சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல… ஆட்டுக்கறிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 17- ந்தேதி சனிக்கிழமை இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் இரயில்நிலையத்திற்கு வந்தது ஆட்டிறைச்சிபோல் அல்ல என்ற சந்தேகம் ஏற்பட்டது. அது, நாய்க்கறி என்ற தகவல் தீயாய், ம்ஹூம்... நாயாய் பரவியது. இதனால், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியின் கால்நடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்துறை (இறைச்சி அறிவியல்)க்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. டி.என்.ஏ. உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்த துறைத்தலைவர் டாக்டர் அப்பாராவ் தலைமையிலான டாக்டர்கள் டீம்… பரிசோதனை முடிவை உணவுபாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவனிடம் 22 ந்தேதி (இன்று) ஒப்படைத்தனர். அந்த ஆய்வின் முடிவில் சென்னை எழும்பூரில் பிடிப்பட்டது நாய்க்கறி அல்ல… ஆட்டுக்கறிதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளிமாநிலங்களிருந்து இரயிலில் கொண்டுவரப்படும் இறைச்சிகள் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்படுவதில்லை. மேலும், உணவுபாதுகாப்பு சட்டத்துக்குப்புறம்பாவும் எந்தவிதமான அனுமதியும் இல்லாமலும் வெவ்வேறு பெயர்களில் இரண்டுநாட்கள் இரயிலில் கொண்டுவரப்படும் இறைச்சிகள் கடத்தல் இறைச்சிகள்தான். கடத்தல்காரர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். அதனால், ஹோட்டல்களில் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரும் இறைச்சிகளை சாப்பிடவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள்.