பொன்பரப்பி வன்முறை சம்பவம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: ’’மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் அப்பாவிகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய்யான வழக்குகளை பதிந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை தொல்லை தருவது கண்டிக்கத்தக்கது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வாக்களிக்கச் சென்ற பெண்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ‘‘சிதம்பரம் தொகுதியில் எங்களின் கட்சி வெற்றி பெற்ற பிறகு, இங்குள்ள பெண்களின் கதி என்ன ஆகப்போகிறது பாருங்கள்’’ என்று மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அங்குள்ள கடையில் பணியாற்றிய வீரபாண்டியன் என்ற ஊனமுற்ற தொழிலாளரை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்களிப்பதற்காகச் சென்ற சுப்பிரமணியன் என்ற முதியவரையும் அந்த கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் இந்த அட்டகாசத்தை அங்கிருந்த மற்றவர்கள் தட்டிக்கேட்டனர். அதற்காக அவர்களையும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் தாக்கியதைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக, பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, மஞ்சள் சட்டை அணிந்திருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே செய்தியாளர் ஒருவரை கொடூரமான முறையில் விடுதலை சிறுத்தைகள் தாக்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் உள்ளார்.உண்மை நிலை இவ்வாறு இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக, பா.ம.க, ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அப்பாவிகள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரை அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகவே இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வதும், அவர்களின் குடும்பத்தினரை காவல்துறை அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகையப் போக்கை கைவிட்டு, வன்முறையை தூண்டியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கீழ்விசாரத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சுப்புலட்சுமி என்ற காவல்துறை பெண் ஆய்வாளர் ஒருவர் செய்த தவறை மறைக்க பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது அவதூறு பழியை சுமத்தி வழக்குப் பதிவு செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். கீழ்விசாரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று மாலை 5.00 மணிக்கு ராணிப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்ட செயலருமான காந்தி, கள்ளவாக்கு பதிவு செய்யும் நோக்கத்துடன் 10க்கும் மேற்பட்டவர்களுடன் நுழைய முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். காந்தியை மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காந்தி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் சுப்புலட்சுமியை அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்ததாக தெரிகிறது.
அடுத்த சிறிது நேரத்தில் ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளருமான கீ.லோ. இளவழகன் கீழ் விசாரம் வாக்குச்சாவடிக்கு அப்பால் உள்ள தமது இல்லத்திற்கு சென்றுள்ளார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க.வேலுவும் பயணம் செய்துள்ளார். வாக்குச்சாவடிக்கு சற்று முன்பாக அவர்களை மறித்த காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி, அந்த வழியாக செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ‘‘எனது வீட்டுக்கு அந்த வழியாகத் தான் செல்ல வேண்டும்; பொதுப்பாதையில் செல்வதை ஏன் தடுக்கிறீர்கள்?’’ என்று வினா எழுப்பியுள்ளார்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத சுப்புலட்சுமி பா.ம.கவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்குள் அங்கு பாமகவினர் கூடி விட்டனர். கூட்டம் சேர்வதைப் பார்த்த வட இந்திய காவலர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனால் இது பரபரப்பு செய்தியாகி விட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க. வேலு, இளவழகன் உள்ளிட்ட 50 பேர் மீது வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றதாக கூறி பொய் வழக்கு போட்டுள்ளனர்.
வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடும் நோக்கத்துடன் வந்த காந்தியையும், அவரது ஆதரவாளர்களையும் வரவேற்று வாக்குச்சாவடி வளாகத்திற்குள் அனுப்பி வைத்த காவல்துறையினர், தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இளவழகனை மறித்து தகராறு செய்ததன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அரங்க. வேலு சமூகத்தில் மதிக்கப்படும் மனிதர். இ.ஆ.ப. அதிகாரியான அவர் மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டவர். மத்திய தொடர்வண்டித்துறை இணையமைச்சராக செயல்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் பாராட்டப்பட்டவர். 80 வயதை நெருங்கும் அவர் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றார் என்று கூறுவது அவரையும், அவருடைய மரியாதையையும் கொச்சைப்படுத்தும் செயலாகும். இதை விட அபத்தமான செயல் இருக்க முடியாது.
காட்பாடி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் விருப்பம் போல கள்ள ஓட்டு போட்டதை காவல்துறை வேடிக்கைப் பார்த்தது. திமுக மாவட்ட செயலாளர் காந்தி இட்ட கட்டளைகளுக்கெல்லாம் காவல்துறை அடிபணிந்தது. சம்பந்தமே இல்லாமல் பா.ம.க. நிர்வாகிகளை மறித்து, அதனால் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் கற்பிப்பதற்காக பா.ம.க.வினர் பழி சுமத்துவதை ஏற்க முடியாது. எனவே, அரங்க வேலு, கீ.லோ. இளவழகன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். காவல்துறை ஆய்வாளர் சுப்புலட்சுமியின் திமுகவுக்கு ஆதரவு செயல்பாடு குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’