விரும்பாமல் பதவிக்கு வந்த முதல்வர்!
ஓமந்தூரார் பிறந்த தினம்

வாலாஜா ரோட்டில் செல்லும்போதெல்லாம், பிரம்மாண்ட கட்டிடத்தில் அரசாங்க மருத்துவமனை இயங்கிக்கொண்டிருக்கும். அந்த அரசாங்க நிலத்திற்கு பெயர் ஓமந்தூரார் தோட்டம் என்று சொல்வார்கள். யார் அந்த ஓமாந்தூரார் என்று இப்போது பலருக்கும் கேள்வி எழும். அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் முதன் முதலாக தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்.
அப்போது தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படவில்லை, மதராஸ் மாகாணம் என்றுதான் இருந்தது. இவர் எப்படி முதல்வர் ஆனார் என்ற கதையை கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். சுதந்திரம் கிடைக்க இருக்கும் நேரத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரகாசம், வழிமாறிச் செல்வதாக நினைத்த ராஜாஜியும் காமராஜரும், யாரை அந்த இடத்திற்கு கொண்டுவருவது என யோசிக்கும் போது ஓமந்தூரார் தான் சரியான நபர் என்று இருவரும் முடிவெடுத்தனர். முதல்வர் பதவி உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால் யாராக இருந்தாலும் சட்டென்று ஒப்புக்கொண்டு, பிறகுதான் யோசிப்பார்கள் இந்த வேலை நமக்கு ஏற்றதா என்று. அதுவும் இப்போதுள்ள நிலையில் ஒரு முறை பதவி கிடைத்தால், அதிலிருந்து நகராதவர்களைத் தான் நாம் பார்க்கிறோம். ஆனால், ஓமந்தூராரிடம் நீங்கள் பதவிக்காக போட்டியிடுங்கள் என சொன்னபோது சற்றும் யோசிக்காமல், 'எனக்கு அந்த பதவியெல்லாம் ஒத்துவராது' என்று சொல்லிவிட்டாராம்.

சரி, இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து ஓப்புக்கொள்வார் என நினைத்தவர்களை மூன்று மாதம் வரை காக்க வைத்தவர், அப்போதும் கூட ரமண மகரிஷி ஒப்புக்கொண்டால் போட்டியிடுகிறேன் என்று முட்டுக்கொடுத்தார். மதராஸ் மாகாணத்தில் அப்போது ஆந்திராவும் இணைந்து இருந்தது. ஓமந்தூரார், "நீங்கள் சொல்லிவிட்டால் நான் முதல்வராகிவிட முடியுமா? ஆந்திர அமைச்சர்களும் ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா? இதற்காக நான் யாரிடமும் போய் கைகட்டி நிற்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். ஆந்திர அமைச்சர்களும் தமிழகத்தில் அனைவரும் அவரை ஒருமனதாக ஏற்றால் நாங்களும் அவரை ஏற்கத் தயார் என்று சொல்லிவிட்டனர். ஓமந்தூராரும் வெற்றி பெற்றுவிட்டார். என்னதான் முதல்வர் பதவிக்கு அவர் நாட்டம் கொள்ளவில்லை என்றாலும் பதவி ஏற்ற பின்பு சிறப்பாக செயல்பட்டார். அவரை விட அதிகாரத்தில் பெரியவர்கள் யாருக்கும் அஞ்சாது செயல்பட்டார்.
இவர் ஆட்சிக்காலத்தில் தான் மக்கள் அனைவரும் கோவிலுக்குள் சாதிபேதமின்றி உள்ளே செல்லலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. ஜமீன்தார்களின் சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார், பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து தமிழகத்தின் நம்பிக்கையாகவும் தைரியமான ஒரு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார், ஓமந்தூர் பெரியவளவு ராமசாமி.
விடுதலைக்குப் பின்னர், பல தலைவர்களும் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகள் இவையென்றாலும் முதல்வர் என்ற வகையில் ஓமந்தூராருக்கு முக்கிய பங்கு இருந்தது. அவர் பிறந்த தினம் தான் இன்று (01 பிப்ரவரி). தமிழகம் இன்றும் இவரைப் போன்ற முதல்வரைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறது.
சந்தோஷ்குமார்