கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் மேடையில் உரை ஏற்றினார்.
அப்போது பேசிய அவர்,
கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை, அதனால் தான் அதிக அமைச்சர்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால் தான் இந்த ஆட்சி தொடர்ந்து வருவதாக கூறினார். எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா கூட அமைச்சராக தான் ஆக்கினார், ஆனால் முதலமைச்சராக்கிய சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார் எனவும், ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற முதலமைச்சர் பேச்சை குறிப்பிட்ட டிடிவி தினகரன், இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை எனவும் சுட்டிக் காட்டினார். இரட்டை இலை சின்னம், ஆட்சி அதிகாரம் இருந்தும் 150 கோடி செலவு செய்தும் என்னை வெற்றி பெற முடியவில்லை எனவும், நான் புறவழியில் வந்தவன் அல்ல, ஜெயலலிதாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவன் என தெரிவித்தார்.
ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை என்ற காரணத்தினால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த என்னை அரசியலுக்கு வரவழைத்தார் என்றும் திருப்பூரில் இருந்து கட்சி துணிகளை எடுத்து கொண்டு என் வீட்டில் வந்து நின்றவர் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தெரிவித்தார். இந்த படம் என்னிடம் இன்றும் உள்ளது, வேண்டுமென்றால் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கிறேன். சாக்கடை சுத்தம் செய்ய வேண்டிய அமைச்சர் சாக்கடை போல பேசுகிறார் என புகார் கூறினார். துரோகம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மடியில் கனம் இருந்ததால் டெல்லிக்கு பயந்து கொண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள் என தினகரன் குற்றம்சாட்டினார். 2014 ல் ஜெயலலிதா கூட்டணிக்கு வராததால் பாஜக பழி வாங்குவதாகவும், என்னை கட்சியில் இருந்து வெளியேற சொன்னவர்கள், அரசியலில் இருந்து வெளியாறுவார்கள் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
நான் நினைத்திருந்தால் 2001 லேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம் என கூறியவர் நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல எனவும் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன். இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் எனவும் ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்.
பணம் கொடுத்தோ, பிரியாணியோ, முட்டை கொடுத்தோ, மது கொடுத்தோ கூட்டத்தை சேர்க்கவில்லை. தற்போது திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ரெய்டு துவங்கிவிட்டதாகவும் முட்டை வடிவத்தில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்துள்ளதாகவும், விரைவில் தமிழக அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என விமர்சனம் செய்தார்.
நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும், அதன் பின் சட்டமன்றத்தை காலி செய்ய வேண்டியிருக்கும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திணிக்க முயன்றால், மக்களுடன் இணைந்து அமமுக போராடும் என தெரிவித்தார். பன்னீர்செல்வம் மகன், பி.ஹெச் பாண்டியன் மகன் கட்சி பொறுப்புகளில் உள்ளனர், ஆனால் எங்களை குடும்ப ஆட்சி என்கின்றனர். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு பின் அமமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார். 234 தொகுதிகளும் ஆர்.கே.நகர் தொகுதி போல் மீண்டும் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.