Skip to main content

“லோன் வேண்டுமா?” தூண்டில் போடும் இளம்பெண்கள்… ஏமாறும் இளைஞர்கள்! -தொடரும் மோசடி!

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
finance

 

‘லோன் வேணுமா சார்?’ என்று இளம்பெண்ணின் இனிமையான குரலில் செல்பேசி அழைப்புகள் வந்தால் உஷாராகிவிடவேண்டும். ஹி ஹி என ஜொள்ளிளித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் பெரும்பாலும் ‘லோன்’ கிடைக்காது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் இழந்துவிட்டு லோ(ன்) லோவென்று காவல்நிலையத்திற்கும் வீட்டுக்கும் நடையாய் நடக்கவேண்டியிருக்கும்.    
 

அப்படித்தான், இளைஞர் சஞ்சய்க்கு 95248 55183 என்ற செல்ஃபோன் எண்ணிலிருந்து ஃபோன்கால் வந்தது. டெக்காவோன் சொல்யூஷன்ஸ்லிருந்து பேசுவதாகவும் தனது பெயர் ஸ்வேதா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இனிமையான குரல், “பிசினஸ் லோன் வேண்டுமா?” என்று சிணுங்கியது.
 

‘வீட்டுக்கு வர்ற லட்சுமியை யாராவது வேணாம்னு சொல்வாங்களா? அதுவும், ஸ்வேதாங்குற லட்சுமி மூலமா கிடைக்குற லட்சுமிய ஏன் வேணாம்னு சொல்லணும்?’ சஞ்சயின் மைண்ட் வாய்ஸ் மங்காத்தா ஆட ஆரம்பிக்க, ‘ஆமாம்… சொல்லுங்க’ என்றார் ஆவலாக.
 

 ‘ஆமாம்’… என்ற ஒற்றைச்சொல்லில் உயிர்வாழும் அந்த இளம்பெண்ணும் அவருக்கு  பின்னால் இருக்கும் மோசடி கும்பலும் ’மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சே’ என்று பாட்டு பாடாத குறையாய் டான்ஸ் ஆடம்பித்தன. உடனே, உங்களது ஆதார் கார்டு, பேன் கார்டை எங்களுக்கு வாட்ஸ்-அப் அனுப்புங்கள் என்று சொன்னார் ஸ்வேதா என்ற பெயரில் பேசிய அந்த இளம்பெண். ம்ஹூம்… பெண். ம்ஹூம்…. பெண் குரலில் பேசும் ஆணாக கூட இருக்கலாம். அதற்குக்கூடத்தான்  ‘ஆப்’ வந்துவிட்டனவே.
 

சஞ்சய் அனுப்பிய சில நிமிடங்களில் அந்த பெண் குரலிடமிருந்து மீண்டும் ஃபோன்.
 

“உங்களுக்கு மூணு லட்ச ரூபாய் லோன் தரலாம். அதுக்கு, நீங்க எலிஜிபிளா இருக்கீங்க” என்றதும் ’ஹப்படா… நம்ப பிசினஸ்ஸை டெவலப் பண்ணிடலாம்’ என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் சஞ்சய். கிட்டத்தட்ட,  திருவிளையாடல் படத்தில் பரிசு கிடைக்கும் என்று கருமி புலவர் காத்திருப்பதுபோல்.
 

அப்போதுதான், தூண்டில் போட ஆரம்பித்தது அந்த பெண் குரல்.
 

“ஆக்‌ஷுவலா… நிதி மைக்ரோ ஃபைனான்ஸ் மூலமாத்தான்  லோன் வாங்கி உங்களுக்கு கொடுக்குறோம். அதை, கரெக்டா திருப்பி கட்டிட்டுவேன்னு நீங்க 15,000 ரூபாய் பணம் கட்டி உத்தரவாதம் கொடுக்கணும்” என்று கண்டிஷன் போட்டது. ஏற்கனவே, கஷ்டத்தில் இருக்கும் சஞ்சய்க்கு 15,000 ரூபாய் கட்டவேண்டும் என்பது சுமையாய் தெரிந்தது. அதனால், திரும்ப கால் பண்ணி பேசுறேன் என்று ஃபோனை துண்டித்துவிட்டார்.

 

finance


 

ஆனால்,  “நான்கு நாட்களில் உங்கள் லோன் அமவுண்ட் உங்க அக்கவுண்டில் கிரடிட் ஆகிவிடும். நீங்க கொடுக்கிற 15,000 ரூபாய் இன்சூரன்ஸ் அமவுண்ட்தான். நீங்க, லோன் அமவுண்டை திருப்பி கட்டாதபோது 15,000 ரூபாய் அமவுண்டை மைனஸ் பண்ணிக்கலாம்…நம்புங்கள்” என்று 84280 26451…. 87544 04246…. 93846 34926….91763 30511 உள்ளிட்ட எண்களிலிருந்து சஞ்சய்க்கு தொடர்ந்து ஃபோன் கால் வந்துகொண்டே இருந்தது.   
 

மூன்று லட்ச ரூபாய் வந்ததும் தனது பிசினஸ்ஸை எப்படியெல்லாம் டெவலப் செய்யலாம் என்று கற்பனை செய்துவைத்தவருக்கு அந்த கற்பனை  கண்ணில் காட்சியாய் ஓடிக்கொண்டிருந்தது. 3 லட்ச ரூபாய் கடனுக்கு 15,000 ரூபாய் பெரிய விஷயமல்ல என்று அந்த கற்பனைக்காட்சிகள் வந்து சர்ஃப் எக்ஸல்… டைடு… ரின் போன்ற பவுடர்கள் போடாத குறையாய் பிரைன் வாஷ் செய்தன.   
 

2018 மே- 28 ந்தேதி ஆக்ஸிஸ் வங்கியில் 9170 2007 7572 591 என்ற நடப்புக்கணக்கு எண்ணில் 15,000 ரூபாய் பணம் கட்டினார் சஞ்சய். அதற்குப்பிறகு, ஸ்வேதாவிடமிருந்து  சஞ்சய்க்கு ஒரு மிஸ்டுகால்கூட வரவில்லை என்பதுதான் வேதனை. இவரே, அழைத்தாலும் ம்ஹூம். ஃபோன் அட்டெண்ட் செய்யவில்லை. வெயிட்டிங்கில் போகிறது. பிஸி பிஸி என்று வருகிறது. மெசேஜ் அனுப்பினால் நோ ரிப்ளை.

 

finance


 

மூன்று லட்ச ரூபாய் லோன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து  15,000 ரூபாய் அனுப்பிவிட்டு 10 நாட்களாக மரணவேதனையை அனுபவித்தார் சஞ்சய். அதற்குப்பிறகு, என்ன நடந்தது? பணத்தை பறிகொடுத்த சஞ்சய் நம்மிடம், “டெக்காவோன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் போலியானது. மக்களிடம் லோன் தருவதாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்று மீம்ஸ் தயாரித்து 91763 30511 என்ற அவர்களது வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பிவைத்தேன். உடனே, பதறியடிச்சுக்கிட்டு ஸ்வேதாவும் அவரது மேனேஜர் என்று சொல்லிக்கொண்ட விஸ்வாவும் லைனில் வந்தார்கள்.
 

‘இன்னும் ஒருவாரத்துல உங்களுக்கு லோன் வந்துடும். இப்படில்லாம், மீம்ஸ் போடாதீங்க’னு கெஞ்சினாங்க. ஆனா, ஒருவாரத்துக்குப்பிறகும் லோனும் வரல ஃபோனும் வரல. ஆனா, அவர்கள் அனுப்பின ஒரு டிஸ்கவுண்ட் கார்டு மட்டும் எனக்கு கூடியரில் வந்தது. சில நாட்கள் கழித்து நிதி மைக்ரோ ஃபைனான்ஸில்ருந்து ஒரு பெண் தொடர்புகொண்டு, ’45 நாட்களுக்கு அதாவது ஜூலை-25 ந்தேதிக்குள் லோன் கிடைச்சுடும்’னு சொன்னார். ஆனா, 45 நாட்கள் கழித்தும் லோன் கிடைக்கல. மீண்டும் ஸ்வேதாவுக்கு பலமுறை கால் பண்ணினபோது ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை. இது, சம்பந்தமாக சமூக வலைதளங்களில் தேடியபோதுதான் என்னைப்போலவே ஸ்வேதாவிடம் பலர் ஏமாந்திருப்பது தெரியவந்தது. (இதை, முன்கூட்டியே தேடிப்பார்த்திருக்கலாமே?) மேலும், ஸ்வேதா தனது முகநூல் பக்கத்தில் ப்ரொஃபைல் பிக்சராக வைத்திருக்கும் புகைப்படமும் போலியானது என்பது தெரியவந்தது. அதாவது, அந்த புகைப்படம் குறித்து கூகுளில் தேடியபோது பாகிஸ்தானிலுள்ள ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, காவல்துறையில் புகார் கொடுக்கப்போறேன். 15,000 ரூபாய் பணம் திரும்ப கிடைக்குதோ கிடைக்கலையோ? என்னை மாதிரி கஷ்டப்பட்டுக்கிட்டிருவங்ககிட்ட கடன் தர்றேன்னு சொல்லி ஏமாற்றுகிற அந்த மோசடி கும்பலை சும்மா விடமாட்டேன்” என்றார் வேதனையுடன்.


 

finance
                 ஸ்வேதா என்கிற பெயரில் போலியான புகைப்படம்




 

முத்து பிரசன்னா இருளாண்டி, சேகர் உமாசங்கர் ஆகியோரை இயக்குனராகக் கொண்ட எண்-628 , சி.டி.ஹெச். ரோடு, பட்டாபிராம், சென்னை-72  முகவரியில் இருக்கும் டெக்காவோன் சொல்யூஷன் பிரைவேட் லிமிட்டெட் (TECHAVON SOLUTIONS PRIVATE LIMITED) கம்பெனியின் செல்பேசி எண்களுக்கு பலமுறை தொடர்புகொண்டபோது யாரும் அட்டெண்ட் செய்யவில்லை.  எஸ்.எம்.எஸ். அனுப்பியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதுபோன்ற, மோசடி நிறுவனங்கள் அந்தந்த பகுதி காவல்நிலையங்களின் துணை இல்லாமல் செயல்படமுடியாது.  ஏமாற்றப்பட்டவர் புகார் கொடுக்கும்போதாவது குறைந்தபட்சம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதுபோன்ற, ஃபோன் கால்கள் வரும்போது பணத்தை செலுத்தாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

 

 

Next Story

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்த மத்திய அரசு

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
The central government released the tax distribution to the states

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதி மொத்தம் ரூ. 1,42,122 கோடியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக ரூ. 5,797 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த வரிப்பகிர்வில் அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 25,495 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் மாநிலத்திற்கு ரூ. 14,25 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 11,157 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ. 10,692 கோடி, ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ. 8,564 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிப்பகிர்வு நிதி மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.