ஈரோடு புத்தகக் கண்காட்சியில் இந்து மத விமர்சனம் குறித்த புத்தகங்கள் விற்கக் கூடாது என்று காவல்துறை சார்பாக அழுத்தம் கொடுத்தது பற்றியும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் மணியம்மை விரிவாக எடுத்துரைக்கிறார்
தமிழ்நாடு என்பது பகுத்தறிவு மண், பெரியார் மண். பாசிசம் தலைதூக்கும் போதெல்லாம் அதற்கு எதிராக சமூகநீதியை விதைக்கும் மண் தமிழ்நாடு. எப்போதுமே பெரியார், அம்பேத்கர், திராவிட இயக்கத்தினர் எழுதிய புத்தகங்களே புத்தகக் கண்காட்சிகளில் அதிகமாக விற்பனையாகும். ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 'அர்த்தமற்ற இந்துமதம்' என்கிற புத்தகத்தை விற்கக்கூடாது என்று காவல்துறையின் உதவியுடன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் சொல்கின்றனர். இதைச் செய்தவர்கள் யார் என்பதை நாம் நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும்.
இன்று அனைத்து துறைகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவியிருக்கிறது. நீதிமன்றத்திலும் அது இருக்கிறது. நாங்கள் சமூகநீதி பேசுகிறோம், பெண்ணுரிமை பேசுகிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் என்றைக்காவது நல்ல விஷயங்களைப் பேசியிருக்கிறார்களா? நாங்கள் எங்களுடைய கருத்துக்களை நேரடியாகப் பேசுகிறோம். ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு உறுப்பினர் அட்டையே கிடையாது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகள் எப்போதும் ரகசியமாகவே இருக்கும். ஏன் அவர்களுக்கு இந்த அச்சம்? அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் அனைத்து பொறுப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் அதிகரித்தது.
பாபர் மசூதி இடிப்பை தமிழ் மண் ஆதரிக்கவில்லை. அந்த நேரத்தில் இங்கிருந்து அமைதியை நிலைநாட்டுவதற்காக காவல்துறை அனுப்பப்பட்டது. இந்துத்துவ கருத்துக்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம். ஆர்எஸ்எஸ் தீட்டும் சதித்திட்டங்களில் இருந்து தப்பிக்க தமிழ்நாடு அரசு கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வை இங்கு நாம் பார்க்க முடியும். இந்த மதநல்லிணக்கம் தான் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறது. இதை மற்ற மாநிலங்களில் பார்க்க முடியாது. புத்தகக் கண்காட்சியில் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என்று சொல்லும் உரிமை ஒரு காவல்துறை அதிகாரிக்கு எப்படி வந்தது? சட்ட ஒழுங்கை பாதுகாப்பது தான் அவருடைய வேலை. ஆனால் அவர் அதைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்கிறார். அவரை முதலில் விசாரிக்க வேண்டும். காவி ஆடுகள் களையப்பட வேண்டும்.