கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தன கடத்தல் வீரப்பனால் கடந்த 30.07.2000 அன்று தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்திலிருந்து கடத்தப்பட்டு பிணைக் கைதியாக காட்டுக்குள் வைக்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கு விசாரணை கடந்த 18 வருடமாக நடந்து வந்தது. அதன் தீர்ப்பு 25.09.2018 காலை கோபிசெட்டிபாளையம் அமர்வு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி மணி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்ததோடு இவர்கள் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று கடுகளவு கூட போலீஸ் நிரூபிக்கவில்லை என்றார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டி விவரம்:-
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக 30.07.2000 அன்று தாளவாடி பகுதியில் கன்னட நடிகர் ராஜ்குமார் தனக்கு சொந்தமான இடத்தில் புது வீடு கட்டி அதன் திறப்பு விழாவுக்கு வந்தபொழுது, வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் ஆயுதங்களோடு வந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்றதாக இந்த வழக்கு போடப்பட்டது.
அப்படி போடப்பட்ட வழக்கில் ராஜ்குமாருடன் சென்றிருக்கக்கூடிய அவருடைய மருமகன் கோவிந்தராஜூ மற்றும் அவரது உதவியாளர்கள் நாகேஷ், நாகப்பா ஆகியோரை 108 நாட்கள் வீரப்பன் தன்னுடன் காட்டில் வைத்துக்கொண்டு, 10 கோரிக்கைள் அடங்கிய கேசட்டை அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அனுப்பியதாகவும், அந்த கோரிக்கைகளுக்காக இவர்களை கடத்தி வைத்திருந்தாகவும் கூறப்பட்டிருந்தது.
108 நாட்களில் 68வது நாள் நாகப்பா என்பவர் வீரப்பனை தாக்கிவிட்டு தப்பியதாக வழக்கு ஜோடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே நக்கீரன் ஆசிரியர் திரு.நக்கீரன் கோபால் அவர்களையும், அவருடைய உதவியாளர்களையும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு தூதுவர்களாக நியமித்து கடத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அனுப்பினார்கள். நக்கீரன் கோபால், அவருடன் நிருபர்களும் 4 முறை காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின்போது பணயக்கைதி நாகப்பா என்பவர் தப்பித்து விடுகிறார். அதனால் வீரப்பன் ஆட்கள் வேண்டுகோளுக்கிணங்க நக்கீரன் கோபால், பழ.நெடுமாறன் இருவரின் தலைமையில் பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் ஆகியோரோடு மீண்டும் 5, 6 முறை காட்டுக்கு பயணித்து பணயக்கைதியான கோவிந்தராஜை முதலிலும், கடைசியாக கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் நாகேஷ் இருவரையும் வீரப்பனிடமிருந்து விடுவித்து வந்தார்கள்.
இந்த வழக்கில் ராஜ்குமார் கடத்தப்பட்ட பின்னால் 2004ம் ஆண்டு வீரப்பனையும், அவனது கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுண்டனை மோதல் சாவு என்ற பெயரில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் அதிரடிப்படை சுட்டுக்கொன்றது எல்லோருக்கும் தெரியும்.
ஆகவே 14 பேர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுண்டன் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். தமிழ் என்கிற ரமேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும், அதோடு மலைவாழ் மக்களில் ஒருவரான மல்லு என்பவர் இறந்துவிட்டதாகவும் சொன்னதால் மீதி உள்ள 9 பேர் மீது இந்த வழக்கு நடந்தது. இந்த வழக்கினை கோவை சிபிசிஐடி போலீசார் எடுத்து நடத்தினர். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் உண்மையிலேயே வீரப்பன் எந்த நோக்கத்திற்காக கடத்தினான் என்று தீர்ப்பில் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் நீதிபதி.
கடத்தியது பணத்திற்காக என்ற குற்றச்சாட்டு இருந்தாலும்கூட, அந்த குற்றச்சாட்டை அரசாங்கமே மறுத்து கோரிக்கைகளுக்காகத்தான் கடத்தப்பட்டனர் என்று சொல்லி பிறகு கொண்டு வருகிறார்கள். அப்படி சொல்கின்றபோது இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், வீரப்பனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று பார்க்கிறபோது, இந்த வழக்கில் ஆரம்பம் முதலே அரசு தரப்பில் புலனாய்வுத்துறையில் திட்டமிட்டே பல உண்மைகளை மறைத்திருக்கின்றனர்.
சம்பவம் நடந்த பின்னால் அதாவது ராஜ்குமாரும் அவரோடு மூன்று பேரும் கடத்தப்பட்ட பின்னால் மறுநாள் காலையிலேயே போலீசார் சென்று அங்கிருந்த எல்லோரிடமும் விசாரணையை தொடங்கிவிட்டார்கள். அப்படி தொடங்கிவிட்ட பின்னாலும் கூட 24 மணி நேரத்திற்கு பின்னால்தான் தாளவாடி கிராம நிர்வாக அதிகாரி கோபால் என்பவரை வைத்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்திற்கான தாமதமும், முதலில் விசாரிக்கப்பட்ட உண்மையையும் ஏன் மறைக்கப்பட்டது என்று நீதிமன்றம் மிக முக்கியமான வினா எழுப்பியது.
இரண்டாவதாக இந்த வழக்கில் ராஜ்குமார், அவரது மனைவி பர்வத அம்மாள் உள்பட உறவினர்கள் யாரும் புகார் தரவில்லை. அதுமட்டுமல்ல ராஜ்குமாரும் சாட்சி சொல்ல வரவில்லை. பர்வத அம்மாளும் வரவில்லை. இந்த இரண்டு பேருமே புகார் கொடுக்காதது மட்டுமல்ல, சாட்சி சொல்லக் கூட வராதது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. உண்மையை மறைத்திருக்கிறார்கள் என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கில் ஆவணங்கள் முழுக்க காலதாமதமாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் இருந்தார்கள் என்று சொல்லுவதற்கு அவர்களுடைய அங்க அடையாளங்கள் பற்றி குறிப்பிடுவதற்கு சட்டப்படி அங்க அடையாளங்களை எழுத வேண்டும். சம்பவத்தின்போது ஒருவர் பார்த்திருந்தால், அவர் முன்பின் தெரியாதவராக இருந்திருந்தால், அவருடைய உடல் அமைப்பை பற்றி புலனாய்வு அதிகாரி தெளிவாக எழுதி வைத்திருந்தால்தான் அவர்களைப் பற்றி அடையாளமோ, நீதிமன்றத்தில் காண்பிக்கவோ சரியாக இருக்க முடியும்.
ஆனால் இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களே பத்து மாதங்களுக்கு பின்புதான் அனுப்பப்பட்டிருக்கிறது. இது சந்தேகத்திற்குரியது என்று சொல்லியிருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்துமே அந்தந்த இடத்தில் மூடி முத்திரை வைக்கப்படவில்லை. அதுவும் சந்தேகத்திற்குரியது. இந்த வழக்குக்கு சம்மந்தப்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல எதிரிகளின் வீடுகளில் சோதனை செய்யப்படவில்லை.
ஆகவே இறுதியாக தூதுவர்களாக போயிருக்கக்கூடிய நக்கீரன் கோபால் அவர்களையோ, அவரது உதவியாளர்களையோ ஏன் விசாரிக்கவில்லை? ராஜ்குமார் காட்டில் இருந்தபோது இவர்கள்தான் சென்று பேச்சுவார்த்தை நடத்தியவர்கள். அவர்களை விசாரித்திருந்தால் உண்மை தெரிந்திருக்க முடியும். இவர்கள் எதுவுமே புலனாய்வு செய்யாதபோது, வீரப்பனுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுவதற்கு கடுகளவும் சாட்சியில்லாத காரணத்தினால் சந்தேகத்திற்கான பலனை கொடுக்கிறேன் என்று சொல்லி தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். ஆகவே இந்தத் தீர்ப்பானது உண்மையிலேயே வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக இருக்கிறது.