பால் முகவர்களுக்குரிய லாபத்தை மொத்த விநியோகஸ்தர்கள் அபகரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் "பால் முகவர்களுக்கு தனியார் பால் நிறுவனங்களைப் போல் நேரடி வர்த்தக தொடர்புகளைத் தர வேண்டும், சுமார் 18ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருக்கும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி, சதவிகித அடிப்படையில் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக பால்வளத்துறை அமைச்சர்கள், பால்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் என பலதரப்பட்டோரை தொடர்ந்து நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தும், தமிழக அரசுக்கு தபால் வாயிலாக எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் வந்திருக்கிறோம்.
எங்களது சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் கடலில் வீசப்பட்ட கற்களாக மூழ்கிப் போய் கிடந்தாலும், அதே கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாக காணாமல் போயிருந்தாலும் கூட எங்களது கோரிக்கையின் ஒரு பகுதியாக சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் சுனில் பாலிவால் ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த போது அப்போதிருந்த 34மொத்த விநியோகஸ்தர்களை தவிர்த்து பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளை வழங்கிடும் வகையில் 1000ம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யும் பால் முகவர்களை மொத்த விநியோகஸ்தர்களாக நியமனம் செய்யும் உத்தரவை பிறப்பித்தார். அதன் காரணமாக மொத்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை அப்போது சுமார் 150வரை உயர்ந்ததோடு ஆவின் பால் விநியோகம் தடையின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் விநியோகம் செய்ய முடிந்தது. அதனால் ஆவின் பால் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
ஆவின் நிறுவனத்தில் மொத்த விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை அதிகமான காரணத்தால் அது வரை பழைய மொத்த விநியோகஸ்தர்களால் ஆதாயம் அடைந்து கொண்டிருந்த ஆவின் விற்பனை பிரிவு உயரதிகாரிகள் பலரும், அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு ஆவினை சுரண்டிக் கொண்டிருந்த பழைய விநியோகஸ்தர்கள் சிலரும் இணைந்து கொடுத்த பல்வேறு நெருக்கடி காரணமாகவும்.
ஆவின் பாலினை விநியோகம் செய்வதற்கான வாகன வாடகையாக முதலில் லிட்டருக்கு 40காசுகள் ஆவின் நிர்வாகம் வழங்கி வந்த நிலையில் அந்த வாடகை கட்டணத்தை லிட்டருக்கு 70பைசாவாக உயர்த்தி வழங்கிய போது அதில் 20பைசாவை மாதந்தோறும் கணக்கிட்டு லஞ்சமாக கொடுத்தால் தான் பிரதி மாதம் தடையின்றி வாகன வாடகை வழங்கப்படும் என அமைச்சரின் பெயரால் ஆவின் விற்பனை பிரிவு உயரதிகாரிகள் மிரட்டியதால் தங்களின் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள வேறு வழியின்றி அவர்களுக்கு தொடர்ந்து கப்பம் கட்டி வந்ததால் ஏற்பட்ட இழப்பினாலும் ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் புதியவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 65ஆக குறைந்து போனது. தற்போதும் ஆவின் அதிகாரிகளுக்கு மொத்த விநியோகஸ்தர்கள் லிட்டருக்கு 20பைசா கப்பம் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2019ஆண்டில் மட்டும் கடந்த ஏப்ரல் - 2ம் தேதி, ஜூலை - 16 மற்றும் 30ம் தேதி, ஆகஸ்ட் - 3ம் தேதி ஆகிய நாட்களில் ஆவின் தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் இ.ஆ.ப ஜூலை-16 மற்றும் ஆகஸ்ட் 9ம் தேதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்களது சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து மேற்கண்ட எங்களது நியாயமான, நீண்ட நாள் கோரிக்கைகளை முன் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அப்போது எங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு நேரத்தில் கண்டிப்பாக உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த 19.08.2019ம் தேதி முதல் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தி 17.08.2019அன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் பால் முகவர்களின் நியாயமான நீண்ட நாள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதாக தகவல் இடம்பெறாததோடு, பால் முகவர்களை தமிழக அரசும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது உறுதியானது.
இந்நிலையில் 29.08.2019ம் தேதியிட்டு ஆவின் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் இ.ஆ.ப 01.9.2019ம் தேதி முதல் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை லிட்டருக்கு 50பைசா உயர்த்தி ஆவின் பாலிற்கான மொத்த கமிஷன் தொகை லிட்டருக்கு 2.00ரூபாய் எனவும், அந்த தொகை மொத்த விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் சில்லரை வணிகர்களுக்கும் (WSD & Retailer) என குறிப்பிட்டு பொதுமக்களுக்கு ஆவின் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்யும் பால் முகவர்களை புறக்கணித்து உத்தரவிட்டுள்ளார்.
அப்படியானால் ஆவின் நிர்வாக இயக்குனர் பொதுமக்களுக்கு ஆவின் பாலினை பால் முகவர்கள் எவரும் விநியோகம் செய்யவில்லை என சொல்ல வருகிறாரா....? அல்லது பால் முகவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி இலவசமாக பணியாற்றிட வேண்டும் என சொல்ல வருகிறாரா...? என தெரியவில்லை.
ஆவின் நிர்வாக இயக்குனர் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போதுள்ள 65மொத்த விநியோகஸ்தர்களில் பெரும்பாலானவர்கள் உயர்த்தப்பட்டுள்ள 50பைசா கமிஷன் தொகையில் 15பைசா முதல் 25பைசா வரை ஆவின் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் லஞ்சமாக கொடுக்க வேண்டியதிருப்பதால் அதனை உங்களுக்கு தர முடியாது என உயர்த்தப்பட்ட கமிஷன் தொகையை பால் முகவர்களுக்கு தர மறுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தற்போதுள்ள 65மொத்த விநியோகஸ்தர்களில் ஆவின் அதிகாரிகளின் பேச்சிற்கு கட்டுப்பட்டு, அவர்களுக்கு சாதகமாக செயல்படுவோருக்கு மட்டுமே மொத்த விநியோக உரிமை எனவும், அதற்கு 50லட்சம் ரூபாய் முன் வைப்புத் தொகையோடு எதிர் கேள்வி கேட்காமல் சுமார் 20லட்சம் ரூபாய் வரை கப்பம் கட்ட தயாராக இருக்கும் சுமார் 10பேரை மட்டும் தேர்வு செய்து விட்டு மீதமுள்ள விநியோகஸ்தர்களை ரத்து செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளை ஆவின் நிர்வாகம் தரும் என மிகுந்த நம்பிக்கையோடு இருந்த வேளையில் அந்த நம்பிக்கையை சிதைக்கின்ற வகையிலும், ஆவின் நிறுவனத்தை அழிவிற்கு கொண்டு செல்கின்ற வகையிலும் தற்போதுள்ள சுமார் 65மொத்த விநியோகஸ்தர்களை ரத்து செய்து விட்டு வெறும் 10பேரிடம் ஒப்படைக்க திட்டமிடும் ஆவின் நிர்வாகத்தின் கணக்குகளை கணக்கிட்டு பார்க்கும் போது ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியை விரும்பாத, ஆவினை அழிக்க நினைக்கின்ற ஏதோ ஒரு சக்தி இதன் பின்னால் இருந்து இயக்குகிறதோ என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆவின் நிறுவனத்தின் அழிவுப் பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவின் உயரதிகாரிகளை தீவிரமாக கண்காணித்து, அவர்களிடம் பல்வேறு சோதனைகளை நடத்தி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் எனக்கூறியுள்ளார்.