தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் அதிருப்தியடைந்து வருகிறார்கள். இதனை பயன்படுத்தி தலைவர் பதவியை கைப்பற்ற ரகசிய காய்களை நகர்த்தி வருகிறார் பா.ஜ.க.வின் துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன். இதற்காக ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனின் உதவியை நயினார் அணுகியுள்ள நிலையில், இது குறித்து டெல்லியில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் சி.பி.ஆரின் சிறப்பு செயலாளர் பத்மநாபன்.
யார் அந்த பத்மநாபன்? என்று விசாரித்தபோது, “கர்நாடகத்தைச் சேர்ந்த பிராமின் இவர். வருமானவரித்துறையில் கர்நாடகாவில் பணி புரிந்தவர். ஒருகட்டத்தில் மத்திய அரசு பணிக்காக டெல்லிக்கு மாற்றப்படுகிறார். மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசில் சில முக்கிய துறைகளில் இருந்தவர்.
மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது அவருக்கு பி.ஏ.வாக நியமிக்கப்பட்டார் பத்மநாபன். ஆனால், அவரது நடவடிக்கை சரியில்லாததால் பத்மநாபனை முந்தைய பணியிடத்துக்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்டார் அன்புமணி.
இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியில் அவருக்கு மவுசு குறையவில்லை. செல்வாக்காக வலம்வந்தார். அந்த செல்வாக்கு 2009-ல் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸ் அரசில், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத்தின் பி.ஏ.வாக சேர்ந்தார் பத்மநாபன்.
இந்த நிலையில் 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கிறது. மோடி பிரதமராகிறார். முந்தைய காங்கிரஸ் கவர்மெண்டில் அமைச்சர்களிடம் கோலோச்சிய நபர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்துகிறார் மோடி.
அந்த சமயத்தில், மத்திய ரசாயனம், உரம் மற்றும் மருந்துகள் துறையில் சார்பு செயலாளராக (அண்டர் செக்ரட்டரி) பணிபுரிந்து வந்த பத்மநாபனை இந்த துறையின் அமைச்சரான கர்நாடகாவை சேர்ந்த அனந்தகுமார், தனது டூர் ப்ரோக்கிராம்களை கவனித்துக் கொள்ளும் பி.ஏ.வாக சேர்த்துக் கொள்கிறார். இதற்காக மோடியிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கினார் அனந்தகுமார்.
இந்த நிலையில், புற்றுநோயால் அனந்தகுமார் மரணமடைய, அதுகுறித்து பத்மநாபனிடம்தான் விசாரித்திருக்கிறார் மோடி. பிரதமரே பத்மநாபனிடம் விசாரித்ததால், பத்மநாபனை பற்றி மற்ற அமைச்சர்களுக்கும் தெரியவருகிறது. இதன்மூலம் பா.ஜ.க.வில் பல மட்டங்களில் புகுந்து வந்தார் பத்மநாபன். அந்த செல்வாக்குதான் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனின் சிறப்பு செயலாளராக நியமிக்க வைத்திருக்கிறது” என்று அவரைப் பற்றி விவரிக்கின்றனர் பா.ஜ.க. மேலிடத் தொடர்பாளர்கள்.
பா.ஜ.க.வில் இணைந்திருந்த நயினார் நாகேந்திரனுக்கு பத்மநாபனின் அறிமுகம் கிடைக்கிறது. அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் நயினார். பா.ஜ.க.வில் இணைந்தும் நயினாருக்கு முக்கியமான பதவி கிடைக்காத சூழலில் பத்மநாபனின் முயற்சியால் தான் நயினாருக்கு துணைத் தலைவர் பதவி கிடைத்தது. அதன்பிறகு, அவர்களின் நட்பு இறுகியது. இதனை வைத்து தான் தலைவர் பதவியை கைப்பற்றத் துடித்தார் நயினார் நாகேந்திரன்.
அதாவது, பா.ஜ.க. தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதும் நயினாரை தலைவராக்க மிகக் கடுமையான முயற்சியை எடுத்தார் பத்மநாபன். ஆனால், அமித்ஷாவின் சிபாரிசால் அந்த யோகம் அண்ணாமலைக்கு கிடைத்தது.
இந்த நிலையில் சிலபல மாதங்களாக அமைதியாக இருந்த நயினார்-பத்மநாபன் கூட்டணி மீண்டும் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தோல்வி, தமிழகத்தில் அவர் செய்துவரும் ஆரோக்கியமற்ற அரசியல் ஆகியவற்றை தொடர்ந்து அண்ணாமலை மீது பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு சமீபகாலமாக அதிருப்திகள் உருவாகியிருப்பதை வைத்து தலைவர் பதவியைக் கைப்பற்ற மீண்டும் கோதாவில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ஆரிடம் பத்மநாபன் பணிபுரிவதால், ஜார்கண்ட் கவர்னர் மாளிகைக்கு போய் வருகிறார் நயினார். சமீபத்தில் அவர் சென்றிருந்த போது, சி.பி.ஆர். மற்றும் பத்மநாபன் இருவரையும் நயினார் சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ.க. தலைவர் பதவி அல்லது ராஜ்யசபா எம்.பி.யாகி அதன் மூலம் மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்பது குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார் நயினார்.
அப்போது, “ராஜ்யசபாவுக்கான தேர்தல் எதுவும் இப்போதைக்கு இல்லை. நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றமெல்லாம் இப்போது நடக்காது. அதனால், அதைவிட்டுவிட்டு பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வேண்டுமானால் முயற்சித்துப் பார்க்கலாம்” என சொல்லியிருக்கிறார் பத்மநாபன். சி.பி.ஆரும் இதனை ஆமோதித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் நயினாருக்காக டெல்லியின் பல்ஸ் பார்க்க இறங்கியுள்ளார் பத்மநாபன் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
இதற்கிடையே, ராமராஜ்ஜியம், மோடி ராஜ்ஜியம் என்ற முழக்கத்தை முதன் முதலில் வைத்த ஜெய்ஸ்ரீ ஜெய்ராம் என்கிற அமைப்பின் முக்கிய பொறுப்பிலுள்ள திருச்சியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரிடம் தமிழக பா.ஜ.க. மற்றும் அரசியல் நிலவரம் குறித்து அவ்வப்போது ரிப்போர்ட் கேட்டுப் பெறுவது பா.ஜ.க.வின் வழக்கம். இந்த அமைப்பு நயினார் நாகேந்திரனைப் பற்றி நெகட்டிவ்வாக ரிப்போர்ட் தந்துள்ளதாம்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தலைவர் பதவியை கைப்பற்ற நயினார் தரப்பு முயற்சிப்பதால் இது குறித்து கருத்தறிய அவரை தொடர்பு கொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவில்லை.