது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கழகத்தில் உள்ள கோடிக்கணக்கான உறுப்பினர் அம்மா வாழ்ந்த அந்த வீட்டை தரிசித்து விடலாம் என்று மன மகிழ்வோடுதான் அந்த அறிவிப்பை பார்த்தோம். அப்போது நீதிமன்றம் அந்த சொத்தை மூன்று பாகமாக பிரித்துள்ளார்கள். இந்த உத்தரவு ஒரு பக்கம் இருந்தாலும்,  35 ஆண்டுகளாக அம்மாவுடன் உடன் இருந்தவர் சின்னம்மா. அப்போது இந்த தீபா, தீபக் எல்லாம் எங்கே இருந்தார்கள். திருமணம் ஆகி சில வருடங்களிலேயே சின்னம்மா, அம்மாவுடன் சென்று அவர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பு அரணாக இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகும், ஜானகி அணி பிரிவுக்கு பிறகும் அம்மாவுக்கு பாதுகாப்பாக இருந்தவர்கள் சின்னம்மா குடும்பத்தினர். 

 

 


சின்னம்மா குடும்பத்தினர் நடராஜன் ஐயா, திவாகரன், சுதாகரன் உள்ளிட்டவர்கள் அம்மாவுடன் கூடவே இருந்து அவர்களை முதல்வர் ஆக்கினார்கள். மூன்று முறை முதல் பதவியில் அமரவைக்கப்பட்டது அவர்களின் முயற்சியில்தான். இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது. சின்னம்மா தற்போது சிறையில் இருக்கிறார். அவர் வெளியே இருந்தால் இந்த நினைவில்லம் கட்டுவதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்.  அம்மாவின் சொத்துகள் எதுவாக இருந்தாலும் சின்னம்மா வரும் வரை காத்திருக்கலாம் அல்லவா? அம்மாவுக்கு பிறகு சின்னம்மா தான் அரசியல் வாரிசு என்று கூறுவதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றது. 

சசிகலாதான் அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா எப்போது கூறினார் என்று கூற முடியுமா?

அம்மா நோய்வாய்பட்டு இறந்துள்ளார்கள். எனவே சின்னம்மா அதனை கேட்கவும் இல்லை, அதனால் அவர்கள் அவ்வாறு செய்யவும் இல்லை. இருந்தாலும் சின்னம்மா அவர்கள் என்னை தாயாகவும், சகோதரியாகவும் பாதுகாத்து வருகிறாள் என்று நிறைய தொலைக்காட்சி பேட்டிகளில் அம்மா தெரிவித்துள்ளார். அம்மா சினிமாவில் இருந்தபோது நிறைய சம்பாதித்துள்ளார். அனைத்து சொத்துகளும் முறையானவர்களுக்கு போக வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மக்களுக்கு போனால்கூட எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் தீபா அவர்கள், அம்மாவுக்கு என்ன செய்தார்கள். எதற்காக அம்மாவின் சொத்துகள் போக வேண்டும். அதனால்தான் அதனை எதிர்க்கிறோம்.